தனிநபர் தொழில்முனைவோர் முதல் ஆழ்ந்த தொழில்நுட்ப நிதிகள் வரை

TiEcon SG 2026

தனிநபர் தொழில்முனைவோர் முதல் ஆழ்ந்த தொழில்நுட்ப நிதிகள் வரை

படம்: டை சிங்கப்பூர்

22 Nov 2026 - 7:56 pm

2 mins read

சிங்கப்பூர்: உலகளாவிய தொழில்முனைவோர் கட்டமைப்பான TiE சிங்கப்பூரின் 25வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், நவம்பர் 17ஆம் தேதி சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தில் ‘TiEcon SG 2026’ மாநாடு நடைபெற்றது.

350க்கும் மேற்பட்ட நிறுவனர்கள், முதலீட்டாளர்கள், வணிகத் தலைவர்கள் ஆகியோர் பங்கேற்ற இம்மாநாட்டில், செயற்கை நுண்ணறிவின் தாக்கம், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. 

ஒரு தொழில்முனைவோர் தனியாகத் தொடங்கினாலும், அவர்களின் சிந்தனையின் மதிப்பை உணர்ந்து ஆதரவளிப்பவர்கள் அவசியம் என்று இந்தியத் திறன் மேம்பாட்டு, தொழில்முனைவோர் துறை இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி தெரிவித்தார். 

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் வணிக வளர்ச்சியை விரைவுபடுத்துவதாக ஃபிரெஷ்வொர்க்ஸ் நிறுவனர் கிரிஷ் மாத்ருபூதம் குறிப்பிட்டார். இதன்மூலம், ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள ‘யூனிகார்ன்’ நிலையை அடைய முன்பு 10 முதல் 20 ஆண்டுகளான நிலையில், தற்போது ஐந்தாண்டுகள் அல்லது அதற்கும் குறைவான காலமே போதுமானதாக உள்ளதாகவும் தனிநபர் தொழில்முனைவு சாத்தியமாகியுள்ளதாகவும் இன்மொபி இணை நிறுவனர் பியூஷ் ஷா கூறினார். 

சிறந்த திறனாளர்களே நிறுவனங்களின் இடத்தைத் தீர்மானிப்பதாகவும் பைட்டான்ஸ், மெட்டா, ஓப்பன்ஏஐ போன்ற நிறுவனங்கள் சிங்கப்பூருக்குத் திறனாளர்களை ஈர்ப்பதாகவும் பைன் லேப்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி அம்ரிஷ் ராவ் தெரிவித்தார். 

கல்வித்துறையும் தொழில்துறையும் இணைந்து செயல்படுவதால், ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்கள் ஆழ்ந்த தொழில்நுட்ப நிதிகளை உருவாக்க உதவுவதாக இணை அமைச்சர் சவுத்ரி சுட்டிக்காட்டினார்.

சிங்கப்பூர், இந்தியாவின் பலங்களை இணைத்து, ஆசியாவிலிருந்து அடுத்த தலைமுறை உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களை உருவாக்குவதே இம்மாநாட்டின் நோக்கம் என்று TiE சிங்கப்பூர் தலைவர் பிராந்திக் மஜும்தார் தெரிவித்தார்.

இம்மாநாட்டுடன் இணைந்து சிங்கப்பூர்-இந்தியா ஹேக்கத்தான் 2026 இறுதிப் போட்டியும் நடைபெற்றது. 

குறிப்புச் சொற்கள்