புகைப்படம், காணொளி, முக அலங்காரம் போன்ற இதர திருமணச் சேவைகளை ஒன்றிணைத்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக அலங்கார் நிறுவனம் வழங்கி வருகிறது.
இருப்பினும், அண்மையில் ஒரு திருமணத்திற்கு உணவு சேவையை நிர்வகிக்கும் பொறுப்பை மட்டும் அலங்கார் வகித்தது என்றார் அந்நிறுவனத்தின் இயக்குநர் நவீன் ரமேஷ், 33. மற்ற சேவைகளை பெரும்பாலும் மலேசியாவிலிருந்து வந்த வெளிநாட்டினர் கவனித்துக்கொண்டார்கள் என்று அவர் தெரிவித்தார்.
“குறைந்த விலைகள் காரணமாக வெளிநாட்டினர் பணியமர்த்தப்படுகிறார்கள் என்று நான் நம்புகிறேன்,” என்றார் திரு நவீன். அதனால், நாம் அவர்களுடன் போட்டியிடுவது மற்றொரு சவாலாக மாறுகிறது என்று அவர் விளக்கினார்.
புகைப்படம், காணொளி, முக அலங்காரச் சேவைகளை சொந்தமாகச் செய்யும் வெளிநாட்டினரை சில நிறுவனங்கள் ஈடுபடுத்தியதாக மனிதவள அமைச்சுக்குத் தகவல் கிடைத்ததை தொடர்ந்து செப்டம்பர் 13ஆம் தேதி ஆலோசனைக் குறிப்பு ஒன்றை வெளியிட்டது. இது போன்ற படைப்புத்திறன் சேவை வழங்கும் நிறுவனங்கள் வெளிநாட்டுத் தற்சார்பு ஊழியர்களைப் பணியில் அமர்த்த அனுமதி இல்லை என்று அக்குறிப்பு சுட்டிக்காட்டியது.
இந்த முயற்சியைப் பாராட்டினார் திரு நவீன்.
“திருமணம் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே நடக்கும் ஒரு சுப நிகழ்ச்சி. ஆபத்துகளைத் தடுக்க வெளிநாட்டினரைவிட உள்ளூர் நிறுவனங்களை ஈடுபடுத்துவது எப்போதும் பாதுகாப்பானது,” என்று அவர் வலியுறுத்தினார்.
வாடிக்கையாளர்கள் வெளிநாட்டினரை இதுபோன்ற சேவைகளுக்காக பணியமர்த்த ஒரு காரணம் இருக்கலாம் என்றும் தெரிவித்தார் ‘தி சஸ்பெண்டர்கள்’ திருமண அலங்கார நிறுவனத்தின் இயக்குநர் ஹேமலதா பரமசிவன், 32.
“உள்ளூர் நிறுவனங்களான நாம் போதுமான அளவிற்கு நவீன முறைகளை பின்பற்றாமல் இருப்பதுதான் அதற்குக் காரணம் என்று நான் யோசித்ததுண்டு,” என்றார் அவர். ஆதலால், தன் திருமண அலங்காரச் சேவைகளில் வித்தியாசமான பாணிகளை கையாள்வதற்கு அதுவே ஒரு காரணம் என்று அவர் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
தாங்கள் விரும்புவதை வெளிக்கொண்டுவரும் திறன், குறைந்த செலவில் அதிக உற்பத்தி போன்ற அம்சங்களை இக்கால இணையர்கள் அதிகம் கருதுவதுண்டு என்றார் திருவாட்டி ஹேமலதா.
“திருமணத் திட்டமிடல் என்பது ஒரு பயணம். திருமணச் சேவைகளின் தரம் பற்றிக் கவலைப்படாமல் நம்பகமான ஒருவரை ஈடுபடுத்துவது முக்கியம்,” என்றும் அவர் அறிவுறுத்தினார்.