பக்திக்கும் இசைக்கும் எல்லையும் கட்டுப்பாடும் இல்லை என்பதை உணர்த்தும் விதமாக ‘திரையிசையில் திருமால் பக்தி’ எனும் மாறுபட்ட இசை நிகழ்ச்சி நடந்தேறியது.
சமூக ஊடகப் பிரபலம் சுபஸ்ரீ தணிகாசலம் குழுவினர் நடத்திய இந்த நிகழ்ச்சியில் திரைப்படங்களில் இடம்பெற்ற திருமால் பக்திப் பாடல்கள், அவை தொடர்பான பக்திக் கதைகள், இசை குறித்த விளக்கங்கள் பகிரப்பட்டன.
அன்பர்களை இசையிலும் பக்திக் கதைகளிலும் திளைக்கச் செய்ய இந்து அறக்கட்டளை வாரியம் ஏற்பாடு செய்த அந்நிகழ்ச்சி, வைகுண்ட ஏகாதசி தினத்தன்று (ஜனவரி 10) இரவு 7 மணியளவில் பிஜிபி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
நாலாயிர திவ்யப் பிரபந்தப் ‘பல்லாண்டு’ பாசுரங்கள் பாடி அன்பர்களைத் தங்கள் பக்திப் பயணத்தில் முதலடி எடுத்து வைக்கச் செய்தார் பாடகர் ஷ்ரவன். ‘மாதங்களில் நான் மார்கழி’ என்ற கண்ணனின் வாக்கியத்தைக் கூறி, அந்த மாதத்தின் மகிமை, அது தொடர்பான நம்பிக்கைகளையும் பகிர்ந்தார் சுபஸ்ரீ.
அடுத்தடுத்து, திருப்பாவைப் பாசுரங்கள் பாடப்பட்டு, அவற்றுக்குத் திரையிசையில் கொடுக்கப்பட்ட மறுவடிவம் குறித்த கூடுதல் தகவல்களும் பகிரப்பட்டன.
அம்மன், முருகன், சிவன் உள்ளிட்ட பிற தெய்வங்கள் குறித்த திரைப்படங்களைக் காட்டிலும் திருமால் பக்தி குறித்து வெளிவந்த படங்கள் அதிகம் என்று சொன்ன சுபஸ்ரீ, அதில் பல்வேறு சிறந்த பாடல்களும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது என்றார்.
‘பக்தப் பிரகலாதன்’ படம் குறித்து பேசியதுடன், அதில் இடம்பெற்ற கருநாகம் சார்ந்த காட்சிகள் படமாக்கப்பட்டபோது நிகழ்ந்த சுவாரஸ்யமான சம்பவங்களைப் பகிர்ந்து அரங்கைச் சிரிப்பலையில் ஆழ்த்தினார்.
கண்ணதாசன், வாலி உள்ளிட்டோரின் வரிகளில் இசை மேதைகளின் படைப்பில் வெளிவந்த வரிகளைப் பற்றி சிலாகித்துப் பேசியது அரங்கைக் கட்டிப்போட்டது.
தொடர்புடைய செய்திகள்
ஸ்ரீராகவேந்திரர் திரைப்படத்தில் வெளிவந்த ‘ராம நாமம் ஒரு வேதமே’ எனும் பாடலை ஷ்ரவன் பாட, அதில் குறுகிய வரிகளில் முழு ராமாயணக் கதையும் சொல்லப்பட்டிருப்பதை விளக்கினார் சுபஸ்ரீ.
தொடர்ந்து, ‘திருமால் பெருமைக்கு நிகரேது’ பாடல், திருமாலின் பத்து அவதாரங்கள் குறித்த பாடல் பங்கேற்பாளர்களை பக்தியில் திளைக்கச் செய்தது.
தனக்கு இசை மீது ஆர்வம் அதிகம் என்பதால் நிகழ்ச்சியைக் காண வந்ததாகச் சொன்னார் பங்கேற்பாளர் தர்ஷினி தேவி.
“இதுபோன்ற நிகழ்ச்சியை முதன்முறையாகக் காண்கிறேன். கதையுடன் பாடல் இணைந்து வழங்கப்படுவது சிறப்பு. இச்சிறப்பான நாளன்று இங்கு வந்ததில் மகிழ்ச்சி,” என்று அவர் சொன்னார்.
“கோவிலுக்கு வந்தபோது இந்த நிகழ்ச்சி குறித்து அறிந்தேன். பழைய பாடல்கள் எனக்குப் பிடிக்கும். அதில் திருமால் குறித்த பாடல்கள் என்றவுடன் வந்து விடுவதென முடிவெடுத்தேன்,” என்றார் மென்பொருள் துறை ஊழியர் சுப்ரமணிய சிவா, 46.
“சிறுவயதில் கேட்டு ரசித்த பாடல்களின் பிற பரிமாணங்கள் குறித்து அறிந்துகொண்டது நல்ல அனுபவம். சில பாடல்கள் என்னை மலரும் நினைவுகளுக்கு இட்டுச் சென்றன,” என்றும் சொன்னார்.
நானும் என் மனைவி சாந்தியும் பாடகர் ஷ்ரவன் குரலுக்கு ரசிகர்கள். அவரது பாடல்களைக் கேட்பதற்காகவே வந்தோம்,” என்றார் ஹவ்காங்கிலிருந்து வந்திருந்த ராஜகோபால்.
ஒரு நன்னாளில், இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது சிறப்பு என்று சொல்லி குழுவினருக்குத் தங்கள் வாழ்த்துகளையும் பகிர்ந்தனர் அந்த இணையர்.