தவறான பாதையில் செல்வதால் ஒருவரது வாழ்க்கையே புரட்டிப் போடப்படலாம் என்பதை உணராமல் சிலர் குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
இதனால், தங்கள் குடும்பத்தையும் நிம்மதியையும் தொலைத்துவிட்டு சிறையில் அடைக்கப்படும் கவலைக்குரிய நிலைக்கும் ஆளாவர்.
இருப்பினும், அதன் பிறகு மனந்திருந்தி வரும்போது குடும்பமும் சமூகமும் அரவணைக்கும் கரங்களாக இருக்க வேண்டியது அவசியம்.
அவ்வாறு தங்களின் வாழ்க்கைப் பாதையைச் சீரமைத்துக்கொண்ட நால்வரைச் சந்தித்தது தமிழ் முரசு.
சமையற்கலையால் பிறந்த தெளிவு
நான்கு முறை சிறை வாசலை மிதித்தவர் கார்த்திக் மரியோ, 38.
இவர் 15 வயதில் கலவரத்தில் ஈடுபட்டபோது, முதன்முறையாக ‘பாய்ஸ் டவுன்’ இல்லத்துக்கு அனுப்பப்பட்டார்.
கல்விப் பயணம் தடைப்பட்டதால் கார்த்திக் தேசிய சேவைக்குப்பின் சில்லறை வேலைகளில் இருந்தார். விரைவாகப் பணம் ஈட்ட அவர் குறுக்கு வழி நாடினார். உரிமமின்றி கடன் அளிக்கும் தொழிலில் இறங்கினார்.
“மற்றவர்கள் என்னைப் பார்த்து பயப்பட வேண்டும் என்பதற்காகக் குண்டர் கும்பலில் சேர்ந்தேன்,” என்றார் கார்த்திக்.
தொடர்புடைய செய்திகள்
முன்பு புக்கிட் பாஞ்சாங் கடைத்தொகுதியில் நடந்த கொடூர கலவரத்தில் ஈடுபட்டவர் கார்த்திக். வீட்டில் மூத்த மகனான இவருக்கு இரண்டு தங்கைகள்.
ஒற்றைப் பெற்றோரிடம் வளர்ந்த அவர், தமது பதின்ம வயதில் தங்கைகளைக் கவனித்துக்கொண்டு வீட்டுக்குப் பொறுப்பான மகனாக இருந்தார்.
அப்போது அவர் சமையலில் அதிகம் ஈடுபடத் தொடங்கினார்.
“என் அம்மா என்னைக் கண்டிப்பாக வளர்க்கவில்லை. வழிகாட்ட யாரும் எனக்கு இல்லை. வெளியில் நான் என்ன செய்தாலும் வீட்டில் நான் அதைக் காட்டிக்கொள்ளவில்லை,” என்று கார்த்திக் சொன்னார்.
சிறைக்குச் செல்வதற்கு முன்புதான் கார்த்திக் தற்போது தமக்கு மனைவியாக இருப்பவரைச் சந்தித்தார்.
அப்போது அவருக்கு ‘ஹெச்சிஎஸ்ஏ’ இடைநிலை மறுவாழ்வு இல்லம் மூலம் சமையற்கலைப் பயிற்சி வகுப்புக்குச் செல்ல வாய்ப்பு கிட்டியது.
பயிற்சி வகுப்புக்குப் பிறகு அவருக்குச் சமையல் கலையில் பட்டயம் படிக்க வாய்ப்பளிக்கப்பட்டது. மனைவி தந்த ஊக்கத்தால் அவர் அதையும் படிக்கத் தொடங்கினார்.
பயிற்சி சமையல் கலை வல்லுநராக இருந்த கார்த்திக், படிப்படியாக இளம் சூஸ் சமையற்கலை (sous chef) வல்லுநர் ஆனார். தற்போது அவர் ஒரு தலைமைச் சமையல் வல்லுநராக உள்ளார்.
