இன நல்லிணக்கத்தை வளர்த்த போட்டி

இன நல்லிணக்கத்தை வளர்த்த போட்டி

1 of 3
படம்: சிண்டா
படம்: சிண்டா
படம்: சிண்டா

25 Jun 2026 - 5:49 am

2 mins read

விவேகத்தையும் விடாமுயற்சியையும் வளர்க்கும் காற்பந்தாட்டத் திடலில், வேற்றுமைகளைக் கடந்து பல இனங்களைச் சேர்ந்த குழந்தைகளை ஒரே களத்தில் ஒன்றிணைத்துச் சமூக நல்லிணக்கத்தை ஆழமாக விதைக்க உதவியது ‘யூனிட்டி’ காற்பந்துக் கிண்ணப் போட்டி.

ஆறு முதல் 13 வயது வரையிலான மாணவர்களுக்காக இரண்டு நாள்கள் நடந்தேறிய போட்டியின் இறுதிச்சுற்று ஜூன் 23ஆம் தேதி நடைபெற்றது.

சீனர் மேம்பாட்டு உதவி மன்றம், யூரேசியர் சங்கம், சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் (சிண்டா), மெண்டாக்கி ஆகிய அமைப்புகள் இணைந்து போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தன.

போட்டியின் பரிசளிப்பு விழாவில் மனிதவள, கலாசார, சமூக, இளையர்துறைத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.

“ஒன்றுபட்ட உணர்வுகள், அனுபவங்கள் மூலம் சமூகங்களை ஒன்றிணைப்பதன் மதிப்பை இப்போட்டி எடுத்துக்காட்டுகிறது,” என்றார் திரு தினேஷ்.

சிறாரிடையே இன நல்லிணக்கத்தையும் நட்புணர்வையும் வளர்க்கும் நோக்கத்துடன் ‘யூனிட்டி’ காற்பந்துப் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

அப்போட்டியில், பல இனங்களையும் சமூகங்களையும் சேர்ந்த ஏறத்தாழ 80 குழந்தைகள் பங்கேற்றனர். அவர்கள் வேறுபாடுகளைக் கடந்து, ஒன்றாகப் பயிற்சி செய்து போட்டியிட்டனர்.

“போட்டியில் கலந்துகொள்ளும் மாணவர்கள் பல இனத்தவர்களுடன் ஒன்றிணைந்து விளையாடும்பொழுது உறவுப்பாலம் இன்னும் வலுவடைகிறது. அத்துடன், சோதனைகள் வரும்போது அவற்றைச் சாதனையாக மாற்றக்கூடிய மனவலிமையையும் மனவுறுதியையும் அவர்கள் வளர்த்துக்கொள்கின்றனர்,” என்று சிண்டா தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன் தெரிவித்தார்.

“இப்போட்டியில் பங்கேற்றதன்மூலம் நான் பல இனத்தாருடன் நட்புறவை வளர்த்துக்கொண்டேன்.

“தோல்விகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை, குழுப்பணியில் ஈடுபடுவது போன்ற விழுமியங்களையும் நான் இப்போட்டிவழி கற்றுக்கொண்டேன்,” என்று குறிப்பிட்டார் 11 வயது மாணவி றோய் நிக்சன் சஞ்சிகா.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்