நிகரற்ற அனுபவத்தைத் தந்த உலகக் கிண்ணப் பயணம்

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியை நேரில் கண்டு களித்த சிங்கப்பூர் இந்தியர்கள்

நிகரற்ற அனுபவத்தைத் தந்த உலகக் கிண்ணப் பயணம்

1 of 3
படம்: சங்கர் செல்வம்
படம்: சங்கர் செல்வம்
படம்: சசிகுமார் விசுவநாதன்

12 Jul 2026 - 6:00 am

3 mins read

சிறு வயதுக் கனவு நிறைவேறும்போது அதன் காரணமாக ஏற்படும் மட்டற்ற மகிழ்ச்சியை வெறும் வார்த்தைகளால் வர்ணித்துவிட முடியாது. அதிலும், காற்பந்துத் திருவிழாவான உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியை நேரில் காணும் வாய்ப்பு கிடைக்கும்போது அந்தக் களிப்புக்கு ஈடே கிடையாது.

1990ஆம் ஆண்டு இத்தாலியில் நடைபெற்ற உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியைத் தொலைக்காட்சியில் பார்த்து, அதில் ஈர்க்கப்பட்ட திரு சங்கர் செல்வம், பெரியவரானதும் அந்தப் போட்டியை நேரில் சென்று பார்க்க வேண்டும் என்று உறுதிபூண்டார். உயர்நிலை 2ல் பயின்றபோது அவர் மனத்தில் விதைக்கப்பட்ட அந்த ஆசை அண்மையில் நிறைவேறியது.

ஆசிரியராகப் பணியாற்றும் சிங்கப்பூரரான 49 வயது திரு சங்கர், தமது நண்பர்களான திரு கோபால், திரு சரவணன் நராஜா இருவருடனும் கனடாவில் இவ்வாண்டின் உலகக் கிண்ணப் போட்டியின் இரு ஆட்டங்களை நேரில் கண்டு ரசித்தார்.

உலகக் கிண்ணப் போட்டியை அவர் நேரில் பார்ப்பது இது மூன்றாவது முறை.

அவருக்கு மிகவும் பிடித்த பிரேசில், 2014ஆம் ஆண்டில் போட்டியை ஏற்று நடத்தியது. அப்போது பிரேசிலுக்குப் பயணம் மேற்கொண்டார் திரு சங்கர். பிறகு, 2018ல் ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற போட்டியை நேரில் பார்த்து, கொண்டாட்ட மழையில் நனைந்தார் திரு சங்கர்.

இம்முறை கனடாவில் நடந்த பனாமா-கானா இடையிலான ஆட்டத்தையும் நியூசிலாந்துக்கு எதிராக எகிப்து களமிறங்கிய ஆட்டத்தையும் கண்டு களித்தார்.

“விளையாட்டரங்கில் நிலவும் சூழல் அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தக்கூடியது. உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி என்பது காற்பந்து ஆட்டத்துடன் முடிந்துவிடுவதில்லை. விளையாட்டரங்கங்களுக்குச் செல்லும்போது உலகெங்கும் உள்ள காற்பந்து ரசிகர்களைச் சந்திக்க முடிகிறது. ஒவ்வொரு நாட்டையும் சேர்ந்த ரசிகர்களுக்கெனத் தனித்துவம்வாய்ந்த ‘காற்பந்துக் கலாசாரம்’ உள்ளது. அவர்கள் ஆடி, பாடிக் கொண்டாடுவதைப் பார்க்கும்போது அந்த உணர்வு பார்ப்பவர்களையும் தொற்றிக்கொள்ளும்,” என்றார் திரு சங்கர்.

“கனடா சென்று போட்டியைக் காண நாங்கள் ஒவ்வொருவரும் ஏறத்தாழ $5,000 செலவு செய்தோம். ஆனால், எங்களுக்குக் கிடைத்த மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவம் ஈடு இணையற்றது,” என்றார் தொழில்நுட்பக் கல்விக் கழக விரிவுரையாளரான 46 வயது திரு கோபால்.

“ஒவ்வோர் ஆட்டமும் தனித்துவம் வாய்ந்தது. அந்த அனுபவத்தை ஒவ்வொரு காற்பந்து ரசிகரும் பெற வேண்டும்,” என்றார் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணைய அதிகாரியான 46 வயது திரு சரவணன் நராஜா. தங்களது உலகக் கிண்ணப் பயணம் இத்துடன் முடிந்துவிடாது என்று திரு சங்கரும் அவரது இரு நண்பர்களும் கூறினர். 2030ஆம் ஆண்டு நடைபெற உள்ள உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக்குக் குடும்பத்தினருடன் செல்வது அவர்களது இலக்கு. அப்போட்டியை ஸ்பெயின், போர்ச்சுகல், மொரோக்கோ ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து ஏற்று நடத்த உள்ளன.

இவ்வாண்டின் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியை நேரில் சென்று ரசித்த சிங்கப்பூர் இந்தியர்களில் 41 வயது திரு சசிகுமார் விசுவநாதனும் அவரது உறவினரான 40 வயது திரு ரமேஷ் கோவிந்தனும் அடங்குவர்.

அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனம் (ஃபிஃபா) நடத்திய நுழைவுச்சீட்டுக் குலுக்கலில் வெறுங்கையுடன் திரும்பியது, பொதுப் பயனீட்டுக் கழகத்தின் உதவி இயக்குநராகப் பதவி வகிக்கும் திரு சசிகுமாருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

இருப்பினும், கடைசிக்கட்ட விற்பனையில் நியூயார்க் நகரில் பிரான்சுக்கும் செனகலுக்கும் இடையிலான ஆட்டத்தைக் காண அவர்களுக்கு நுழைவுச்சீட்டுகள் கிடைத்தன.

திரு ரமேஷுக்கு மிகவும் பிடித்தமான பிரான்ஸ் குழு, அந்த ஆட்டத்தில் 3-1 எனும் கோல் கணக்கில் வாகை சூடியது பயணத்தை மேலும் இனிமையாக்கியதாகத் திரு சசிகுமார் குறிப்பிட்டார்.

ஆட்டங்களை நேரில் பார்த்ததுடன் இருவரும் போட்டியை ஏற்று நடத்தும் அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளெங்கும் பயணம் மேற்கொண்டனர்.

“நானும் ரமேஷும் சிறுவர்களாக இருந்தபோது இரவு நேரங்களில் தூக்கத்தின் பிடியிலிருந்து எப்படியோ தப்பித்து உலகக் கிண்ண ஆட்டங்களைப் பார்த்து மகிழ்ந்தோம். அப்போது, என்றைக்காவது ஒருநாள் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியை ஒன்றாக நேரில் காண்போம் என்று உறுதிபூண்டோம். அது 2018ஆம் ஆண்டில் ரஷ்யாவில் நிறைவேறியது. ரஷ்யாவிலிருந்து சிங்கப்பூர் திரும்புவதற்கு முன்பு அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகள் ஏற்று நடத்தும் உலகக் கிண்ணப் போட்டியை நேரில் காண இலக்கு வகுத்தோம். அதுவும் இப்போது நிறைவேறிவிட்டது.

“உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி, பல நாடுகள், பல்லின, பல சமய, பல பின்னணிகளைச் சேர்ந்த மக்களை ஒன்றிணைக்கும் ஓர் உன்னதத் திருவிழா,” என்றார் திரு சசிகுமார்.

குறிப்புச் சொற்கள்
உலகக் கிண்ணம்அனுபவம்சிங்கப்பூரர்காற்பந்து