தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்தது

தொடக்கநிலை மாணவர்களுக்கான மொழிபெயர்ப்புப் போட்டிகள்

2 mins read
7e5e0dd4-9f84-4175-8c6a-adc031da8120
மொழிபெயர்ப்புப் போட்டியில் மாணவர்கள் கொடுக்கப்பட்ட ஆங்கிலச் சொற்களையும் வாக்கியங்களையும் தமிழில் மொழிபெயர்க்கவேண்டும். - படம்: தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம்

தொடக்கநிலை மாணவர்கள், பெற்றோர் என 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் மொழிபெயர்ப்புப் போட்டியும் 125 நிகழ்வுகளின் நிறைவு மலர் வெளியீட்டு நிகழ்ச்சியும் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 17) விக்டோரியா சாலையிலுள்ள தேசிய நூலகத்தில் நடைபெற்றது.

காலை 11 மணியளவில் கழகத்தின் சிறப்பு மலர் வெளியீடு இடம்பெற்றது. இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் சமாதான நீதிபதியும் முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.தினகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் இரா.தினகரன் (இடது) நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் இரா.தினகரன் (இடது) நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். - படம்: தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம்

தமிழ்மொழி கற்றல், வளர்ச்சிக் குழு ஆதரவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்காக அனைத்து தொடக்கநிலைப் பள்ளிகளுக்கும் இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே சுற்றறிக்கை அனுப்பப்பட்டு, மாணவர்கள் போட்டிக்குப் பதிவுசெய்தனர்.

பெற்றோரும் ஏற்பாட்டுக் குழுவினரிடம் அடிக்கடி தொலைபேசியில் தொடர்புகொண்டு “எந்த மாதிரி சொற்கள் கேட்கப்படும், தேசிய தினக் கொண்டாட்டம் தொடர்பாக சொற்கள்தான் கேட்கப்படுமா, பாடப் புத்தகங்களில் தரப்படும் சொற்களா?” என்று கேட்டது தமிழுக்கான இதுபோன்ற போட்டிகளுக்கு பெற்றோரின் பலத்த ஆதரவு வெளிப்பட்டது.

மொழிபெயர்ப்புப் போட்டிகளில் 200க்கும் அதிகமான தொடக்கநிலை மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
மொழிபெயர்ப்புப் போட்டிகளில் 200க்கும் அதிகமான தொடக்கநிலை மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். - படம்: தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம்

தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் இந்தப் போட்டிகளை அடுத்த ஆண்டுமுதல் இன்னும் சிறப்பாக நடத்தவேண்டும் என்ற எதிர்பார்ப்பு எல்லாரிடமும் வெளிப்பட்டது.

மொழிபெயர்ப்புப் போட்டியில் தொடக்கநிலை 1, 2, 3 மாணவர்களுக்குப் பத்து ஆங்கிலச் சொற்கள் தரப்பட்டன. அவர்கள் அதற்குச் சரியான தமிழ்ச் சொற்களைத் தரவேண்டும். அந்தப் பிரிவில் கிட்டத்தட்ட 280 மாணவர்கள் பங்கேற்றனர்.

தொடக்கநிலை 4, 5, 6 மாணவர்களுக்கான போட்டியில் 10 சிறு வாக்கியங்கள் தரப்பட்டன. அந்தப் பிரிவில் 200க்கும் அதிகமான மாணவர்கள் கலந்துகொண்டனர்.

- படம்: தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம்

போட்டியில் சிறப்பாகச் செயல்பட்ட 20 மாணவர்கள் ஒவ்வொரு குழுவுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்த 20 மாணவர்கள், இரண்டு இரண்டு மாணவர்களாகப் பத்துக் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு இரண்டாம் சுற்று நடத்தப்பட்டது.

பங்குபெற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் ஆலோசகர்களில் ஒருவரான முனைவர் ராஜேஸ்வரி ஸ்ரீநிவாசன், பார்வையாளர் முன்னிலையில் ஆங்கிலச் சொற்கள் தர, அதை மாணவர்கள் தமிழில் மொழிபெயர்த்துச் சொன்னார்கள்.

மிகவும் கடினமான சொற்களுக்குக்கூட அவர்கள் மிகச் சிறப்பான தமிழ்ச் சொற்களை வழங்கியதில் அரங்கம் நிறைந்த கைதட்டல்கள் எழுந்தன.

முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் ஐந்து அணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் பரிசு $120. இரண்டாம் பரிசாக $80, மூன்றாம் பரிசாக $60, இரண்டு ஊக்கப்பரிசுகள் தலா $50 வழங்கப்பட்டன.

இரண்டாம் சுற்றில் இடம்பெற்ற 40 மாணவர்களுக்கும் பாப்புலர் பற்றுச்சீட்டுகளும் நூல்களும் பரிசாக வழங்கப்பட்டன. இரண்டாம் சுற்றுடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.

அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் கலந்துகொண்டது, தமிழ்மொழிக்கான சிறந்த எதிர்காலம் சிங்கப்பூரில் இருக்கிறது என்பதைப் பறைசாற்றுவதாக அமைந்தது.

போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கும் தொண்டூழியர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கும் தொண்டூழியர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. - படம்: தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம்
குறிப்புச் சொற்கள்