வளர்ப்புப் பிள்ளைகளுக்கு அன்பை வாரி வழங்கும் தாய்மையின் சிகரங்கள்

வளர்ப்புப் பிள்ளைகளுக்கு அன்பை வாரி வழங்கும் தாய்மையின் சிகரங்கள்

9 mins read
4706d0e1-ceb3-499b-a739-64f80bdd8d76
தத்து மகளான மீனாட்சி துஷான்தன் (வலது), வளர்ப்புத் தாயார் அம்பிகாவதி சோமசுந்தரம். - படம்: செய்யது இப்ராஹிம்
Google News Preferred Icon

பெற்றெடுத்த பிள்ளைகளை நன்கு வளர்ப்போரைப் போற்றும் உலகம், தாம் பெறாத பிள்ளைகளுக்கு அடைக்கலம், அடையாளம், அன்பு என அனைத்தையும் வழங்கி வளர்க்கும் தாயாரைப் பல வேளைகளில் போற்றத் தவறிவிடுகிறது.

தத்துப் பிள்ளைகளை உயிரினும் மேலாகக் கருதி வளர்த்துவரும் தாய்மார் இருவரின் உருக்கமான கதையை இக்கட்டுரையின்வழி நாம் அறிவோம்.

30 ஆண்டுகாலப் பயணம்

சிங்கப்பூரர் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டு பல்வேறு கனவுகளுடன் மலேசியாவிலிருந்து 1990ஆம் ஆண்டில் சிங்கப்பூருக்கு வந்தார் திருவாட்டி அம்பிகாவதி சோமசுந்தரம்.

திருமணமான மூன்று ஆண்டுகள் கழிந்தும் குழந்தைகள் இல்லை. தமக்கென ஒரு குழந்தை வேண்டுமென்று விரும்பிய அவர், தத்தெடுப்பை நல்ல யோசனையாகக் கருதினார். தொடக்கத்தில் அம்முடிவை அவரது கணவர் ஆதரிக்கவில்லை.

அக்கட்டத்தில் மலேசியாவின் பெட்டாலிங் ஜெயாவிலிருந்த அவரது குடும்பத்தைச் சந்திக்கச் சென்றபோது அனைவரும் ஆலயத்திற்குச் சென்றனர். வழிபாடு முடித்து வெளியேறுகையில் தமக்குத் தெரிந்த தாதியர் ஒருவரை அம்பிகாவதி கண்டார்.

“அந்தத் தாதியர் குழந்தைகள் அறையில் வேலை செய்பவர். அவரைக் கண்டவுடன் நல்ல சகுனமாகத் தோன்றியதால் மீண்டும் என் கணவரிடம் தத்தெடுப்பைப் பற்றி கேட்டுப் பார்த்தேன். ஆச்சரியமளிக்கும் விதமாக அவரும் ஒப்புக்கொண்டார்.

“அந்தக் காலத்தில் பலரும் குழந்தைகளைப் பெற்றெடுத்தபின், மருத்துவமனைகளிலேயே விட்டுவிடும் போக்கு அதிகம் இருந்தது. அத்தகைய பிள்ளைகள் யாரையாவது தத்தெடுக்க முடியுமா என அந்தத் தாதியரிடம் கேட்டேன்.

“அதுபோன்ற குழந்தைகள் அப்போது இல்லையென்று கூறிய அந்தட்ஹ் தாதி, வேறொரு கிறிஸ்துவ இல்லத்தை அணுகுமாறு பரிந்துரைத்தார்,” என அம்பிகாவதி கூறினார்.

அந்த இல்லத்தை அணுகிய பின்னர், சிங்கப்பூர் திரும்பிய ஒரு வாரத்தில் அம்பிகாவதிக்கு நற்செய்தி சொன்ன அழைப்பு வந்தது.

செய்தியைக் கேட்டவுடனே கணவர், மனைவி இருவரும் மலேசியாவிற்கு விரைந்தனர். அடுத்த நாள் காலை இல்லத்திற்குச் சென்றபோது குழந்தை அதனைப் பெற்ற தாயின் கைகளில் இருந்தது.

பிள்ளையைக் கையில் வாங்கிய நொடியை இன்றும் மறக்க முடியவில்லை என்றார் அம்பிகாவதி.

அன்று முதல், மீனாட்சி துஷான்தன் எனும் அக்குழந்தைக்கு அவர் தாயாக மாறினார்.

