சிறுவர் நூலுக்காக இணைந்த தோழிகள்

சிறுவர் நூலுக்காக இணைந்த தோழிகள்

2 mins read
60424a7a-07d2-4c2c-9752-d7c7b98c34de
‘சிவகாமியின் சாகசங்கள்’ என்ற புதிய சிறுவர் நூலின் எழுத்தாளர் சரஸ்வதி குமரன் (வலம்), நூல் வடிவமைப்பாளர் அலிசியா சீ முன் சிங் (இடம்). - படம்: கீர்த்திகா ரவீந்திரன்
Google News Preferred Icon

தாழ்வு மனப்பான்மை, உடல் தோற்றம் குறித்த கவலைகளைக் கடந்து தனக்குப் பிடித்த, வலிமை தரும் ஒரு கலையைக் கற்றுக்கொண்ட சிறுமியின் கதையைச் சொல்லும் ‘சிவகாமியின் சாகசங்கள்’ என்ற புதிய சிறுவர் நூல், சனிக்கிழமை (ஆகஸ்ட் 1) இணையத்தில் வெளியீடு கண்டது.

இந்தப் புதிய நூல், நெருங்கிய தோழிகளான சரஸ்வதி குமரன், 26, அலிசியா சீ முன் சிங், 26, ஆகிய இருவரின் சிந்தனையிலிருந்து உதித்தது.

சிங்கப்பூர்ப் பலதுறைத் தொழிற்கல்லூரியில் ஒன்றாகப் பயின்று நண்பர்களான இருவருக்கும் வெவ்வேறு திறன்கள் இருப்பதாகக் கூறினார் சரஸ்வதி.

“என் பலம் தயாரிப்பிலும் அலிசியாவின் பலம் சித்திரக்கலையிலும் இருக்கிறது. எங்களை வெளிப்படுத்திக்கொள்ள ஒரு தேவை உள்ளது என்று உணர்ந்தோம்,” என்றார் இவர்.

சிவகாமி என்ற சிறுமியின் கதையை எழுதினார் சரஸ்வதி. சிவகாமியின் கதாபாத்திரத்தை அலிசியா வரைந்தார்.

சிவகாமி என்ற கதாபாத்திரம், சரஸ்வதியை முன்மாதிரியாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ளது. இவர் மேற்கொள்ளும் முயற்சிகளில் ஒன்றான பரதநாட்டியமும் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

பரதநாட்டியம் போன்ற இந்தியக் கலை வடிவத்தைச் சித்திரமாக மாற்றுவது ஆரம்பத்தில் சவாலாக இருந்தது என்று சொன்னார் அலிசியா.

“எனது சித்திரங்களுக்கு உதவியாக நான் சரஸ்வதியின் நிகழ்ச்சிகளைப் பார்க்கச் செல்வேன். மேலும், இணையத்தில் சில காணொளிகளையும் பார்த்து வரையத் தொடங்கினேன்,” என்று இவர் கூறினார்.

இந்தக் கதையில் ஒரு சிறுமி பரதநாட்டியக் கலையைக் கற்றுக்கொள்வதால் அதற்கேற்றாற்போல் வரையவேண்டிய தேவை ஏற்பட்டது.

“ஒரு குழந்தையைப் போலவே, கதாபாத்திரத்தின் கையசைவுகளும் உடல் தோரணையும் மிகவும் விறைப்பாக இல்லாமல் இருப்பதை உறுதிசெய்யவும் ஒவ்வோர் அசைவின் பின்னால் உள்ள அர்த்தத்தையும் புரிந்துகொண்டு வரையவும் நாங்கள் இருவரும் அணுக்கமாகப் பணியாற்றினோம்,” என்றார் அலிசியா.

அத்துடன், கலை என்பது ஒரு குறிப்பிட்ட உடல்வாகு கொண்டவர்களுக்கு மட்டும் உரியதன்று என்பதையும் இருவரும் காட்ட விரும்பினார்கள்.

‘சிவகாமியின் சாகசங்கள்’ என்ற புதிய சிறுவர் நூல், சிறுவர்கள் எதிர்கொள்ளும் தனிப்பட்ட சவால்களை அங்கீகரிக்கும் வண்ணம் இருக்க வேண்டும் என்றும் விரும்புவதாக இவர்கள் கூறினர்.

சரஸ்வதி, சிறு வயதில் உடல் தோற்றம் குறித்த பிரச்சினைகளை அதிகம் எதிர்கொண்டார்.

“இது போன்ற ஒரு சூழலை அனுபவித்த அல்லது அனுபவித்துக் கொண்டிருக்கும் வேறு பல குழந்தைகளும் இருக்கலாம். அவர்கள் என்றும் தனித்திருக்கத் தேவையில்லை என்பதை அறிந்துகொள்ள இந்தப் புத்தகம் அவர்களுக்கு ஆறுதலாக அமையக்கூடும்,” என்று இவர் சொன்னார்.

நூலுக்கான முழுத் தயாரிப்புப் பணிக்கும் கிட்டத்தட்ட ஓராண்டு பிடித்ததாகக் குறிப்பிட்டார் அலிசியா.

“தற்போது, புத்தக விற்பனையில் சுமார் 40 விழுக்காடு, குழந்தைகள் நலனுக்கான தொண்டு நிறுவனமொன்றுக்குச் செல்கிறது,” என்றார் அலிசியா.

மேலும், தோழிகள் இருவரும் ஆண்டுக்கு ஒருமுறையாவது சிறுவர்களுக்கான ஒரு நூலை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்