கலையின் மேம்பட்ட புரிதல் இளையோர்க்கு அவசியம்

கலாசாரச் சிறப்புத்தொகைத் திட்டம் தொடரவேண்டுமென வல்லுநர்கள் வலியுறுத்து

கலையின் மேம்பட்ட புரிதல் இளையோர்க்கு அவசியம்

3 mins read
f8063d0f-8c46-4d66-a1d2-ecfaf24eacf8
கலாசாரச் சிறப்புத்தொகைத் திட்டம் தாங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் வருகையாளர் எண்ணிக்கையை அதிகரித்துள்ளபோதும் நீண்டகால வளர்ச்சிக்கு விழிப்புணர்வூட்டும் இயக்கங்கள் தேவைப்படுவதாக கலை வல்லுநர்கள் சிலர் தமிழ் முரசிடம் தெரிவித்தனர். (கடிகார முள் திசையில் மேல் இடமிருந்து) லலித் குமார், நிரஞ்சன் பாண்டியன், சலீம் ஹாதி, சங்கரி இளவழகன். - படங்கள்: லலித் குமார், நிரஞ்சன் பாண்டியன், சலீம் ஹாதி, சங்கரி இளவழகன்
Google News Preferred Icon

கலைநிகழ்ச்சிகளை நேரில் கண்டு ரசிக்க சிங்கப்பூரர்களை ஊக்குவிக்கும் கலாசாரச் சிறப்புத்தொகைத் திட்டம் தொடங்கப்பட்டு ஓராண்டு ஆகியும் அதற்காக ஒதுக்கப்பட்ட 300 மில்லியன் வெள்ளி தொகையில் 10 விழுக்காடு மட்டுமே செலவிடப்பட்டுள்ளது.

தொகையைப் பயன்படுத்தியோரில் 43 விழுக்காட்டினர் 18 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். 38 விழுக்காட்டினர் 36 வயதுக்கும் 54 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். 19 விழுக்காட்டினர் 55 வயதுக்கும் மேற்பட்டோர்.

அரசாங்கம் வழங்கும் இந்தச் சலுகையை எல்லா வயதுப் பிரிவினரும் தாமதமாகப் பயன்படுத்தி வருவதை இந்தப் புள்ளிவிவரங்கள் காட்டும் நிலையில், கலைகளை ரசிக்கும் சூழலை உருவாக்க இந்தச் சலுகை போதுமானதா என உள்ளூர்க் கலை வல்லுநர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

நிகழ்ச்சி வருகையாளர்களின் எண்ணிக்கையை இச்சலுகை அதிகரித்திருந்தாலும் கலையார்வத்தை வளர்ப்பதற்கு மேற்கொள்ளப்படவேண்டிய பல்வேறு நடவடிக்கைகளில் நீடித்த சலுகை என்பது ஒன்று மட்டும்தான் என அவர்கள் கூறுகின்றனர்.

நீண்ட காலத்திற்குத் தொடரவேண்டும்

இந்தத் திட்டத்தால் தங்களது பார்வையாளர்களின் எண்ணிக்கை 20, 30 விழுக்காடு கூடியுள்ளதாக அகம் தியேட்டர் லேப் நாடகக் குழுவின் பங்காளித்துவ, தொடர்பு நிர்வாகி சங்கரி இளவழகன் தெரிவித்தார். 

“ஆங்கிலம் - தமிழ் இருமொழிப் படைப்புகளைக் காண, அந்த 100 வெள்ளித் தொகை பார்வையாளர்களுக்கு ஊக்கம் தந்தது. மி‌‌ஷன் மல்லிகைப்பூ போன்ற நிகழ்ச்சிகளுக்கு வந்திருந்தவர்கள், இந்தத் தொகையைப் பயன்படுத்தி 60 வெள்ளி மதிப்பிலான உயர்தர நாற்காலிகளைப் பெற்றனர்,” என்று அவர் கூறினார். 

இந்தத் திட்டம் அடுத்தடுத்த ஆண்டுகளுக்குத் தொடர்ந்து நீடிக்கவேண்டும் என விரும்புவதாகக் கூறிய திருவாட்டி சங்கரி, திட்டத்தின் நற்பலன்கள் மூன்று நான்கு  ஆண்டுகளுக்குள் அடையக்கூடியவை இல்லை என்றும் குறிப்பிட்டார்.

“குறுகிய காலத்தில் ஆரம்பகட்ட ஆர்வத்தைத் தூண்டத்தான் முடியும். பண்பாடு மீதான ரசனையை நிலையாக உருவாக்க முடியாது,” என்று அவர் கூறினார். 

புதியவர்களை நிகழ்த்துகலை நிகழ்ச்சிகளுக்கு ஈர்க்க கலாசாரத் தொகுப்புத் திட்டம் உதவியுள்ளதாக உள்ளூர் தபேலாக் கலைஞரும் நிகழ்ச்சி இயக்குநருமான லலித் குமாரும் கூறுகிறார்.

நிகழ்ச்சிகளில் சிறிதளவு ஆர்வம் காட்டுவோரைத் தூண்ட இந்தத் திட்டம் பேருதவியாக இருப்பதாகத் திரு லலித் குறிப்பிட்டார். “என்எஃப்டி உள்ளிட்ட மின்னிலக்க வரைகலைத் தளங்களுக்கும் இந்தத் திட்டத்தை விரிவுபடுத்தலாம்,” என்று அவர் பரிந்துரைத்தார்.

இருப்பினும், மற்றவர்கள் 10 விழுக்காட்டுக்குக் குறைவான பயன்பாட்டு விகிதத்தை அமைப்பு ரீதியான குறைபாடுகளின் ஆதாரமாகக் கருதுகின்றனர்.

விலைகளைக் கடந்தது விருப்பம்

நுழைவுச்சீட்டுகள் குறைந்த விலையில் கிடைத்தால் மட்டும் ஆர்வம் தானாக வளர்ந்துவிடாது என்கிறார் கலை மேலாளர் நிரஞ்சன் பாண்டியன். 

குடும்பங்களுக்குப் பதிலாகத் தனிநபர் சிங்பாஸ் (Singpass) கணக்குகளுக்கு மட்டுமே இதனைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவது போன்ற நிர்வாகச் சிக்கல்களால் இந்தத் திட்டம் பாதிக்கப்படுகிறது என்றும், இது கலைநிகழ்ச்சிகளுக்கு இணைந்து செல்வதிலுள்ள சமூக அம்சத்திற்குத் தடையாக உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நுழைவுச்சீட்டுகளுக்காக வழங்கப்படும் அளவுக்கு அதிகமான மானியம், கலைநிகழ்ச்சிகளுக்கான இயற்கையான வரவேற்பு குறைவு என்ற எண்ணப்போக்கை வளர்த்துவிடக்கூடும்  என்று திரு நிரஞ்சன் கருதுகிறார்.

கலைநிகழ்ச்சியைக்  காண்பதில் இளையருக்கு நிதிப் பற்றாக்குறை முதன்மையான தடை இல்லை என்பதை நாடகக் கலைஞர் சலீம் ஹாதி ஏற்றுக்கொண்டார். 

இளையர்களில் பலர் கரோக்கே, மின்னிலக்க இசைக்காணொளி உருவாக்கம் போன்ற மற்ற வகையான கலைகளை விரும்புவதாக அவர் குறிப்பிட்டார். மேலும், “இளையர்கள் உண்மையில் கலந்துகொள்ள விரும்பும் பல்வேறு நிகழ்ச்சிகளைக் கடுமையான தகுதி விதிகள் பெரும்பாலும் விலக்கிவிடுகின்றன,” என்றார் அவர்.

இளையர்கள் உண்மையில் கலந்துகொள்ள விரும்பும் நிகழ்ச்சிகளுக்கு, கலாசார சிறப்புத்தொகை கிடைப்பது கடினமாக இருப்பதாகவும் திரு சலீம் கூறுகிறார். 

விலைக்கழிவுகளை விளம்பரப்படுத்துவதற்குப் பதிலாக, புதிய கலாசார அனுபவங்கள் அவர்களின் எதிர்காலத்திற்கு எவ்வாறு நன்மை தரும் என்பதை எடுத்துரைக்கும் நாடளாவிய பிரசாரங்களை மேற்கொள்ளுமாறு திரு சலீம் வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்