தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பெற்றோரின் நினைவாக உருவெடுத்த வர்த்தகங்கள்

3 mins read
7f8e1951-ddf4-4235-a9d0-ba44e65ff882
லாவண்யா பொழுதுபோக்காகத் தொடங்கிய நகச்சாயச் சேகரிப்புப் பழக்கம் பின்னாளில் அவர் நக அலங்காரத் தொழில் தொடங்கக் காரணமானது. அதற்கு முழுமுதற் காரணமாக இருந்தவர் அவருடைய காலஞ்சென்ற தந்தை சந்திரஹாசன்.  - படம்: லாவண்யா சந்திரஹாசன்
multi-img1 of 4

சிறு வயதிலிருந்தே சிலருக்குக் குறிப்பிட்ட சில விருப்பங்கள் இருக்கக்கூடும். அதுபோல விதவிதமான வண்ணங்களில் நகச்சாயங்களை ஆசையுடன் சேகரிப்பவர் லாவண்யா சந்திரஹாசன், 32. அப்படிச் சேகரித்தவற்றை வாரந்தோறும் நகங்களில் பூசி அவர் அழகு பார்ப்பதுண்டு.

பொழுதுபோக்காகத் தொடங்கிய அந்தப் பழக்கம் பின்னாளில் அவர் நக அலங்காரத்துக்கான வர்த்தகத்தைத் தொடங்கக் காரணமானது. அதற்கு முழுமுதற் காரணமாக இருந்தவர் லாவண்யாவின் காலஞ்சென்ற தந்தை சந்திரஹாசன்.

“அப்பா என்னைத் தடுத்ததில்லை. என் அறையில் ஒரு நகச்சாய அலமாரியையே எனக்காக உருவாக்கினார்,” என்று தந்தையின் அன்பை நினைவுகூர்ந்தார் லாவண்யா.

2020ஆம் ஆண்டு தந்தையின் கால்களில் தொற்று ஏற்பட்டு அவரது நுரையீரலுக்கு நிமோனியா பரவியது.

அப்போது லாவண்யாவின் பட்டமளிப்பு விழாவுக்கு ஒரு வாரம் எஞ்சியிருந்த நிலையில் அவரது தந்தை காலமானார்.

“உலகமே இடிந்து விழுந்தது போலானது,” என்று அந்தச் சோகத்தை லாவண்யா பகிர்ந்தார்.

பட்டம் பெற்ற பின்னர் அவர் மாணவர் பராமரிப்பு நிலையத்தில் ஆசிரியராகப் பணிபுரியத் தொடங்கினார்.

ஆனாலும், நகத்தை அழகுபடுத்தும் ஆசை அவரைவிட்டுப் போகவில்லை. அப்பா முழுமையாக ஆதரித்த ஒரு கலை என்பதுடன் அம்மா தந்த நம்பிக்கையில் ‘பிங்க் ரூம்’ அனைத்துலக நக ஒப்பனைக் கழகத்தில் (The Pink Room International Nail Academy) அது தொடர்பான பட்டயக் கல்வியை லாவண்யா மேற்கொண்டார்.

வாரம் இருமுறை பாடம் பயின்று மூன்று மாதங்களில் சான்றிதழைப் பெற்றார் அவர்.

2021ஆம் ஆண்டு மே 28ஆம் தேதி, தந்தையின் முதலாம் ஆண்டு நினைவுநாளில் ‘நெயில்ட் சா’ நக ஒப்பனைக் கடையைத் திறந்தார். கடைத்தொகுதியிலோ பெரிய கடையிலோ அல்ல. தந்தையின் துணையுடன் நக ஒப்பனைக்கான ஆர்வம் வளர்ந்த அதே அறையைக் கடையாக மாற்றினார்.

தந்தையின் ஓவியப் படைப்புகள் ‘நெயில்ட் சா’ அறையை அழகுபடுத்துகின்றன.

லாவண்யாவைப் போன்றே, காலஞ்சென்ற தந்தையின் நினைவாக புது வர்த்தகத்தில் கால்பதித்த மற்றொருவர் 33 வயது கௌசல்யா கிரு‌ஷ்ணமூர்த்தி.

பூத்துக் குலுங்கும் வண்ண மலர்கள் என்றால் கௌசல்யாவுக்குக் கொள்ளை ஆசை.

தோட்டக்கலையில் ஆர்வம் கொண்ட பெற்றோர்தான் அதற்கு வித்திட்டனர்.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பெற்றோருடன் சேர்ந்து பூக்களை வாங்கி அழகுபடுத்துவது கௌசல்யா ஆர்வத்துடன் எதிர்பார்த்த நடவடிக்கையாக இருந்தது. ஆனால் ஒருநாள் அது முடிவுக்கு வரும் என்று கௌசல்யா நினைத்ததில்லை.

2020ஆம் ஆண்டு கௌசல்யாவின் தந்தை உடல்நலக் குறைவால் திடீரெனக் காலமானர். தந்தையின் நினைவில் அதே ஆண்டு ‘ஃபுளூர் பிலாசஃபி பை கே’ (Fleur Philosophy by K) எனும் சிறிய இணைய வர்த்தகத்தைக் கௌசல்யா தன் இல்லத்தில் தொடங்கினார்.

முழுநேர வேலையைச் செய்துகொண்டு சமூக ஊடகங்களில் மலர் அலங்காரங்களை அவர் பகிர்ந்தார். “என்றாவது ஒருநாள் நான் ஒரு வர்த்தகத்தை நடத்தவேண்டும் என்று தந்தை ஆசைப்பட்டார். அது ஏன் பூக்களை அலங்காரம் செய்யும் வர்த்தகமாக இருக்கக்கூடாது என்று இதைத் தொடங்கினேன்,” என்றார் அவர்.

கௌசல்யாவின் மலர் அலங்காரத்துக்கு இன்ஸ்டகிராமில் விரைவில் நெருங்கிய நட்பு வட்டத்திலிருந்தே ரசிகர் கூட்டம் பெருகியது. தாயாரும் முழு மனத்துடன் கௌசல்யாவை ஊக்குவித்தார்.

தந்தைக்குப்பின் தாய் உறுதுணையாக இருக்கிறார் என்ற உற்சாகத்துடன் இயங்கியவருக்கு மூவாண்டுக்குப்பின் துக்கம் ஏற்பட்டது. தாயாரும் இயற்கை எய்தினார்.

உந்துதலாக இருந்த தந்தை, பக்கபலமாக இருந்த தாய் இருவரையும் இழந்த நிலையில் ஓராண்டுக்குக் கௌசல்யாவின் ‘ஃபுளூர் பிலாசஃபி பை கே’ (Fleur Philosophy by K) வாடியது.

தந்தை விட்டுச்சென்ற வார்த்தைகளையும் தாயின் ஆதரவையும் மனத்தில் நிறுத்தி மீண்டும் வர்த்தகத்தைத் தொடங்கினார். இப்போது நண்பர்கள், வாடிக்கையாளர்கள் பலரும் கௌசல்யாவின் மலர் அலங்காரங்களை நாடுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்