எதிர்கொண்ட சவால்கள்

ஆனால், அக்குழந்தையைச் சிங்கப்பூருக்கு அழைத்து வருவது அத்தனை எளிதாக இல்லையென அம்பிகாவதி சொன்னார்.

“மீனாட்சியின் பெற்றோரிடம் முறையான ஆவணங்கள் இல்லாமல் போனதும் அவர்களுக்கு ஆங்கிலப் புலமை குறைவாக இருந்ததும் நிலைமையைச் சவால்மிக்கதாக மாற்றியது.

“என் கணவர் சிங்கப்பூர் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையத்தில் துணை ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்ததால், சிங்கப்பூர் அதிகாரிகளிடம் உதவிபெற்று மீனாட்சியைச் சிங்கப்பூருக்கு அழைத்து வந்தோம்,” என அவர் கூறினார்.

மீனாட்சியின் மூன்றாவது வயதில், அவரைத் தத்தெடுத்த தந்தை உடல்நலக் குறைபாட்டினால் மறைந்தார். கணவரை மட்டுமன்றி கணவரது குடும்பத்தின் ஆதரவையும் இழந்தார் அம்பிகாவதி.

ஒற்றைத் தாயாக மீனாட்சியை வளர்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்ட போதிலும் அம்பிகாவதி மனந்தளரவில்லை.

ஆரம்பக்கட்ட சந்தேகங்கள்

“தொடக்கப்பள்ளியில் உடல்நலப் பரிசோதனைகளின்போது என்னுடைய உடல்நலப் புத்தகத்தில் மட்டும் நிறைய கேள்விகுறிகள் இருக்கும். என் நண்பர்களுடைய புத்தகத்தில் அனைத்துத் தகவல்கள்களும் முழுமையாக இருந்த நிலையில், அது எனக்குச் சந்தேகத்தை எழுப்பியது,” என்று மீனாட்சி கூறினார்.

பெற்றோர் குறித்துச் சந்தேகங்கள் எழுந்தபோதிலும், அதுகுறித்து அம்பிகாவதியிடம் சென்று பேச அவர் தயங்கினார்.

“அப்போது நானும் அம்மாவும் மிகவும் நெருக்கமான உறவைக் கொண்டிருந்தோம். என் சந்தேகங்களைக் குறித்துப் பேசி, எங்கள் உறவில் ஏதேனும் முறிவு ஏற்பட்டுவிடுமோ என்ற பயம் எனக்கு இருந்தது,” என்றார் மீனாட்சி.

மீனாட்சி வளரும் வேளையில், என்றேனும் உண்மையை உடைக்க வேண்டி இருக்குமென அம்பிகாவதிக்குத் தெரிந்திருந்தது.

வெளிச்சத்திற்கு வந்த உண்மை

மீனாட்சியின் 14ஆம் வயதில் ஒரு நாள் பள்ளி முடிந்து அவர் வீடு திரும்பியவுடன், உண்மையைச் சொல்லவேண்டுமென்ற உந்துதல் அம்பிகாவதிக்கு ஏற்பட்டது.

“எனக்கு இருந்த ஒரே பயம், அவளுக்கு வேறு ஒருவரின் மூலமாக உண்மை தெரிந்துவிடுமோ என்பதுதான். அதனால், அதற்கு முன்பு நானே சொல்ல முடிவெடுத்தேன். பெற்றோர் குறித்து உண்மை தெரிந்தவுடன் அவள் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. கண்களிலிருந்து நீர் மட்டும் நிற்காமல் வழிந்தோடியது,” என்று அம்பிகாவதி கண்கலங்கியவாறு கூறினார்.

உணர்வு வெள்ளம்

தனது 14 ஆண்டுகால வாழ்க்கை முழுதும் ஒரு பொய்யாக அன்றைய நாள் தோன்றியதென மீனாட்சி வெம்பினார்.

“எனக்குக் கோபமோ ஆதங்கமோ ஏற்படவில்லை. ஆழ்ந்த வருத்தம் ஏற்பட்டது. சிறிது நேரம் ஒன்றும் புரியவில்லை. மனம் மரத்துப்போயிற்று என்றுகூடச் சொல்லலாம்,” என்றார் அவர்.

