இல்லப் புதுப்பிப்பில் முத்திரை பதிக்கும் இந்தியர்கள்

இல்லப் புதுப்பிப்பில் முத்திரை பதிக்கும் இந்தியர்கள்

6 mins read
7edbf718-9b74-493d-931b-de27a6117e09
‘ரோம்ஸ் இன்டீரியர்’ நிறுவனம் வடிவமைத்த வீடு. - படம்: கிஷ்ஸன் சில்வானஸ் பிலிப்

நம்மில் பலர் வாழ்வில் அதிக நேரம் செலவிடும் ஓர் இடம் அவரவர் இல்லமாகத்தான் இருக்கும். பெரியதோ சிறியதோ, உள்ளே நுழைந்தவுடன் அமைதியைத் தரும் இடமாக அது இருக்கவேண்டும் என்பதுதான் பெரும்பாலாரின் எதிர்பார்ப்பு.

சிங்கப்பூர் வீடுகளின் அளவு அண்மை ஆண்டுகளில் சிறியதாகி வந்தாலும் கண்கவர் இடமாக அவற்றை மாற்றுவதில் சிங்கப்பூரர்களுக்கு இருக்கும் ஆவல் சிறிதும் குறையவில்லை.

அதனைக் கருத்தில்கொண்டு, சிங்கப்பூரர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கு முன்னுரிமை அளித்து வடிவமைப்புத் துறையில் கால்பதித்துள்ளனர் இந்தியர் மூவர்.

கடந்த பத்தாண்டுகளாகச் சிங்கப்பூரில் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களின் தேவையை நிறைவேற்றி வருகிறார் ‘சிங்குராஜா இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவன உரிமையாளர் ஜெய்சங்கர் செங்குட்டுவன்.

‘சிங்குராஜா இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனத்தின் கைவண்ணத்தில் மெருகு பெற்ற வீடு.
‘சிங்குராஜா இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனத்தின் கைவண்ணத்தில் மெருகு பெற்ற வீடு. - படம்: ஜெய்சங்கர் செங்குட்டுவன்

“இந்தக் காலகட்டத்தில் சமூக ஊடகத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. சிறிய வீடுகளின் உரிமையாளர்கள் சமூக ஊடகப் படங்களைக் காட்டி அதுபோலத் தங்கள் வீட்டை வடிவமைக்கும்படி கூறுகின்றனர். ஆனால், அத்தகைய வடிவமைப்பு பெரிய வீட்டுக்கு மட்டுமே பொருந்தும் என்பதை விளக்கவேண்டி இருக்கிறது,” என்றார் 40 வயது ஜெய்சங்கர்.

இருப்பினும், வாடிக்கையாளரின் எண்ணத்தை முடிந்த அளவு நிறைவேற்ற முயற்சி செய்கிறார் இவர்.

வீட்டு வடிவமைப்புத் துறையில் கால்பதித்த புதிதில் ஜெய்சங்கர், அதே துறையில் உள்ள நூற்றுக்கணக்கானோருடன் போட்டிபோட வேண்டியிருந்தது. அப்படியிருந்தும் தமக்கென ஒரு முத்திரையைப் பதித்து, இத்துறையில் நீடிக்கிறார் இவர்.

‘சிங்குராஜா இன்டஸ்ட்ரீஸ்’ நிறுவனம் வடிவமைத்த வீடு.
‘சிங்குராஜா இன்டஸ்ட்ரீஸ்’ நிறுவனம் வடிவமைத்த வீடு. - படம்: ஜெய்சங்கர் செங்குட்டுவன்

செட்டிநாட்டுப் பாணியில் அமைந்துள்ள கூரைகள், இந்தியக் கலைவடிவத்தில் அமைந்த ஊஞ்சல், தூண்கள் போன்றவை ஜெய்சங்கரின் வடிவமைப்பில் உள்ள சில தனித்துவமான அம்சங்கள்.

இந்திய வடிவமைப்பாளர்கள் குறைவாக இருக்கும் துறையில் கால் பதித்த மற்றொருவர் ‘ரோம்ஸ் இன்டீரியர்’ நிறுவனத்தின் உரிமையாளரான 27 வயது கிஷ்ஸன் சில்வானஸ் பிலிப்.

 ‘ரோம்ஸ் இன்டீரியர்’ நிறுவனத்தின் உரிமையாளர் கிஷ்ஸன் சில்வானஸ் பிலிப்.
 ‘ரோம்ஸ் இன்டீரியர்’ நிறுவனத்தின் உரிமையாளர் கிஷ்ஸன் சில்வானஸ் பிலிப். - படம்: கிஷ்ஸன் சில்வானஸ் பிலிப்

கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக வடிவமைப்புத் துறையில் உள்ள கி‌ஷ்ஸன், கடந்த ஈராண்டுகளாகச் சொந்த நிறுவனத்தை நடத்திவருகிறார்.