“என் மனைவிதான் எனது மாற்றத்திற்கு முக்கியக் காரணம். இந்தச் சமையற்கலை அதற்கடுத்து என்னை உற்சாகப்படுத்தி வருகிறது. வேலைக்குச் செல்ல ஆர்வம் காட்டாமல் இருந்த என்னை சமையல் கலை மாற்றியது,” என்று கார்த்திக் கூறினார்.
போதை வேண்டாம்; மேம்பாடு வேண்டும்
விக்னேஸ்வரன் ஐந்தாண்டுகளுக்கு முன்னர் போதைப் பழக்கத்திற்கு ஆளானார். வெளியில் அதிகம் செல்லாத அவருக்கு, போதைப்பொருள் ஒரு நண்பனாக அமைந்தது.
இளம் பருவத்தில் குண்டர் கும்பல்களுடன் தொடர்பு, அதில் உள்ளவர்களுடன் நேரத்தைச் செலவழித்தல் என அவர் வீட்டிற்குச் சென்ற நேரம் மிகக் குறைவு.
தீய பழக்கங்களை அந்த நண்பர்களிடமிருந்து கற்றுக்கொண்ட விக்னேஸ்வரன், போதைப் பழக்கத்தையும் கற்றுக்கொண்டார்.
“நண்பர்களுடன் சிரித்துப் பழகுவது போல என்னால் என் வீட்டில் இருக்க முடியாது. அப்போது எனக்கு நண்பர்கள்தான் பெரிதாகத் தோன்றினார்கள். வீட்டிலும் என்னை யாரும் அதிகம் கண்டுகொள்ளவில்லை,” என்றார் விக்னேஸ்வரன்.
குண்டர் கும்பலில் இருந்தபோது பள்ளி முடிந்து மற்ற மாணவர்களுடன் சண்டைகளில் ஈடுபட்டார் விக்னேஸ்வரன்.
இரண்டு பிள்ளைகளுக்குப் ஒற்றைப் பெற்றோராக உள்ள விக்னேஸ்வரன், தனிமையில் இருந்தபோதெல்லாம் போதை மூலம் இன்பம் கண்டார். இதுவரை மூன்று முறை சிறைக்குச் சென்றுள்ள அவர், 18 வயதில் திருமணம் செய்துகொண்டு 19 வயதில் ஒரு மகனுக்குத் தந்தையானார்.
திருமண வாழ்க்கை ஒரு முடிவுக்கு வந்த பிறகு குழந்தைகளின் பராமரிப்பு விக்னேஸ்வரனிடம் ஒப்படைக்கப்பட்டது.
“சிறையில் இருந்தபோது என் இரு பிள்ளைகளுடன் என் தாயார் என்னைப் பார்க்க வந்தார். எனக்காக தங்கள் நேரத்தை ஒதுக்கி பார்க்க வந்தார்கள்,” என்று உணர்ச்சி பொங்க விக்னேஸ்வரன் சொன்னார்.
முன்னாள் குற்றவாளியை அவரின் குடும்பம் ஏற்றுக்கொண்டாலும் சமூகத்தில் மீண்டும் ஒருங்கிணைக்கப்படுவது கடினம் என்று எண்ணிய விக்னேஸ்வரன், சிறைலியிலிருந்து வெளியே வந்தவுடன் இந்து அறக்கட்டளை வாரியத்தின் ஆஷ்ரம் இடைநிலை மறுவாழ்வு இல்லத்தை நாடினார்.
தற்போது 40 வயதில் தளவாட நிறுவனத்தில் வசதிகள் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றிவரும் அவர், தம் பிள்ளைகளுடன் அதிக பிணைப்புடன் வாழ விரும்புகிறார்.
கடமை உணர்ந்து செயல்படும் தாய்
ஏழு பிள்ளைகளுக்குத் தாயாரான மிளா, 44, தம் பிள்ளைகளுடன் அதிக நேரம் செலவிடாமல் இருந்ததை எண்ணி இன்னமும் வருந்துகிறார்.