மீனாட்சிக்குத் தாம் தத்தெடுக்கப்பட்டதைவிட அதிக அதிர்ச்சியளித்தது அவரது பெற்ற தாய் தன்னைத் தத்துக் கொடுத்ததுதான்.

“எவ்வாறு ஒரு தாயால் அவ்வளவு எளிதில் ஒரு குழந்தையைக் கொடுத்துவிட முடிகிறது என்ற யோசனை என்னை வாட்டியது. பணத்திற்காக என்னைக் கொடுத்துவிட்டார் என்பதை மனம் ஏற்க மறுத்தது,” என்று மீனாட்சி சொன்னார்.

3,000 மலேசிய வெள்ளியை முன்பணமாகச் செலுத்தியது அம்பிகாவதியின் நினைவில் இருக்கிறது. அதற்கு மேலாகவும் தமது கணவர் பணம் கொடுத்ததாகவும் அவர் சொன்னார்.

உண்மையை ஏற்க மறுத்த மீனாட்சியின் மனம் செய்வதறியாது திசை மாறியது.

தவறான பாதை

“நிலைமையை முழுமையாகப் புரிந்துகொள்ள ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் எடுத்தது. அந்த ஈராண்டுகளில் என் அம்மாவிடம் நிறைய கேள்விகள் கேட்டேன்.

“ஒவ்வொரு கேள்வியின் பதிலும் என்னை அவரிடமிருந்து விலகச்செய்தது. பெரும்பாலான பதின்ம வயதினர் ஏதோ ஒரு கட்டத்தில் பெற்றோருக்கு முரணாக நடந்துகொள்வர். ஆனால், நான் சற்று எல்லை மீறினேன் என்று கூறலாம். மனத்தில் பயமும் ஆதங்கமும் நிறைந்திருந்த காலகட்டம் அது,” என்றார் மீனாட்சி.

அக்காலகட்டத்தில் வயதில் மூத்த நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துவது, புகைபிடிப்பது போன்ற தீய பழக்கங்களுக்கு அவர் ஆளானார். இரண்டு, மூன்று நாள்கள் வீடு திரும்பாமல் அம்பிகாவதிக்குப் பலத்த பயத்தையும் படபடப்பையும் ஏற்படுத்தினார்.

அப்போதும் அம்பிகாவதி பொறுமையையும் மீனாட்சியின்மீது வைத்த அன்பையும் இழக்கவில்லை.

“மனத்தில் வருத்தமும் பயமும் இருந்தாலும், அவளுக்குத் துணையாக நிற்க வேண்டுமென்றுதான் எண்ணினேன்,” என்று அம்பிகாவதி கூறினார்.

மூன்று ஆண்டுகள் தொடர்ந்த மீனாட்சியின் மனப்போராட்டம் அவரது 19வது வயதில் தொய்வடைந்தது. வளரும் ஆண்டுகளில் சில நேரங்களில் தன்னைப் பெற்ற தாயைப் பார்க்க வேண்டுமென்ற எண்ணம் எழுந்ததாக அவர் குறிப்பிட்டார்.

“எனக்கு மீண்டும் அவரிடம் போக வேண்டுமென்றோ என் அம்மாவைப் (அம்பிகாவதி) பிரிய வேண்டுமென்றோ தோன்றவில்லை. அவரை ஒரு முறை பார்க்க வேண்டும் என்று எண்ணினேன். ஆனால், காலப்போக்கில் அவ்வெண்ணம் மறைந்துவிட்டது,” என்றார் மீனாட்சி.

நெருக்கமான உறவும் எதிர்கால ஆசையும்

தற்போது தமது 32 வயதில் மீனாட்சி தன் தாயாருடன் வசித்து அவரைப் பார்த்துக்கொள்கிறார். எதிர்காலத்தில் தாமும் பிள்ளைகளைத் தத்தெடுத்து வளர்க்க வேண்டுமென்ற விருப்பத்தையும் கொண்டுள்ளார்.

எதிர்காலத்தில் தாமும் பிள்ளைகளைத் தத்தெடுக்க வேண்டுமென விரும்புகிறார் மீனாட்சி.
எதிர்காலத்தில் தாமும் பிள்ளைகளைத் தத்தெடுக்க வேண்டுமென விரும்புகிறார் மீனாட்சி. - படம்: செய்யது இப்ராஹிம்

நெருக்கடியிலும் இரண்டு குழந்தைகளுக்கு வாழ்வளித்த தாய்

19 வயதில் திருமணம், 32 வயதில் மணமுறிவு, பலத்த நிதி நெருக்கடி எனப் பல்வேறு சவால்கள்.

