உற்சாகத்துடன் தயாராகும் உதய சௌந்தரி

உற்சாகத்துடன் தயாராகும் உதய சௌந்தரி

2 mins read
b308c982-e822-4583-bdd9-3fda72d1a1c8
தேசிய தின அணிவகுப்பு நிகழ்ச்சித் தொகுப்பாளர் குழுவில் இடம்பெற்றுள்ள உதய சௌந்தரி. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் பிரம்மாண்ட மேடையில் நின்று தேசிய தின அணிவகுப்பு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் சிறு வயதுக் கனவு நனவாகியிருப்பதாகப் பரவசத்துடன் தமிழ் முரசிடம் கூறினார் உதய சௌந்தரி.

இதுவரை பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியிருந்தாலும் இந்த வாய்ப்பு வாழ்நாளில் மறக்க முடியாதது என்று விவரித்த இவர், தமக்கு அழைப்பு வந்ததிலிருந்து நிகழ்ச்சிக்காகக் காத்திருப்பது வரை ஏற்பட்ட பலவிதமான உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டார்.

“ஒரு சாதாரண நாளில் வீட்டில் இருந்தபோது, வரும் ஆண்டு தேசிய தின அணிவகுப்பு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க முடியுமா என்று ஏற்பாட்டாளர்கள் கேட்டனர். அதைக் கேட்டதும் எனக்குள் ஏற்பட்ட உற்சாகத்தை அடக்க முடியாமல் தனி அறைக்குச் சென்று ஆர்ப்பரித்து எனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்கொண்டேன்,” என்று புன்னகையுடன் குறிப்பிட்டார் உதயா.

முதலில் ஒரு சிறிய அங்கத்தில் பங்களிக்க அழைப்பு வந்ததாய் நினைத்ததாகவும் தொகுப்பாளர் வாய்ப்பு இரட்டிப்பு மகிழ்ச்சியளித்ததாகவும் இவர் சொன்னார்.

“பள்ளிக் காலத்தில் புதிய இடத்திற்குச் சுற்றுலா செல்வது போன்ற புதுமையான உணர்வுடன் முதன்முதலில் இந்த நிகழ்ச்சித் தயாரிப்புக்கு வந்தேன். சக தொகுப்பாளர்கள் நன்கு அறிமுகமானவர்கள் என்பதால் உடனடியாக அனைவரும் ஒன்றிணைந்துவிட்டோம்,” என்று முதல் நாள் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார் உதயா.

“பிற நிகழ்ச்சிகளைப் போல் அல்லாமல், தேசிய தின நிகழ்ச்சியில் பேசப்படும் ஒவ்வொரு சொற்றொடரும் குறித்த நேரத்தில் திட்டமிட்டபடி பேசப்பட வேண்டும்,” என்றார் இவர்.

“இரண்டு மணி நேரத்திற்கு மேல் மேடையில் பேசி, ஓடி, நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதற்கு அதிக ஆற்றல் அவசியம். இது சவாலாகவும் அதே நேரம் சுவாரஸ்யமாகவும் இருந்தது,” என்று உதயா குறிப்பிட்டார்.

இவ்வாண்டு நிகழ்ச்சியில், கடந்தகாலத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் வரலாற்றை நினைவுகூரும் அங்கம் இடம்பெறுகிறது. அதில், தான் தொடக்கத்தில் நடித்த ‘வேட்டை’ தொலைக்காட்சித் தொடரின் பாடல் இடம்பெற்றிருப்பது, தனது கலைப்பயணம் முழுமையடைந்ததைப் போன்ற உணர்வைத் தந்துள்ளதாக உதயா கூறினார்.

“இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியில் நான் செயல்படும் துறை சார்ந்த அங்கம் இடம்பெறுவதே சிறப்பு. அதிலும் நான் நடித்த நாடகம், அதில் நானே சிறு அங்கத்தில் இடம்பெறுவதும் கூடுதல் மகிழ்ச்சி,” என்றார் இவர்.

இவ்வாண்டு, ஓர் இசை நிகழ்ச்சியைப் போன்று உற்சாகமூட்டும் அங்கங்கள் இடம்பெறுவதாகவும் அவை அனைவருக்கும் பிடித்தவகையில் அமையுமென நம்புவதாகவும் சொன்னார் உதயா.

குறிப்புச் சொற்கள்