தாய்ப் பாசம் இவருக்கு இளம் வயதில் அதிகம் கிடைக்கவில்லை. இளம் பருவத்தில் மிளா தம் பாட்டியை அதிகம் நம்பி இருந்தார். பாட்டியின் மறைவுக்குப் பிறகு வாழ்க்கை தலைகீழாகிப் போனது.
மிளா 13 வயதில் வீட்டை விட்டு வெளியேறினார். பள்ளி பருவத்திலேயே புகைப்பிடிக்கக் கற்றுக்கொண்டார்; குண்டர் கும்பலில் சேர்ந்து சண்டைகளில் ஈடுபட்டார்; போதைப் பழக்கத்துக்கும் அடிமையானார்.
மனவுளைச்சல் ஏற்படும்போதெல்லாம் போதை அவருக்கு நிவாரணத்தை அளித்தது. அதனால், அவர் இருமுறை சிறைக்குச் சென்றார்.
ஒன்றன்பின் ஒன்றாக அவருக்குப் பிள்ளைகள் பிறக்கத் தொடங்கிய பிறகு மிளா அவர்களைக் கவனிக்க முடியாத சூழல் உருவானது. இதனால், பிள்ளைகள் வளர்ப்புப் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் பணம் ஈட்ட மிளா சில காலம் பாலியல் தொழிலில் ஈடுபட்டார். முதல் சிறை தண்டனைக்குப் பிறகு வெளியில் வந்தபோது மிளா தாம் செய்த தவறுகளைப் பெரிதாக நினைத்துப் பார்க்கவில்லை.
“இரண்டாவது முறை நான் வெளியே வந்த பிறகுதான் வாழ்க்கையைப் பற்றி நான் யோசிக்கத் தொடங்கினேன். என் பிள்ளைகளின் நிலை என்னவாகும், யார் அவர்களைக் கரை சேர்ப்பார்கள் எனப் பல கேள்விகள் என்னுள் எழுந்தன,” என்று கூறியபோது மிளா கண்கலங்கினார்.
இரண்டாவது முறை சிறையிலிருந்து வந்த பிறகு தம்முடைய ஏழு பிள்ளைகளும் வளர்ப்புப் பெற்றோர்களின் வீட்டில் துன்புறுத்தப்பட்டதாக அறிந்துகொண்டார் மிளா.
“என் ஏழு பிள்ளைகளும் இப்போது என்னுடன்தான் இருக்கிறார்கள். பிள்ளைகளுக்காகத் திருந்தி வாழ வேண்டுமென்று முடிவெடுத்தேன். என் பிள்ளைகளுக்கு நான் சிறந்த உதாரணமாக இருக்க வேண்டும். அவர்களைக் கைவிடமாட்டேன்,” என்று மிளா சொன்னார்.
“நான் பாலியல் தொழிலில் ஈடுபட்டதால் பலரும் என்னை விட்டு விலகினர். என் நெருங்கிய நண்பர்கள் அவர்களின் திருமணங்களுக்குக்கூட என்னை அழைக்கவில்லை. என்னால் என் பிள்ளைகளைப் பலரும் தவறான கோணத்தில் பார்த்தார்கள்,” என்று கவலையுடன் கூறினார் மிளா.
தற்போது உணவுத் துறையில் உள்ள மிளா, முழுநேரமாகச் சரக்குத் துறையில் பணியாற்றி வருகிறார்.
கைதியிலிருந்து முதுநிலைப் பட்டதாரி
இளம் வயதிலிருந்தே தம் குடும்பத்தாருடன் ஒட்டாமல் இருந்தவர் டேவிட் கிங் துரைராஜன், 42.
இதனால் உயர்நிலைப் பள்ளிக்குச் சென்ற பிறகு தீய பழக்கமுடைய நண்பர்கள் அவருக்கு உலகமானார்கள்.