இருப்பினும், தமக்கென ஒரு பெரிய குடும்பம் வேண்டுமென்று விரும்பியதாகக் கூறினார் 46 வயதான தொழில்முனைவர் டெய்சி மோர்கன்.

அவ்விருப்பத்தை 2017ஆம் ஆண்டு அவருக்கு வந்த எதிர்பாரா அழைப்பு ஒன்று நிறைவேற்றியது.

“மலேசியாவிலிருந்து கைக்குழந்தை ஒன்று தத்தெடுப்பிற்கு உள்ளதாக அந்த அழைப்பின்வழி தெரிய வந்தது. அக்கட்டத்தில் பலத்த நிதி நெருக்கடி இருந்தாலும் குழந்தையை வேண்டாமென்று சொல்ல மனம் வரவில்லை,” என்றார் அவர்.

அம்முடிவிற்கு தமது சொந்த மகள்களான பி. லக்சனா, பி. மிஷந்தரா இருவரும் முகம்சுளிக்காமல் ஆதரவு தெரிவித்தது டெய்சிக்கு ஆச்சரியமளித்தது.

தத்தெடுப்பின் சவால்கள்

ஒரு பிள்ளையைப் பெற்றெடுப்பதைவிட தத்தெடுப்பதே ஆகக் கடினம் என்று எண்ணுகிறார் டெய்சி.

“2017ல் தொடங்கிய தத்தெடுப்புப் பயணம் இவ்வாண்டு மே மாதம்தான் முழுமையாக முடிவடைந்தது. அந்த ஒன்பது ஆண்டுகள் மிகுந்த மனவுளைச்சலுக்கு ஆளானேன்,” என்று அவர் குறிப்பிட்டார்.

ஒற்றைத் தாயாராகவும் இரண்டு பிள்ளைகளுக்குத் தாயாகவும் இருந்ததால் அவர் சமூக, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் பல்வேறு சோதனைகளைக் கடக்க வேண்டியிருந்தது.

ஒரு கட்டத்தில் குழந்தையின் பெற்ற தாயைச் சந்தித்து ஆவணங்கள் சிலவற்றில் கையெழுத்து வாங்கவில்லையெனில் தத்தெடுக்க முடியாமல் போகிவிடும் என்ற நிலைக்கு அவர் தள்ளப்பட்டார்.

“அந்நேரத்தில் என் குழந்தை, டய்ரா டெ மோர்கன், என்னுடன் ஐந்து ஆண்டுகள் வளர்ந்த பிறகு அவளைப் பெற்ற தாயைத் தேடிச் செல்வது என்பது எனக்குப் பயமளித்தது. ஒரு வேளை அந்த அம்மாவிற்கு மனமாற்றம் ஏற்பட்டு மீண்டும் குழந்தை வேண்டுமென்று கூறிவிடுவாரோ என்று அஞ்சினேன்,” என்று டெய்சி சொன்னார்.

மனத்தில் கவலையிருந்தாலும் மலேசியாவில் ஒரு குழு அமைத்து டய்ராவைப் பெற்ற தாயைத் தேடத் தொடங்கினார்.

சில மாதங்களுக்குப் பின்னர் அப்பெண் கண்டறியப்பட்டார். டெய்சியும் டய்ராவும் மலேசியாவிற்கு விரைந்தனர்.

“அவரிடம் நிலைமையை எடுத்துரைக்கும்போது என்னையும்மீறி அழுது அவரை அணைத்துக்கொண்டேன். தாம் என்னிடமிருந்து குழந்தையைப் பிரிக்கப் போவதில்லை என்று அவர் எனக்கு உறுதியளித்தார். குழந்தை நன்றாக பார்த்துக்கொள்ளப்படுவதை அவர் உணர்ந்தார்,” என்று டெய்சி கூறினார்.

பல ஆவண ஒப்படைப்புகளுக்குப் பின்னர் சிங்கப்பூரில் தத்தெடுப்புச் செயல்முறை முடிவடைந்தது. தற்போது டய்ரா தமது ஒன்பதாவது வயதில் தொடக்கப்பள்ளியில் படித்துவருகிறார்.