‘ரோம்ஸ் இன்டீரியர்’ நிறுவனம் வடிவமைத்துப் புதுப்பித்த வீடு.
‘ரோம்ஸ் இன்டீரியர்’ நிறுவனம் வடிவமைத்துப் புதுப்பித்த வீடு. - படம்: கிஷ்ஸன் சில்வானஸ் பிலிப்

“வீடுகளை வடிவமைப்பதில் எனக்கு அதிக ஆர்வம் இருந்ததால் சொந்த நிறுவனத்தைத் தொடங்க முடிவெடுத்தேன்,” என்றார் இவர்.

தனி ஆளாக நிறுவனத்தைத் தொடங்கிய கி‌ஷ்ஸன், “மாறுபட்ட யோசனைகளைக் கொண்டுவந்தால்தான் வாடிக்கையாளர்களுக்கு நம்மீது நம்பிக்கை வரும்,” என்கிறார்.

‘ரோம்ஸ் இன்டீரியர்’ நிறுவனப் புதுப்பிப்புப் பணிகளுக்குப் பிறகு பொலிவுடன் காட்சியளிக்கும் வீடு.
‘ரோம்ஸ் இன்டீரியர்’ நிறுவனப் புதுப்பிப்புப் பணிகளுக்குப் பிறகு பொலிவுடன் காட்சியளிக்கும் வீடு. - படம்: கிஷ்ஸன் சில்வானஸ் பிலிப்

அந்த வகையில் இவர் ஆசியாவில் அதிகம் காணப்படாத ஐரோப்பிய பாணியில் உள்ள வடிவமைப்புகள் மூலம் வாடிக்கையாளர்களைக் கவர்கிறார்.

கி‌ஷ்ஸனைப் போலவே புதுமையான வடிவமைப்புகள் மூலம் வாடிக்கையாளர்களைக் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஈர்த்துவருகிறார் 36 வயது புவனேஸ்வரன். 

‘பிடிஓ.ரெனோஎஸ்ஜி’ நிறுவன உரிமையாளர் புவனேஸ்வரன்.
‘பிடிஓ.ரெனோஎஸ்ஜி’ நிறுவன உரிமையாளர் புவனேஸ்வரன். - படம்: புவனேஸ்வரன்

‘பிடிஓ.ரெனோஎஸ்ஜி’ என்ற நிறுவனத்தின் தனிச்சிறப்புகளில் கண்ணாடியால் செய்யப்பட்ட ‘ஐலண்ட்’ (Island) எனப்படும் சிறிய சமையலறை மேசைகள், வரவேற்பறைக்கும் சமையலறைக்கும் ஓர் இணைப்பை ஏற்படுத்தும் வண்ணம் துளைக்கப்பட்ட சுவர்கள் ஆகியவை அடங்கும்.

வரவேற்பறைக்கும் சமையலறைக்கும் ஓர் இணைப்பை ஏற்படுத்தும் வகையில் சுவரைத் துளைத்துப் புதுப்பித்துள்ளது  ‘பிடிஓ.ரெனோஎஸ்ஜி’.
வரவேற்பறைக்கும் சமையலறைக்கும் ஓர் இணைப்பை ஏற்படுத்தும் வகையில் சுவரைத் துளைத்துப் புதுப்பித்துள்ளது ‘பிடிஓ.ரெனோஎஸ்ஜி’. - படம்: புவனேஸ்வரன்

இன்றைய இளைய தலைமுறையினர் குறைந்த பராமரிப்பு தேவைப்படும் ‘மினிமலிஸ்டிக்’ (minimalistic) பாணியை விரும்பினாலும், இந்தியக் கலாசார நுணுக்கங்களைக் கொண்ட வீடுகளில் பாரம்பரிய எதிர்பார்ப்புகளும் உள்ளன.

வீடுகளில் இடநெருக்கடி இருந்தாலும் ஊஞ்சல் அமைப்பது, கோபுரம் போன்ற அலங்கார வடிவமைப்புகளை உருவாக்குவது, வாஸ்து அடிப்படையில் சாமி அறை, சமையலறையை அமைப்பது முதலியவற்றில் கிஷ்ஸன் கவனம் செலுத்துகிறார். 

தற்காலத்தில் தமிழ்த் திரைப்படத் தாக்கத்தால் மக்கள் ‘செட்டிநாட்டு’ பாணியை விரும்புவதாகக் கூறுகிறார் புவனேஸ்வரன்.