இரண்டு முறை சிறை வாசலை எட்டிப் பார்த்து, மொத்தம் 18 பிரம்படிகள் விதிக்கப்பட்டு இன்று திருந்தியவராக டேவிட் வாழ முனைகிறார்.
பள்ளிப் பருவத்தில் கல்வியில் அதிகம் நாட்டமில்லாமல் குண்டர் கும்பலில் சேர்ந்து சண்டைகளில் ஈடுபடுதல், போதைப்பொருள் உட்கொள்ளுதல், மது அருந்துதல் போன்றவற்றில்தான் அதிகம் ஈடுபட்டு வந்தார் அவர்.
ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு பணம் ஈட்டுவதற்காக டேவிட் சில்லறை வேலைகள் செய்து வந்தார்.
குண்டர் கும்பல் சண்டையில் 40 வயது ஆடவர் ஒருவரது இதயத்தைப் பட்டாக்கத்தியால் குத்திய சம்பவத்தை நினைவுகூர்ந்த டேவிட், “செய்த தவற்றை எண்ணி நான் அந்த நேரத்தில் வருந்தவில்லை. நான் குண்டர் கும்பலின் பெயரைக் காப்பாற்ற வேண்டுமென்ற எண்ணத்தில்தான் இருந்தேன். நான் மொத்தம் ஒன்பது குண்டர் கும்பல்களில் இருந்திருக்கிறேன்,” என்றார்.
ஒருமுறை தேக்கா சந்தை அருகில் ஏற்பட்ட கொடூரமான குண்டர் கும்பல் சண்டையில் தம் உயிர்த்தோழன் கொல்லப்பட்ட சம்பவம், டேவிட் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டது.
தமக்கு நெருக்கமான நண்பனை எதிரிக் குண்டர் கும்பலில் உள்ளவர்கள் கொன்றதை ஏற்றுக்கொள்ள முடியாமல் பல நாள்கள் தவித்த டேவிட், பழிவாங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
முதல்முறை விதிக்கப்பட்ட சிறைத் தண்டனைக்கும் இரண்டாவது சிறை தண்டனைக்கும் இடையிலான மூன்று மாத இடைவெளியில் டேவிட் மீண்டும் தீய செயல்களில் இறங்கினார்.
“கோபம் என் கண்களை மறைத்துவிட்டது. என் நண்பன் கொல்லப்பட்டபோது அவருக்கு 19 வயதுதான். அவர் எனக்கு மிகவும் நெருக்கம். அவருடைய பெயரைக்கூட நான் என் உடலில் பச்சை குத்தி இருக்கிறேன்,” என்று உணர்ச்சிபொங்க டேவிட் சொன்னார்.
“ஆனால், சிறைக்கு இரண்டாவது முறை சென்ற பிறகுதான் பலவற்றைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தேன். வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வேண்டிய காலகட்டத்தில் நேரத்தை வீணடிப்பதால் ஒரு பயனும் பெறவில்லை,” என்று டேவிட் கூறினார்.
கல்விப் பாதையில் அடி எடுத்து வைத்தால்தான் சிறையிலிருந்து வெளியே வந்ததும் தம்மால் ஒரு நல்ல வேலைக்குச் செல்ல முடியும் என்ற நோக்கில் டேவிட் படிப்பதற்கான வசதிகளைக் கொண்ட தானா மேரா சிறைச்சாலைக்குச் சென்றார்.
“தானா மேரா சிறைச்சாலையில் அந்த எதிரிக் குண்டர் கும்பல் உறுப்பினர்கள் இருந்தனர். ஆனால், அவர்களுடன் வம்பு தும்பு ஏதும் செய்யாமல் நான் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தினேன்,” என்று டேவிட் தெரிவித்தார்.
இன்று டேவிட் ஒரு முதுநிலை பட்டதாரி. இரண்டு மகள்களுக்குத் தந்தையான அவர், மற்றவர்களுக்கு ஒரு வாழ்க்கை வழிகாட்டியாக உள்ளார்.