எதிர்பாரா வகையில் இரண்டாம் தத்துப் பிள்ளை

டய்ராவின் தத்தெடுப்புச் செயல்முறை நடந்துகொண்டிருந்தபோதே கொவிட்-19 நெருக்கடி காலத்தில் மற்றோர் அழைப்பு டெய்சியின் வாழ்வில் அவரது நான்காவது மகளான மஹாலட்சுமி டெ மோர்கனை அறிமுகப்படுத்தியது.

“அந்த அழைப்பு வந்தபோது, முதல் தத்துப் பிள்ளையின் செயல்முறையே முடிவடையாத நிலையில் எப்படி மற்றொரு பிள்ளையைத் தத்தெடுப்பது என்று தயங்கினேன்.

என் நண்பர்கள் பலரிடம் உதவி கோரினேன். கொவிட் காலகட்டம் என்பதால் அனைவரும் நெருக்கடியான சூழ்நிலையில் இருந்தனர். குழந்தையை வேண்டாமென்று கூற எனக்கு மீண்டும் மனம் வரவில்லை,” என்று அவர் கூறினார்.

டய்ராவின் தத்தெடுப்பின்போது சிங்கப்பூரில் எதிர்கொண்ட சவால்களைத் தவிர்க்க, மஹாலட்சுமியின் தத்தெடுப்பை மலேசியாவிலேயே டெய்சி நிறைவு செய்தார். ஆகையால், மஹாலட்சுமி மலேசியக் குடியுரிமை பெற்றுள்ளார்.

நிகழ்காலமும் எதிர்காலமும்

தொடக்கத்தில் டெய்சியின் பெற்றோர் அவரது தத்தெடுப்பு முடிவுக்கு எதிராக இருந்தாலும் தற்போது அதே தத்துப் பிள்ளைகளுடன் அவர்கள் நகமும் சதையுமாகப் பழகுவது அவருக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

இதுவரை இரு குழந்தைகளுக்கும் அவர்கள் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள் என்று தெரியாது.

“அவர்களுக்குத் தந்தை இல்லை, நானே அவர்களது தாயும் தந்தையும் என்றுதான் அவர்களிடம் கூறியுள்ளேன்,” என்று டெய்சி கூறினார்.

ஆனால், சில ஆண்டுகளில் சமூக, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் விதிமுறைகளுக்கு ஏற்ப அவர்களிடம் உண்மையைக் கூற வேண்டிய கட்டாயம் உள்ளதென்று அவர் சொன்னார்.

“அக்கட்டத்தில் அவர்கள் எவ்வாறு வேண்டுமானாலும் நடந்துகொள்ளலாம். தங்கள் சொந்தப் பெற்றோரைச் சந்திக்க விரும்புவது என அவர்கள் எதைச் செய்ய விரும்பினாலும், அவர்களுடன் நிச்சயம் துணைநிற்பேன்,” என்று அவர் உறுதியளித்தார்.

தத்து மகள்களான டய்ரா டெ மோர்கன் (இடது), மஹாலட்சுமி டெ மோர்கன் (வலது) இருவருடன் டெய்சி மோர்கன்.
தத்து மகள்களான டய்ரா டெ மோர்கன் (இடது), மஹாலட்சுமி டெ மோர்கன் (வலது) இருவருடன் டெய்சி மோர்கன். - படம்: செய்யது இப்ராஹிம்
தத்து மகள்கள் டய்ரா டெ மோர்கன் (இடது), மஹாலட்சுமி டெ மோர்கன் (வலது) உடன் டெய்சி மோர்கன்.
தத்து மகள்கள் டய்ரா டெ மோர்கன் (இடது), மஹாலட்சுமி டெ மோர்கன் (வலது) உடன் டெய்சி மோர்கன். -
மஹாலட்சுமி டெ மோர்கனுடன் டெய்சி மோர்கன்.
மஹாலட்சுமி டெ மோர்கனுடன் டெய்சி மோர்கன். - படம்: செய்யது இப்ராஹிம்

சிங்கப்பூரில் தத்தெடுப்பு

சிங்கப்பூரில் குழந்தைகளின் பாதுகாப்பையும் நலனையும் உறுதிசெய்யக் கடுமையான தத்தெடுப்பு நடைமுறைகளும் சட்டங்களும் அமல்படுத்தப்பட்டுள்ளன.

