சிங்கப்பூர்க் கலை ரசிகர்கள் பொதுவாகப் பாரம்பரிய நடனங்கள், இசை நிகழ்ச்சிகள், நாடகப் படைப்புகள் என பலவற்றைப் பார்த்து ரசித்திருப்பர்.
ஆனால், இயல், இசை, நாடகம் என முத்தமிழின் கலை வடிவங்களையும் ஒன்றாகப் படைக்கும் தெருக்கூத்தை நேரடியாகப் பார்த்திருப்பதற்கான வாய்ப்புகள் அரிது.
‘ஆட்டம்’ நிறுவனத்தின் ‘நம் மரபு’ தொடர், சிங்கப்பூர் ரசிகர்களுக்கு அவ்வாய்ப்பை உருவாக்கித் தந்தது.
ஜூன் 8 முதல் 12ஆம் தேதி வரை அனைத்துக் கலாசார நாடகப் பள்ளி (Intercultural Theatre Institute) வளாகத்தில் பெரியோருக்கான தெருக்கூத்துப் பயிலரங்கு நடத்தப்பட்டது.
பயிலரங்கைப் புரிசை துரைசாமி கண்ணப்பத் தம்பிரான் பரம்பரை தெருக்கூத்து மன்றத்தின் தலைவர் பழனி முருகன் வழிநடத்தினார்.
அதைத் தொடர்ந்து, ஜூன் 14ஆம் தேதி, பங்கேற்பாளர்களின் தெருக்கூத்துப் படைப்பு இந்திய மரபுடைமை நிலையத்தில் நடத்தப்பட்டது.
பார்வையாளர்களால் அரங்கு நிரம்பி வழிந்த நிலையில், பலரும் நின்றவாறே முழுப் படைப்பையும் கண்டு ரசித்தனர்.
மகாபாரதத்தில் இடம்பெறும் திரௌபதியின் துகில் உரிதல் காட்சியைக் கருத்துமிகு பாடல்கள், துடிப்புமிகு நடனம், உணர்ச்சிமிகு பாவனை ஆகியவற்றுடன் நடிகர்கள் கண்முன் நிறுத்தினர்.
தொடர்புடைய செய்திகள்
பயிலரங்கில் பங்கேற்ற திருமதி அனுஷா, கட்டியக்காரன் வேடத்திலும் குமாரி சுப்பிரமணியன் லாவண்யா, திரௌபதி கதாபாத்திரத்திலும் நடித்தனர்.
துரியோதனனாகப் பயிற்றுவிப்பாளர் பிரகாஷ் ராஜும் துச்சாதனனாக ஆசான் பழனி முருகனும் நடித்தனர்.
எஞ்சிய பங்கேற்பாளர்கள் பாடகர்களாக நடிகர்களின் வசனங்களை எதிரொலித்தனர்.
புதிய அறிமுகம்
தெருக்கூத்துக் கலை குறித்த அறிமுகம் ஏதுமில்லாவிட்டாலும் ஆர்வத்துடன் பயிலரங்கில் கலந்துகொண்டதற்குச் சிறந்த பலன் கிடைத்ததாக லாவண்யா, 20, கூறினார்.
“நான் இந்தப் பயிலரங்கில் பெரிதாக எதிர்பார்ப்புகள் இல்லாமல்தான் கலந்துகொண்டேன். ஆனால், பல புதிய திறன்களையும் அனுபவங்களையும் பெற்றதில் மட்டற்ற மகிழ்ச்சி,” என்று அவர் கூறினார்.
குறிப்பாக, தெருக்கூத்தில் பாலின வேறுபாடின்றி கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைப்பது சுவாரசியமாகத் தோன்றியதென அவர் குறிப்பிட்டார்.
பங்கேற்பாளர்கள் கலை வடிவத்தை நன்கு கற்றுத் தேர உதவும் வகையில், பயிற்சிகள் ஒரு நாளுக்கு நான்கு மணி நேரம் நீடித்தன.
“தெருக்கூத்தும் இன்றைய நாடக வடிவமும் வெகுவாக மாறுபட்டன. பங்கேற்பாளர்கள் பலருக்கு நாடக அனுபவம் இருந்தாலும், தெருக்கூத்தை ஆழமாகக் கற்றுக்கொள்ள உதவும் வகையில் பயிலரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது,” என்று கூறினார் ‘ஆட்டம்’ அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி ஆ.விஷ்ணு வர்தினி, 22.
“இதுவரை ‘நம் மரபு’ தொடரில் வெவ்வேறு இந்தியப் பாரம்பரிய நாட்டியக் கலைகளைச் சிங்கப்பூரர்களுக்கு அறிமுகப்படுத்தி வந்துள்ளோம். தெருக்கூத்தை அறிமுகப்படுத்தப் பல நாள்களாகத் திட்டமிட்டோம். அதை இவ்வாண்டு செய்ய முடிந்ததில் மகிழ்ச்சி,” என்று அவர் கூறினார்.
பயிலரங்கில் தமிழர்கள் மட்டுமல்லாது பிற மொழியினரும் இனத்தவரும் கலந்துகொண்டது நெகிழ்ச்சியளித்ததாகவும் அவர் சொன்னார்.
மொழித் தடையைக் கடந்த கலை ஆர்வம்
அவ்வகையில், மலையாளியான திரு அவினாஷ் ராய், 34, இந்தப் பயிலரங்கில் பங்கெடுத்து, தெருக்கூத்து குறித்து முதல்முறையாகக் கற்றறிந்தார்.
