சிங்கப்பூரர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளதாக தகவல், மின்னிலக்க மேம்பாட்டு, சுகாதார மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி தெரிவித்துள்ளார்.
பிரதமர் லாரன்ஸ் வோங், பிப்ரவரி 18ஆம் தேதி அறிவித்திருந்த இவ்வாண்டின் வரவுசெலவுத் திட்டத்தைத் தொடர்ந்து, மக்கள் கழகமும் நற்பணிப் பேரவையும் மார்ச் 12ஆம் தேதி ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடலில் டாக்டர் ஜனில் பேசினார்.
மற்ற நாடுகளுடன் சிங்கப்பூர் கொண்டுள்ள சிறந்த உறவுமுறை, ராணுவப் பலம், சிறந்த பொருளியல், சமூக ஒற்றுமையைப் பாராட்டினார் டாக்டர் ஜனில். இருப்பினும், இவை தற்செயலாக ஏற்பட்டவை அல்ல என்பதை அவர் நினைவுபடுத்தினார்.
“அடுத்து நமக்கு எது சிறந்தது என்பதைத் தீர்மானிக்க, ஒரு சமூகமாக நாம் ஒன்றுபடுவது முக்கியம்,” என்று வலியுறுத்தினார் டாக்டர் ஜனில்.
சட்ட, போக்குவரத்து துணை அமைச்சர் முரளி பிள்ளை, செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயர் இருவரும் டாக்டர் ஜனிலுடன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
இதர இந்திய அமைப்புகளிலிருந்து அடித்தளத் தொண்டூழியர்கள் உட்பட ஏறக்குறைய 150 பேர் கலந்துரையாடலில் பங்கேற்றனர். சுகாதாரம், கல்வி, மூத்த குடிமக்கள் சார்ந்த கருத்துகளை வெளிப்படுத்த இந்தக் கலந்துரையாடல் உதவியது.
இதுபோன்ற கலந்துரையாடல்கள், சமூகத்தினரிடமிருந்து கருத்துகளைப் பெற அடிமட்டத் தலைவர்களுக்குப் பெரிதும் உதவுகிறது என்றார் திரு விக்ரம் நாயர்.
“அனைத்து கருத்துகளும் முறையாகக் கவனிக்கப்படுகின்றன,” என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
தமிழ் ஆற்றலை எவ்வாறு மேலும் மேம்படுத்துவது என்ற கேள்வியை முன்வைத்தார் சிங்கப்பூர் நிர்வாகக் கல்விக்கழக மாணவர் பச்சைமுத்து விமல், 23.
“தாய்மொழியை வெறும் பாடத்திட்டத் தேவையாகக் கருதாமல் அதை சார்ந்த பாரம்பரியம், மரபு, கலாசாரத்தை போற்றும் அளவுக்கு சமூக அளவில் எவ்வாறு சில முன்முயற்சிகளை அதிகரிக்கலாம் என்று தெரிந்துகொள்ள விரும்பினேன்,” என்றார் அவர்.