குழந்தைத் தத்தெடுப்புச் சட்டம் 2022ஆம் ஆண்டு புதிய விதிமுறைகளுடன் அமல்படுத்தப்பட்டது. அச்சட்டத் திருத்தம் தத்தெடுப்பு நடைமுறையை குழந்தைகளின் நலனை முதன்மைப்படுத்தும் விதமாக மாற்றியுள்ளது என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு கூறியது.

கட்டாய விளக்கக்கூட்டங்களும் தகுதி மதிப்பீடுகளும் தத்தெடுக்க விரும்புவோர் தங்களின் பொறுப்புகளைப் புரிந்துகொள்ள உதவுவதோடு தத்தெடுப்பில் உள்ள அபாயங்களை முன்பே கண்டறியவும் வழிவகுக்கின்றன.

இது ஆரம்பகட்ட நடைமுறைகளுக்குச் சற்றுக் கூடுதல் காத்திருப்பு நேரத்தை ஏற்படுத்தினாலும், இந்த அணுகுமுறை முறையாக அளவிடப்பட்டுச் செயல்படுத்தப்படுகிறது என்றும் அமைச்சு தெரிவித்தது.

சந்தேகத்திற்குரிய அம்சங்கள் உள்ள விண்ணப்பங்கள் தீவிரமாகப் பரிசீலிக்கப்படும் அதே வேளையில், எவ்விதப் பிரச்சினையும் இல்லாத வழக்கமான விண்ணப்பங்கள் தேவையின்றித் தாமதிக்கப்படுவது தவிர்க்கப்படுகிறது.

தத்தெடுப்புகள் பாதுகாப்பாக, நெறிமுறைகளுக்கு உட்பட்டு, குழந்தையின் சிறந்த எதிர்காலத்தை மையமாகக் கொண்டு அமைவதை உறுதிசெய்வதே இதன் முக்கிய நோக்கம் என்று அமைச்சு சுட்டியது.

எல்லை கடந்த தத்தெடுப்புகளுக்குக் குழந்தைகளைச் சாதாரணமாகச் சிங்கப்பூருக்குள் அழைத்து வர இயலாது.

தத்தெடுக்க விரும்புவோர் முதலில் தகுதியானவர்கள் என்று மதிப்பீடு செய்யப்பட வேண்டும். அதோடு, குழந்தைக்கு, சார்ந்திருப்பவர்க்கான அனுமதிச் சீட்டு (Dependant’s Pass) பெறுவதற்குச் சமூக, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் ஒப்புதலைப் பெற வேண்டும். மேலும், அந்தத் தத்தெடுப்பு சட்டபூர்வமானதென்றும் குழந்தையின் சிறந்த எதிர்காலத்திற்கு உகந்ததென்றும் நீதிமன்றத்திடம் நிரூபிக்க வேண்டும்.

சமூக, குடும்ப மேம்பாட்டு அமைச்சும் தத்தெடுப்புக் காப்பாளரும் (Guardian-in-Adoption) குழந்தையின் அடையாளம், குழந்தையின் சொந்தப் பெற்றோர் அளிக்கும் ஒப்புதல், குழந்தை ஒப்படைக்கப்பட்ட சூழ்நிலைகள் ஆகியவை குறித்துச் சரிபார்ப்பர்.

அத்துடன், தவறான பணப்பரிவர்த்தனைகள், போலித் தகவல்கள் போன்ற சந்தேகத்திற்குரிய முறைகேடுகள் ஏதும் உள்ளனவா என்பதையும் அவர்கள் தீவிரமாகக் கண்காணிப்பர்.

சிங்கப்பூரில் பிள்ளைகளைத் தத்தெடுக்க விரும்புவோர் நான்கு அதிகாரத்துவ தத்தெடுப்பு நிலையங்களை நாடலாம்.

அப்கிம் சமூக சேவைகள் மையம், ஃபெய் யுயே சமூக சேவைகள் நிலையம், லூத்தரன் கேர் சமூக சேவைகள் நிலையம், டச் சமூக சேவைகள் நிலையம்ஆகியவை அந்நிலையங்கள்.

கடந்த மூன்றாண்டுகளில், ஆண்டிற்கு ஏறக்குறைய 275 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டுள்ளதாகச் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்
தத்தெடுப்புசமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுதாய்