இவ்வாண்டு தைப்பூசத் திருநாள் பிப்ரவரி 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுவதால் பக்தர்கள் அதிக அளவில் திரள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிராங்கூன் ரோடு ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலுக்கும் தேங் ரோடு அருள்மிகு தெண்டாயுதபாணி கோவிலுக்கும் இடைப்பட்ட 3.2 கிலோமீட்டர் தொலைவு ஊர்வலப் பாதையில், வழக்கத்தைவிட அதிகமான பக்தர்கள் தைப்பூச நாளன்று கூடுவர் என்று இந்து அறக்கட்டளை வாரியமும் இரு கோவில் நிர்வாகங்களும் முன்னதாகத் தெரிவித்திருந்தன.
பக்தர்களுக்குச் சிரமமற்ற, பாதுகாப்பான அனுபவத்தை உறுதிசெய்யும் வகையில், இரு கோவில்களும் கூட்ட நெரிசலைக் கையாளும் நடைமுறைகளை மேம்படுத்தியுள்ளன.
ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில் ஏற்பாடுகள்
ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலில் இவ்வாண்டு பால்குடம், காவடி எடுக்கும் பக்தர்கள் அனைவரும் கண்டிப்பாகத் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரப்படியே அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் தலைவர் செல்வம் வரதப்பன், 67, தெரிவித்தார்.
“ஒவ்வொரு நேர வரம்பிலும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்களே அனுமதிக்கப்படுவர். அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாக மட்டுமே கோவிலுக்கு வரவேண்டும்,” என்று அவர் கூறினார்.
கோவிலுக்குள் போதிய இடவசதி இல்லாத காரணத்தால் மிகவும் முன்னதாகவே வருவது கூட்ட நெரிசலுக்கும் நீண்ட காத்திருப்புக்கும் வழிவகுக்கும் என்று அவர் சொன்னார்.
குடும்பத்தினர், முதியவர்கள், சிறார்கள் கோவிலுக்குள் எளிதாக நுழைவதற்கு வசதியாக, பெருமாள் கோவில் பேருந்து நிறுத்தத்திற்குப் பின்புறம் புதிதாக ‘நுழைவாயில் 4’ திறக்கப்பட்டுள்ளது.
மேலும், இரு கோவில்களாலும் தயாரிக்கப்பட்ட பால்குடங்களைப் பெற்றுக்கொள்ள ஏதுவாக இணையவழி முன்பதிவு வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் எந்தக் கோவிலில் முன்பதிவு செய்தார்களோ, அங்கேயே பால்குடங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று திரு செல்வம் வலியுறுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
ஊர்வலப் பாதையில் தண்ணீர்ப் பந்தல்களின் எண்ணிக்கை 23லிருந்து 25ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், நேரடியாக இசை வழங்கும் மூன்று இடங்களும் அமைக்கப்படவுள்ளன.
இவ்வார நிலவரப்படி, கிட்டத்தட்ட 10,000 பக்தர்கள் பால்குடம் எடுக்கப் பதிவுசெய்துள்ளனர். கடந்த ஆண்டு 300ஆக இருந்த காவடிகளின் எண்ணிக்கையும் இவ்வாண்டு 328ஆக அதிகரித்துள்ளதால், அதற்கேற்ப அலகு குத்தும் தொண்டூழியர் குழுக்களையும் கோவில் நிர்வாகம் விரிவுபடுத்தியுள்ளது.
முதன்முறையாக, இவ்வாண்டு வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளுக்கே நேரில் சென்று ஊர்வலப் பாதைகள், நேரங்கள், பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் குறித்து ஊழியர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
“அந்த நடைமுறை சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளதால் வரும் ஆண்டுகளிலும் இதனைத் தொடரத் திட்டமிட்டுள்ளோம்,” என்று திரு செல்வம் கூறினார்.
அருள்மிகு தெண்டாயுதபாணி கோவில் ஏற்பாடுகள்
இதற்கிடையே, அருள்மிகு தெண்டாயுதபாணி கோவில் நிர்வாகம் தனது கூட்ட நெரிசல் நிர்வாகத் திட்டத்தைச் செம்மைப்படுத்தியுள்ளது.