“இளம் வயதில் என் அப்பா என்னை அடித்துத் திட்டியது என் நினைவில் இன்றும் உண்டு. யாரும் என்னைப் பெரிதாகப் பாராட்டியதில்லை. வாழ்க்கை வழிகாட்டியாக நான் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் என் அனுபவத்தை ஒரு பாடமாகச் சொல்லி அவர்கள் புரியும் சிறு சிறு வெற்றிகளையும் பாராட்டி வருகிறேன்,” என்று டேவிட் சொன்னார்.
பாதை தவறக் காரணம்
பெரும்பாலான கைதிகள் தங்களின் குழந்தைப் பருவத்தில் பிரச்சினைகளை எதிர்நோக்கியதன் காரணத்தால் எதிர்காலத்தில் பாதிக்கப்படுவதாக சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டு சங்கத்தின் (சிண்டா) தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன் தெரிவித்தார்.
“அவர்கள் வளரும்போதே ஒரு மாறுபட்ட சூழலில் இருப்பதால் அதன் தாக்கம் அவர்களுக்குப் பின்னாளில் தெரிகிறது. கைதிகளின் குடும்பத்திலேயே பலர் சிறைக்குச் சென்று வந்திருப்பார்களாக இருக்கலாம். இது ஒரு தீய சுழற்சி போன்றது,” என்றார் திரு அன்பரசு.
சில கைதிகள் சிறையிலிருந்து விடுதலையான பிறகும் மீண்டும் தவறு செய்வதற்கு, அவர்களால் சமூகத்துடன் ஒருங்கிணைய முடியாமல் போவதே காரணம் என்று இந்து ஆலோசனை வாரியத்தின் தலைவர் க.செங்குட்டுவன் கூறினார்.
“பல ஆண்டுகள் சிறையில் இருந்த பிறகு வெளி உலகத்துக்குத் திரும்பும்போது கைதிகளுக்கு எல்லாம் புதிதாகத் தெரியும். அந்த மாற்றங்களுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்வதற்குப் பதிலாக சிறையிலேயே இருந்துவிடலாம் என்பது கைதிகள் பலரின் எண்ணமாக உள்ளது,” என்றார் திரு செங்குட்டுவன்.
சமூக ஒத்துழைப்பு அவசியம்
விடுதலைக்குப் பிறகு சமூகத்துக்குள் நுழையும் முன்னாள் குற்றவாளிகள் தொடக்கத்தில் தடுமாறுவது இயல்பே. அவர்களுக்குக் கைகொடுத்து தூக்கிவிடுவது ஒரு சமூகத்தின் பொறுப்பாகும்.
மனநல ஆலோசனை வழங்குதல், வேலை தேடித் தருதல், அவர்களின் குடும்பத்தாருக்கு உதவுதல் எனப் பலவகைகளில் உதவி அளிப்பதற்கான தளங்கள் இருக்கின்றன.
திரு செங்குட்டுவன் சிறைக் கைதிகளுக்கு இந்து சமயப்படி மனநலன் ஆலோசனை வழங்கி வருகிறார். பல ஆண்டுகளாக தொண்டில் ஈடுபட்டு வரும் அவர், ஆன்மிகத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தி கைதிகளை நல்வழிப்படுத்த முயன்று வருகிறார்.
மேலும், முன்னாள் குற்றவாளிகளுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் கைகொடுக்கும் விதமாகப் பல திட்டங்களை சிண்டா வழங்கி வருகிறது. சிறைக் கைதிகளுக்கு உதவிக்கரம் நீட்ட விரும்புவோர் சமூகச் சேவை அமைப்புகள், சிண்டா, சிங்கப்பூர் மஞ்சள் நாடா அமைப்பு ஆகியவற்றை ஆதரவுக்கு அணுகலாம்.