சிங்கப்பூரின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும் வெளிநாட்டு ஊழியர்களைக் கௌரவிக்கும் வகையில், மார்ச் 7, 8ஆம் தேதிகளில், பெஞ்சுரு பொழுதுபோக்கு மையத்தில் இரு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இளையர்களால் முன்னெடுக்கப்பட்ட இந்த நிகழ்ச்சிகள், ஊழியர்கள் மத்தியில் நெகிழ்ச்சியையும் சமூக ஒருமைப்பாட்டையும் ஏற்படுத்தும் விதமாக அமைந்தன.
கடந்த மார்ச் 7ஆம் தேதி, ‘ஐம்யூத்’ என்ற இந்திய முஸ்லிம் இளையர்கள் அமைப்பு, வெளிநாட்டு ஊழியர்களுக்கான நோன்பு துறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. அந்த அமைப்பு நான்காவது ஆண்டாக இதற்கு ஏற்பாடு செய்தது.
இந்நிகழ்ச்சியில் 15 வயதிலிருந்து 35 வயதிற்குட்பட்ட இளைய தொண்டூழியர்கள் 80 பேர் பங்கேற்று, உணவுப் பொட்டலங்களை வழங்கினர். வெளிநாட்டு ஊழியர்கள் கிட்டத்தட்ட 2,000 பேர் இதில் கலந்துகொண்டு, ஒன்றாக நோன்பு துறந்தனர்.
“வெளிநாட்டு ஊழியர்களுக்கான இந்த நிகழ்ச்சிக்குக் கடந்த மூன்று ஆண்டுகளாக நல்ல வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து நான்காவது முறையாக இவ்வாண்டும் ஏற்பாடு செய்தோம்,” என்றார் ‘ஐம்யூத்’ அமைப்பின் துணைத் தலைவரான 23 வயது ரிபாயி.
இந்நிகழ்ச்சியில் உணவு பரிமாறியது மட்டுமல்லாமல், இளைய தொண்டூழியர்கள் வெளிநாட்டு ஊழியர்களுடன் ஒரு சிறப்பு அங்கத்தில் இணைந்து அஞ்சல் அட்டைகள் எழுதினர். நிகழ்ச்சியில் வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கசெண்ட்ரா லீ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, ஊழியர்களுடன் கலந்துரையாடினார்.
தொடர்ந்து மார்ச் 8ஆம் தேதி, ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ‘மைகிரேட் ஐஅப்பிரிசியேட்: உடல்நல விழா’ என்ற சுகாதார முகாம் நடைபெற்றது. நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் ரோட்ராக்ட் மன்றமும் லீ கொங் சியான் மருத்துவப் பள்ளியும் இணைந்து இதனை நடத்தின.
ஊழியர்கள் ஏறத்தாழ 300 பேருக்கு ரத்த அழுத்தம், உடல் நிறை குறியீட்டு எண் (BMI), ரத்த சர்க்கரை அளவு போன்றவற்றுக்கான பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
தன்னார்வ மருத்துவர்கள், தாதியர் மூலம் ஊழியர்களுக்குத் தேவையான மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
ஆரோக்கியமான உணவுமுறை, மனநலம், தசைநார் பராமரிப்பு குறித்த விழிப்புணர்வு அரங்கங்களும் அமைக்கப்பட்டிருந்தன.
அனைத்து அரங்கங்களுக்கும் சென்ற ஊழியர்களுக்கு இலவசமாக உணவும் பழங்களும் வழங்கப்பட்டன.
இவ்விரு நிகழ்ச்சிகள் குறித்துப் பேசிய என்டியுசி அமைப்பின் இயக்குநர் இங் சின் ஐன், “பல்வேறு அமைப்புகளின் கூட்டு முயற்சியால் மட்டுமே இத்தகைய பயனுள்ள நிகழ்ச்சிகளை நடத்த முடிகிறது. இது ஊழியர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு, அவர்களுக்கு ஒரு பாதுகாப்பான சூழலையும் உருவாக்குகிறது,” என்று தெரிவித்தார்.
சிங்கப்பூரின் முன்னேற்றத்திற்காக உழைக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக அமைந்த இந்த நிகழ்ச்சிகள், சமூகத்தில் இளையர்களின் ஆக்கபூர்வமான பங்களிப்பையும் பறைசாற்றின.