‘பிடிஓ.ரெனோஎஸ்ஜி’ நிறுவனம் மறுசீரமைத்த வீடு.
‘பிடிஓ.ரெனோஎஸ்ஜி’ நிறுவனம் மறுசீரமைத்த வீடு. - படம்: புவனேஸ்வரன்

இந்தியச் சமையலில் எண்ணெய், பெரிய பாத்திரங்களின் பயன்பாடு அதிகம் என்பதால், அதற்குப் பாரம்பரிய முறையிலான மூடிய சமையலறைகளே (Closed Kitchen) சிறந்தது என்கிறார் ஜெய்சங்கர்.

“நம்முடைய பண்பாடும் வண்ணங்களும் தனித்துவமானவை, அழகானவை. நம் பண்பாட்டிலிருந்தே புதுப்பிப்பு வடிவங்களுக்கான உந்துதலைப் பெறலாம்,” என்கிறார் புவனேஸ்வரன்.

வாடிக்கையாளர்களுக்குச் சிறந்ததை வழங்கும் நோக்கில் ‘சிங்குராஜா இண்டஸ்ட்ரீஸ்’ என்ற நிறுவனத்தின்மூலம் களமிறங்கியதாக இவர் குறிப்பிடுகிறார்.

“இத்துறையில் நம் இந்தியச் சமூகத்தினராலும் மிக உயர்ந்த இடத்தைப் பிடிக்க முடியும் என்பதை நாங்கள் நிரூபித்துக் காட்டியுள்ளோம்,” என்றார் கிஷ்ஸன்.

“முன்னைய நிறுவனத்தில் என் யோசனைகளை முழுமையாகச் செயல்படுத்த முடியாமல் போனதால் சொந்த நிறுவனத்தைத் தொடங்கினேன்,” என்றார் புவனேஸ்வரன். 

வடிவமைப்பும் வாடிக்கையாளரின் எதிர்பார்ப்புகளும்

சமூக ஊடகங்களில் காணப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட வீட்டு வடிவமைப்புக் காணொளிகளைப் பார்த்துவிட்டு, வாடிக்கையாளர்கள் அதேபோல் தங்களது வீடுகளையும் வடிவமைக்க வேண்டும் எனக் கேட்பதாக வடிவமைப்பாளர்கள் கூறினர். 

ஆனால், இணையத்தில் பார்ப்பவை பல நேரங்களில் நடைமுறைக்குச் சாத்தியமற்றவை.

வாடிக்கையாளரின் விருப்பத்திலிருந்து 80 விழுக்காட்டு யோசனைகளையும் சொந்த அனுபவத்திலிருந்து 20 விழுக்காட்டு யோசனைகளையும் கலந்து உயர்ந்த தரத்திலான வடிவமைப்பை உருவாக்குகிறார் கிஷ்ஸன். 

புவனேஸ்வரனோ வீட்டு உரிமையாளர்களின் பழக்க வழக்கங்களைக் கேட்டறிந்து அவற்றுக்கு ஏற்ற வீட்டுச்சூழலை உருவாக்குகிறார். “ஒரு வீட்டை வடிவமைப்பதற்கு அந்த இணையரின் ஆளுமை மிக முக்கியம். அவர்கள் அந்த வீட்டோடு உணர்வுபூர்வமாக இணைய வேண்டும்,” என்கிறார் அவர்.

இணையப் படங்களில் காணப்படும் வடிவமைப்பு பெரிய வீடுகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால், சிறிய வீடுகளுக்கு ஏற்ப பளிங்கு, பிவிசி ஆகியவற்றைப் பயன்படுத்துகிறார் ஜெய்சங்கர்.

அழகியலும் பயன்பாடும்

வீடு என்பது பார்ப்பதற்கு அழகாக இருந்தால் மட்டும் போதாது, அது அன்றாட வாழ்க்கைக்குப் பயன்பட வேண்டும் என்பதை மூவருமே வலியுறுத்தினர்.

வாடிக்கையாளர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்ற முயன்றால் இத்துறையில் நீடிக்க முடியாது என்கிறார் கிஷ்ஸன்.

எடுத்துக்காட்டாக, வீட்டின் சமையலறையில் பாத்திரம் துலக்கும் தொட்டியையும் அடுப்பையும்  அழகியலுக்காக வெவ்வேறு முனைகளில் வைத்தால் அது சமையலுக்குப் பல இன்னல்களை ஏற்படுத்தக்கூடும் என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.

அழகோடு பயன்பாடும் முக்கியம் என்பதால், ஒரு வாடிக்கையாளருக்குப் பிரம்பு மற்றும் ‘லேமினேட்’ கொண்டு, நகர்த்தக்கூடிய ‘ஐலண்ட்’ சமையலறை மேசை அமைத்துக் கொடுத்துள்ளார் புவனேஸ்வரன். 

“நடைமுறைப் பயன்பாட்டையும் அழகியலையும் ஒன்றாகக் கலக்கவே முடியாது. அது நாம் அணுகும் முறையைப் பொறுத்தது,” என்பது ஜெய்சங்கரின் கருத்து.

“அன்றாட வாழ்க்கைமுறை மிக முக்கியமானது. வீட்டைப் பார்ப்பதற்கு மட்டும் அழகாக மாற்றிவிட்டு, அதைச் சரியாகப் பயன்படுத்த முடியாவிட்டால் அது வீணாகிவிடும்,” என்கிறார் புவனேஸ்வரன்.

சமரசம் செய்துகொள்ள முடியாத முக்கியக் காரணிகள்

வடிவமைப்பில் சமரசம் செய்ய முடியாத சில முக்கிய விதிகள் உள்ளன. 

கிஷ்ஸனைப்  பொறுத்தவரை இட வசதி, எளிதான பராமரிப்பு, வாடிக்கையாளரின் நிதிநிலை ஆகிய மூன்றையும் வடிவமைப்பாளர்கள் முக்கியமாகக் கருத்தில் கொள்ளவேண்டும்.

போதிய சேமிப்பு இடம் (Storage), தனிப்பட்ட சுதந்திரம் (Privacy), குறிப்பிட்ட நேரத்திற்குள் வேலையை முடிப்பது ஆகிய மூன்றையும் தம் தாரக மந்திரமாகக் கொண்டுள்ளார் புவனேஸ்வரன். 

வீட்டில் நடமாடுவதற்கான வழி எந்தத் தடையும் இன்றி இருக்க வேண்டும் என்பதில் ஜெய்சங்கர் உறுதியாக இருக்கிறார். 

மேலும், மின்சாரம், குழாய் வேலை போன்ற பணிகளைத் துல்லியமாகத் திட்டமிடுவதே அவரது முக்கிய நோக்கம்.

“நடமாடும் பாதையில் சொகுசு நாற்காலி போன்ற எந்தத் தடைகளும் இருக்கக்கூடாது. அங்கு இடையூறு இருந்தால், வசிப்பவர்கள் எரிச்சலாக உணரக்கூடும்,” என்கிறார் ஜெய்சங்கர்.

“ஒரு வீட்டை வடிவமைத்தால், அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளுக்காவது அவர்கள் அங்கு எந்தப் பிரச்சினையும் இன்றி வசதியாக வாழ்வதை உறுதிசெய்வதே எனது நிறுவனத்தின் முக்கியக் குறிக்கோள்,” என்கிறார் கிஷ்ஸன்.

வாடிக்கையாளர்களுக்கான ஆலோசனைகள்

புதிதாக வீடு வாங்க விரும்புவோர் தெளிவான திட்டமிடலுடன் வரவேண்டும் என்று வடிவமைப்பாளர்கள் மூவருமே அறிவுறுத்துகிறார்கள். 

வீட்டின் வரைபடம் (Floor plan), தங்களின் நிதிநிலை, தேவைகள் ஆகியவற்றை முன்கூட்டியே பட்டியலிட்டுக் கொள்வது நல்லது.

“விலையைவிடத் தரத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள். குறைவாகச் செலவழிப்பதைவிடப் புத்திசாலித்தனமாகச் செலவழியுங்கள்,” என்கிறார் புவனேஸ்வரன். 

டைலிங், வயரிங் போன்ற அடிப்படை வேலைகளை முதல் கட்டத்திலேயே செய்துமுடிக்க வேண்டும் என்றும் முடிவுகளை முன்கூட்டியே எடுக்க வேண்டும் என்றும் ஜெய்சங்கர் கூறுகிறார். 

“நாங்கள் வெறும் வடிவமைப்பாளர்கள் மட்டுமல்லர், உங்களுடன் இணக்கமாகச் செயல்படும் நண்பர்கள்,” என்று கூறும் கிஷ்ஸன், நூறு யோசனைகள் இருந்தாலும் அவற்றைத் தங்களிடம் ஒப்படைத்துவிட்டு நிம்மதியாக இருங்கள் என்று கூறுகிறார்.

“குறைவாகச் செலவழிப்பதைவிட புத்திசாலித்தனமாகச் செலவழியுங்கள். இப்போது ஐயாயிரம் வெள்ளி சேமிக்கிறோம் என்று தரம் குறைந்த பொருள்களைத் தேர்ந்தெடுத்தால் பிற்காலத்தில் அவை உடைய வாய்ப்பு உண்டு, “ என்கிறார் புவனேஸ்வரன்.

“முடிவுகளை எடுப்பதில் வீட்டு உரிமையாளர்களுக்கு ஒரு தெளிவு  இருக்க வேண்டும்,” என்கிறார் கிஷ்ஸன்.

“சில முடிவுகளைத் தள்ளிப் போட முடியாது. விரைந்து முடிவெடுக்க வேண்டும்,” என்கிறார் ஜெய்சங்கர்.

குறிப்புச் சொற்கள்
புதுப்பிப்புப் பணிவீடுகள்சிங்கப்பூர்