பண்பாட்டு விழிப்புணர்வை வளர்க்க உதவிய மாணவர்களைச் சிறப்பித்த ஆலயம்

பண்பாட்டு விழிப்புணர்வை வளர்க்க உதவிய மாணவர்களைச் சிறப்பித்த ஆலயம்

படம்: ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயம்

22 Nov 2026 - 3:01 pm

2 mins read

ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் சைவ சமயப் பாடசாலை, திறன் வாய்ந்த தங்கள் மாணவர்களை மேடையேற்றிப் பரிசு வழங்கிக் கௌரவித்தது. 

இந்த ஆண்டுக்கான கல்வியாண்டின் நிறைவாக 2026ஆம் ஆண்டுக்கான நவராத்திரிக் கலை விழாவும் பரிசளிப்பு விழாவும் நவம்பர் முதல் தேதி ஆலயக் கலா மண்டபத்தில் நடைபெற்றது.

மாலை 4.45 மணியளவில் மங்கள விளக்கேற்றப்பட்ட பிறகு, தொடக்கநிலை 4 மாணவர்களின் இறை வணக்கமும் தமிழ்த் தாய் வாழ்த்தும் நிகழ்வைத் தொடக்கி வைத்தன. தொடர்ந்து மழலையர் வகுப்புச் சிறார் ‘சம்பந்தருக்கு ஞானப்பால்’ நாடகத்தை மேடையேற்றினர். 

பாலர் பள்ளி 2 மாணவர்கள் ‘பித்தா! பிறைசூடி’, தொடக்கநிலை 1 மாணவர்களின் ‘சிவஜோதி’, தொடக்கநிலை 3 மாணவிகளின் நவதுர்க்கா நடனம்,  தொடக்கநிலை 2 மாணவிகளின் திருவிளக்கு நடனம், தொடக்கநிலை 2, 3 மாணவர்கள் வழங்கிய திருமுறை விண்ணப்பம், தொடக்கநிலை 4 மாணவர்களின் ‘அபிராமி பட்டர்’ வில்லுப்பாட்டு, தொடக்கநிலை 5, 6 மாணவர்களின் கருத்தரங்கம், உயர்நிலை 1, 2 மாணவர்களின் ‘சீர்காழியின் பெருமையும் சிவனின் அற்புதங்களும்’ படத்தொகுப்பு ஆகியவையும் அங்கம் வகித்தன.

நிகழ்வில் தொடக்கநிலை 5 மாணவர் வரதன் அர்ச்சூன் வரவேற்புரை நிகழ்த்தினார். ஆலய மேலாண்மைக் குழு சார்பில் திருவாட்டி சுபோதினி உரையாற்ற, துணை முதல்வர் ச.கோபிநாத் தலைமை உரை நிகழ்த்தினார். 

சிறப்பு விருந்தினர் இணைப் பேராசிரியர் பொன்னுத்துரை குபேரன் சிறப்புரை ஆற்றினார். சிங்கப்பூர் இலங்கைத் தமிழர் சங்கத் தலைவர் அசோகாவும் ஆலய மேலாண்மைக்குழுச் செயலாளர் கபிலன் சோதிநாதனும் கௌரவிக்கப்பட்டனர். 

பாடசாலை ஆசிரியர் சோ.தயாளன் சமர்ப்பித்த ஆண்டறிக்கையில், 46வது திருமுறை மாநாட்டுப் போட்டிகளின் முடிவுகளும் அறிவிக்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்