மோசடித் தடுப்பு குறித்த விழிப்புணர்வை மேம்படுத்தும் ‘டிக் டாக்’

2 mins read
228de900-452b-4ae2-9eb2-dafb916668d0
‘டிக் டாக்’ சமூக ஊடகத் தளம், உள்ளூரில் நடக்கும் மோசடிகள் குறித்து விழிப்புணர்வை மேம்படுத்தவும் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துரைக்கவும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் மோசடிச் சம்பவங்கள் தொடர்ந்து கவலை அளிக்கின்றன. 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இவ்வாண்டின் முதல் பாதியில் புகார் அளிக்கப்பட்ட மோசடிச் சம்பவங்களின் எண்ணிக்கை 16.3% அதிகரித்துள்ளது. 

இளையர்களிடையே பிரபலமாக இருந்துவரும் ‘டிக் டாக்’ சமூக ஊடகத் தளம், உள்ளூரில் நடக்கும் மோசடிகள் குறித்து விழிப்புணர்வை மேம்படுத்தவும் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துரைக்கவும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

கற்றல் வளங்களின் மூலம் மின்னிலக்கப் பாதுகாப்பின் முக்கியத்துவம், விழிப்புணர்வு, பரவலான இணைய மோசடிகளைக் கண்டறிந்து தவிர்ப்பதற்கான பயனுள்ள உத்திகளைப் பற்றி ‘டிக் டாக்’ பயனாளிகள் மேலும் அறிந்துகொள்ளலாம்.

“மோசடிகளுக்கு எதிரான போராட்டத்திற்கு முழு சமூக முயற்சியும் பொதுக் கல்வியும் மிக முக்கியம். ஒன்றிணைந்து வேலை செய்வதால் மின்னிலக்கச் சமூகத்தில் பாதுகாப்பான சூழலை நாம் உருவாக்கலாம்,” என்றார் மூத்த காவல்துறை அதிகாரியும் தேசிய குற்றத் தடுப்பு மன்றத்தின் நிர்வாக இயக்குநருமான தேவராஜன் பாலா. 

மேலும், ‘டிக் டாக் ஷாப்’ (TikTok Shop) மின்னணு வணிகத் தளத்தில், மேம்படுத்தப்பட்ட ‘டிக் டாக் ஷாப் சேஃப்’ (TikTok ShopSafe) திட்டம் அறிமுகம் கண்டுள்ளது. பயனாளிகள் அந்த மின்னணு வணிகத் தளத்தில் கண்டறியும் ஆபத்துகள் குறித்து புகார் அளித்து வெகுமதிகளைப் பெறலாம்.

குறிப்பாக, சிங்கப்பூரில் ‘டிக் டாக் ஷாப்’ தளத்தை அணுகும் பயனாளிகள் ஏதேனும் மோசடிகள் குறித்து புகார் அளித்தால் அவர்களுக்கு 1,000 அமெரிக்க டாலர் வரை சமமான வெகுமதிகள் வழங்கப்படும். 

‘டிக் டாக்’ சமூக ஊடகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய மோசடித் தடுப்புப் பதிப்பில், சிங்கப்பூரில் நடக்கும் பொதுவான மோசடிகள், மோசடித் தடுப்பு உதவிக் குறிப்புகள் என்னென்ன, ‘டிக் டாக் ஷாப்’ மின்னணு வணிகத் தளத்தில் பொருள்கள் வாங்கும்போது எவ்வாறு விழிப்புணர்வுடன் இருக்கலாம் போன்றவற்றை பயனாளிகள் கற்றுக்கொள்வார்கள். 

குறிப்புச் சொற்கள்