அனைத்துக் கலாசார நாடகப் பள்ளியின் முதலாம் ஆண்டு மாணவரான அவர், விடுமுறையின்போது நேரத்தைப் பயனுள்ள வகையில் செலவிட, ஆசிரியர்களின் ஊக்குவிப்புடன் இப்பயிலரங்கில் கலந்துகொண்டதாகக் கூறினார்.
“மொழி புரியாததால் இந்தக் கலை வடிவத்தைக் கற்க தொடக்கத்தில் மிகவும் கடினமாக இருந்தது. தாளத்தைச் சரியாகப் பின்பற்ற முடிந்தாலும், சொற்களின் பொருள் புரியவில்லை,” என்று அவர் கூறினார்.
“ஆனால், என்னைப் போன்றோர்க்கு உதவ மொழிபெயர்ப்பாளர்கள் பலர் இருந்தனர். அதனால், எளிதாகக் கற்றுக்கொள்ள முடிந்தது,” என்றார் அவர்.
தமது பள்ளிப் பாடத்திட்டத்தின்கீழ் கற்கும் பாடங்களிலிருந்து இந்தப் பயிலரங்கு முற்றிலும் வேறுபட்டு இருந்ததாக அவினாஷ் சொன்னார்.
“பயிற்சியின்போது நேரம் போனதே தெரியவில்லை. முழுமையான அனுபவமாக அமைந்தது. சுருக்கமாகக் கூற வேண்டுமெனில், ஒவ்வொரு நாளும் நான்கு மணி நேரம் குருசேத்திரப் போரில் பங்கேற்றது போலவே இருந்தது,” என்று சிரித்தவாறு கூறினார் அவினாஷ்.
புதுவித கற்றல்
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் தெற்காசியக் கல்விகள் துறையில் பணிபுரியும் டாக்டர் வித்யா சுப்ரமணியம், 37, இந்தப் பயிலரங்குவழி மீண்டும் ஒரு மாணவராக மாறியது சிறந்த அனுபவமாக அமைந்ததெனக் கூறினார்.
“மாணவர்களுக்குக் கற்பிக்கும் நிலை மாறி, இங்கு நான் கற்றுக்கொள்ள நிறைய பாடங்கள் இருந்தன.
“அதுமட்டுமன்றி, வகுப்பறைகளில் அமர்ந்து மின்னிலக்கச் சாதனங்கள்வழி கற்காமல், ஆடி, பாடி, நடித்துக் கற்க முடிந்தது புத்துணர்ச்சியளிக்கும் விதமாக இருந்தது,” என்றார் அவர்.
பெரியோருக்கான இந்தப் பயிலரங்கில் மொத்தம் 21 பேர் கலந்துகொண்டனர்.
சிறியோருக்கான சிறப்பு அனுபவம்
பெரியோருக்கு மட்டுமன்றிச் சிறார்க்கும் சிறப்புப் பயிலரங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஜூன் 9ஆம் தேதியிலிருந்து 11ஆம் தேதி வரை உட்லண்ட்ஸ் சமூக மன்றத்தில் இந்தப் பயிலரங்கில் சிறார் 15 பேர் கலந்துகொண்டனர்.
ஜூன் 13ஆம் தேதி அதே சமூக மன்றத்தில் அச்சிறுவர்கள் தங்கள் நிகழ்ச்சியைப் படைத்தனர்.
பயிலரங்கில் பங்கேற்ற எவர்கிரீன் தொடக்கப்பள்ளி மாணவர் ஜெயபிரகாசம் ஜோஷித், 12, அறிமுகமில்லாத கலை வடிவத்தைக் கண்முன் பார்த்து, அனுபவிக்க முடிந்தது மகிழ்ச்சியளித்ததாகக் கூறினார்.
“நான் தெருக்கூத்தைத் தமிழ்நாட்டைக் கடந்து வேறு எங்கும் பார்த்ததுமில்லை கேட்டதுமில்லை. சிங்கப்பூரில் அக்கலை வடிவத்தில் நானே ஈடுபடுவது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.” என்றார் அவர்.
ஆதிக்கலையின் முக்கியத்துவம்
அவ்விரு பயிலரங்குகளையும் வழிநடத்திய திரு பழனி முருகன், அது தமக்குச் சிறந்த, அர்த்தமுள்ள அனுபவமாக அமைந்ததெனக் கூறினார்.
“இந்தக் கலையை முழுமையாகக் கற்பிக்க 35 நாள்கள் தேவைப்படும். ஆனால், முடிந்தவரை அனைத்துப் பங்கேற்பாளர்களுக்கும் புரியும் வகையில், எளிமையாக மூன்றிலிருந்து ஐந்து நாள்களுக்குள் கற்பிக்க முயற்சி செய்தோம்,” என்று அவர் குறிப்பிட்டார்.
தமிழர்கள் தொடர்ந்து தெருக்கூத்து பற்றித் தெரிந்துகொள்வதும் கண்டுகளிப்பதும் அவசியமென்று அவர் வலியுறுத்தினார்.
“தெருக்கூத்து நமது ஆதிகாலத்துக் கலை வடிவம். அடையாளத்திற்கு எவ்வாறு மொழி முக்கியமோ, அதேபோல கலாசாரத்திற்கு இத்தகைய கலை வடிவங்கள் முக்கியம்,” என்று திரு பழனி முருகன் கூறினார்.
‘நம் மரபு’ தொடர்வழி இத்தகைய பாரம்பரிய இந்தியக் கலை வடிவங்களைச் சிங்கப்பூருக்குத் தொடர்ந்து அறிமுகப்படுத்த முனைவதாக ‘ஆட்டம்’ அமைப்பு தெரிவித்தது.

