சிங்கப்பூர் மூன்று முக்கியச் சமய நிகழ்ச்சிகளுக்குத் தயாராகிக்கொண்டிருந்த வேளையில், வரலாற்றுச் சிறப்புமிக்க தெலுக் ஆயர் பகுதி, பன்முகத்தன்மையின் கலங்கரை விளக்கமாக மாறியது.
பிப்ரவரி 17ல் சீனப் புத்தாண்டு, பிப்ரவரி 18ல் லென்ட் (தவக்காலம்), பிப்ரவரி 19ல் ரமலான் ஆகியவை அடுத்தடுத்து வந்ததால், பண்டிகைக் கால உணர்வு மேலோங்கியது.
ஹியூமேனிட்டி மேட்டர்ஸ் மற்றும் தாவோயிஸ்ட் மிஷன் இரண்டும் பிப்ரவரி 10ஆம் தேதி ‘கொங்சி-லென்ட்-புவாசா’ மின்விளக்கு அலங்கார நிகழ்வுக்கு ஏற்பாடு செய்தன.
ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அபூர்வ சங்கமத்தைக் கொண்டாட ஏறக்குறைய 150 சமயத் தலைவர்கள் ஒன்றிணைந்தனர்.
வரலாற்றுச் சிறப்புமிக்க ‘நல்லிணக்க வீதி’ எனக் கருதப்படும் தெலுக் ஆயர் ஸ்திரீட்டில் கூட்டுறவு, ஒற்றுமை, ஆக்கபூர்வமான சகவாழ்வின் மூலம் சிங்கப்பூரின் பன்முகத்தன்மையின் சாரத்தை இந்த நிகழ்ச்சி மீண்டும் உறுதிப்படுத்தியது.
பாஹாய், பௌத்தம், கிறிஸ்தவம், இந்து, இஸ்லாம், சமணம், யூதம், சீக்கியம், தாவோயிசம், சரதுஷ்டிரம் ஆகிய 10 சமய அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள் ஒன்றிணைந்து அமைதி, நல்லிணக்கம், முன்னேற்றத்திற்காகக் கூட்டுப் பிரார்த்தனை செய்தனர்.
சிங்கப்பூரின் பன்முகத்தன்மை கொண்ட சமூகத்தின் வலிமையை இந்த நிகழ்வு வெளிப்படுத்தியது.
வெவ்வேறு நம்பிக்கைகளைக் கொண்டிருந்தாலும், அனைவரும் ஒருமித்த குரலில் நாட்டின் ஒற்றுமைக்காகவும் மக்களின் நல்வாழ்வுக்காகவும் வழிபட்டது அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தொடர்புடைய செய்திகள்
இது வெறும் சடங்காக மட்டுமன்றி, ‘ஒரே நாடு, ஒரே மனிதநேயம்’ என்ற உயர்ந்த நோக்கத்தை உறுதிப்படுத்தும் தருணமாக அமைந்தது.
தற்காப்பு, நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
இது சிங்கப்பூர் நல்லிணக்கத்தின் வாழ்வியல் எதார்த்தத்தை வெளிப்படுத்தும் ஒரு சிறந்த முயற்சி என்று அவர் வலியுறுத்தினார்.
“இது தற்செயலாக நடந்ததன்று. இது சிங்கப்பூரில் வாழ்வியல் எதார்த்தத்தை வெளிப்படுத்துகிறது. சமய, இன நல்லிணக்கத்தைப் பாதுகாக்கும் நாடு சிங்கப்பூர்,” என்றும் அவர் கூறினார்.
ஹியூமேனிட்டி மேட்டர்ஸ் தலைவரும் தூதருமான திரு ஓங் கெங் யோங், இந்த அரிய வாய்ப்பை எடுத்துரைத்துக் கூட்டத்தினரை வரவேற்றார்.
“மூன்று சமயங்களின் பண்டிகைகளும் முக்கிய நிகழ்ச்சிகளும் ஒரே காலகட்டத்தில் வந்திருப்பது, நாம் எப்படி ஒற்றுமையுடன் இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்துகிறது,” என்றார் திரு ஓங்.
சிங்கப்பூர் தாவோயிஸ்ட் மிஷன் தலைவரான மதிப்பிற்குரிய சமய குரு லீ ஜிவாங், தெலுக் ஆயர் ஸ்திரீட்டின் வரலாற்று முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசினார்.
“இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வீதியில், 200 ஆண்டுகளில் முதல் முறையாக நிகழும் இந்த அரிய தருணத்தைச் சமயங்களுக்கு இடையிலான செயல்பாடாக மாற்ற முடிந்தது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது,” என்றார் அவர்.
இந்துத் தொண்டூழியர் கட்டமைப்பின் தலைவர் மா.கோ.அரசு, “இது ஓர் அருமையான கூட்டு முயற்சி. எனது அமைப்பிலும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடைபெற நான் விரும்புகிறேன்,” என்றார்.
அனைத்துச் சமயங்களுக்கு இடையிலான அமைப்பின் (ஐஆர்ஓ) தலைவர் இளங்கோ குட்டி, “சிங்கப்பூரில் இன, சமய நல்லிணக்கம் தற்செயலாக நிகழ்ந்த ஒன்று இல்லை. அனைத்துச் சமயங்களும் ஒன்றிணைந்து கொண்டாடுவதே சிங்கப்பூர் நல்லிணக்கத்தின் சிறப்பு,” என்று கூறினார்.
ஹியுமேனிட்டி மேட்டர்ஸ் அமைப்பின் குழு இயக்குநர் திலகா கோவிந்தசாமி, 58, “சிங்கப்பூரில் அனைத்துச் சமயங்களையும் மதித்து நடப்பதே நல்லிணக்கத்தின் முக்கியத்துவம்.
“நாம் ஒரு பன்முகக் கலாசார சமூகம் என்பது ஒருபுறமிருக்க, அதைவிட முக்கியமாக ஆக்கபூர்வமான கலாசாரங்களுக்கு இடையிலான உறவை வலுப்படுத்தும் நாடாக இருக்க நாம் பாடுபட வேண்டும்,” என்றார்.
மின்விளக்கு அலங்காரம், சிறார் இல்லங்களுக்குப் பண்டிகைக் கால பொருள் விநியோகத்துடன் நிகழ்வு நிறைவடைந்தது.

