வள்ளலாரைப் போற்றும் விழா

வள்ளலாரைப் போற்றும் விழா

படம்: இணையம்

04 Oct 2026 - 3:06 pm

2 mins read

சிங்கப்பூர் இந்து சபை, சிங்கப்பூர் திருவருட்பிரகாச வள்ளலார் நற்பணி மன்றம் ஆகிய அமைப்புகள் இணைந்து ‘திருவருட்பிரகாச வள்ளல் பெருமானின் 203வது வருவிக்கவுற்ற திருநாள் விழாவை’ கேலாங் ஈஸ்ட் ஸ்ரீ சிவன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 4) மாலை 5.30 மணிக்கு நடத்தவுள்ளன.

1823ஆம் ஆண்டு பிறந்த சிதம்பர ராமலிங்க சுவாமிகள் எனப்படும் வள்ளலார், சன்மார்க்கம், ஜீவகாருண்யம், ஆன்மநேய ஒருமைப்பாடு, கொல்லாமை போன்ற உயரிய நெறிகளை உலகிற்கு உணர்த்தியவர். 

“அழியா அருட்செல்வத்தை வாரி வழங்கியவர் திருவருட்பிரகாச வள்ளலார் சிதம்பரம் இராமலிங்க சுவாமிகள்,” என்று இந்து சபையின் தலைவர் ஜோதிநாதன் தெரிவித்தார்.

வள்ளலாரின் கொள்கைகளையும் அவர் இயற்றிய திருஅருட்பா எனும் ஆன்மிக அனுபவத்திரட்டையும் பற்றி சிங்கப்பூர்வாழ் தமிழ் மக்களுக்கு எடுத்துரைக்கும் நோக்கில், கடந்த 38 ஆண்டுகளாக இந்த விழா தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

நாடாளுமன்ற முன்னாள் நியமன உறுப்பினர் இரா. தினகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளும் இந்த நிகழ்ச்சியில் இரண்டு முக்கியத் தலைப்புகளில் சிறப்புரைகள் இடம்பெறவுள்ளன. ஞாயிற்றுக்கிழமை இரவு 7.00 மணிக்கு, முனைவர் எம்.எஸ்.ஸ்ரீலட்சுமி ‘வள்ளலாரும் சமயப் பொதுமையும்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார். 

அதனைத் தொடர்ந்து டாக்டர் சிவக்குமார் ஆறுமுகம் ‘சைவ உணவும் நிறைவான சத்துகளும்’ என்ற தலைப்பில் தெளிவுரையாற்றுகிறார்.

இந்த நிகழ்ச்சி மாலை 5.30 மணிக்கு சிவனடியார்களின் திருமுறைப் பாடல்களுடன் தொடங்கும். பின்னர் திருவருட்பா இசை வழிபாடு நடைபெறும். மாலை 6.15 மணிக்கு வரவேற்புரையைத் தொடர்ந்து, வள்ளலார் அருள்வழியில் சிறார் சிறப்பு நிகழ்ச்சிகள் அரங்கேறும். விழாவின் நிறைவாக இரவு 8.15 மணிக்கு அன்னதானம் வழங்கப்படும்.

இதில் கலந்துகொள்ள அனுமதி இலவசம். மேல்விவரங்களுக்குத் திரு அருள் (93886324), திரு பழனி (94232309), திரு ஜோதிநாதன் (81183430) ஆகியோரைத் தொடர்புகொள்ளலாம். கூடுதல் தகவல்களைப் பெற thesingaporehindusabai@gmail.com.sg என்ற மின்னஞ்சல் முகவரியையும் நாடலாம்.

குறிப்புச் சொற்கள்