பொதுமக்களும் பங்கேற்பாளர்கள் அல்லாதவர்களும் கோவிலுக்குள் நுழைவதற்கு, கிளமென்சியூ அவென்யூவிலிருந்து புதிய பாதை ஒன்று திறக்கப்பட்டுள்ளது. ஃபோர்ட் கேனிங் பெருவிரைவு ரயில் நிலையம் வழியாக வருபவர்களுக்கு அப்பாதை வசதியாக அமையும்.
ராஜகோபுரம், தொடர்ந்து பால்குடம், காவடி எடுப்பவர்களுக்கான முக்கிய நுழைவாயிலாகச் செயல்படும் என்றும், ‘நுழைவாயில் 2’ பால்குடம் எடுப்போருக்கான மாற்றுப் பாதையாக இருக்கும் என்றும் கோவில் நிர்வாகக் குழுத் தலைவர் சுப்பிரமணியம் காசி, 68, தெரிவித்தார்.
வளைவு வாசலில் அமைந்துள்ள ‘நுழைவாயில் 5’, கோவிலால் தயாரிக்கப்பட்ட பால்குடங்களைச் சுமப்போர், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான நுழைவுவழியாக இருக்கும்.
“புதிய கிளமென்சியூ அவென்யூ பாதை வழியாகப் பொதுமக்கள், ஊர்வலத்தில் வரும் பக்தர்களுக்கு இடையூறின்றி கோவிலுக்குள் நுழைய முடியும். இது நெரிசலைக் குறைக்கவும் ஒட்டுமொத்த பாதுகாப்பை மேம்படுத்தவும் உதவும் என்று நம்புகிறோம்,” என்று திரு காசி விளக்கினார்.
மருத்துவ ஆதரவும் மேம்படுத்தப்பட்டுள்ளது. அவசர மருத்துவ வாகனங்களின் எண்ணிக்கை மூன்றிலிருந்து ஐந்தாகவும், மருத்துவக் கூடங்களின் எண்ணிக்கை ஐந்திலிருந்து எட்டாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலைச் சிறப்பாகக் கையாள முக்கியத் துறைகளில் தொண்டூழியர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், காவடிகளைக் கழற்றும் இடத்தையும், அன்னதானக் கூடத்தையும் கோவில் நிர்வாகம் விரிவுபடுத்தியுள்ளது.
முக்கியச் சடங்குகள் நடைபெறும் நேரங்களில் பக்தர்கள் பொறுமை காக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். குறிப்பாக, காலை 11.45 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையிலான மகேசுவர பூசை மற்றும் மாலை 4 மணி முதல் 4.45 மணி வரையிலான மயில்வாகன ஊர்வலம் போன்ற சிறப்பு வழிபாடுகளின்போது கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் காத்திருக்கும் நேரம் அதிகரிக்கக்கூடும்.
முக்கியக் குறிப்புகள்
ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலால் தயாரிக்கப்பட்ட பால்குடங்களுக்கு இணையம்வழி ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் அனைத்தும் ஏற்கெனவே முழுமையாகப் பதிவு செய்யப்பட்டுவிட்டன. தெண்டாயுதபாணி கோவிலால் தயாரிக்கப்பட்ட பால்குடங்கள் மட்டுமே இன்னும் இருப்பில் உள்ளன.
காவடிகள் மாலை 5 மணிக்குள் பெருமாள் கோவிலிலிருந்து புறப்பட வேண்டும் என்றும் இரவு 11 மணிக்குள் தெண்டாயுதபாணி கோவிலைச் சென்றடைய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பக்தர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்குமாறும் துணைக்கு வருவோரின் எண்ணிக்கையைக் குறைத்துக்கொள்ளுமாறும் இரு கோவில் நிர்வாகங்களும் கேட்டுக்கொண்டுள்ளன.
மேலும், ஊர்வலப் பாதையில் புகைபிடித்தல், மது அருந்துதல் அல்லது மின் சிகரெட் பயன்படுத்துதல் ஆகியவற்றைத் தவிர்த்து, தைப்பூசத் திருவிழாவின் புனிதத்தைப் பேணிக் காக்குமாறும் பக்தர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

