ஈன்றெடுத்த அன்னைக்கு ஈடு இணையற்ற அன்பளிப்பு

ஈன்றெடுத்த அன்னைக்கு ஈடு இணையற்ற அன்பளிப்பு

2 mins read
f81ebaaa-61fd-436f-9a3a-f76c2f364658
அன்னைக்கு அன்பளிப்பு வழங்கும் பிள்ளை - படம்; பிக்ஸார்பேய்

அன்பு, அரவணைப்பு, தியாகம் முதலிய நற்பண்புகள் யாவையும் உள்ளடக்கும் ஒரு சொல், அன்னை எனும் திருச்சொல்.

ஆண்டுதோறும் நம்மை அயராது அரவணைக்கும் அன்னைகளைக் கொண்டாடும் பொன்னாள், அன்னையர் தினம் எனும் இந்நாள்.

ஒவ்வோர் ஆண்டும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை, நம் அன்னையர்க்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டின் அன்னையர் தினத்தன்று உங்கள் அன்பை வெளிப்படுத்தும் வகையில் அன்பளிப்புகளை வழங்கலாம்.

உங்களுக்காக, சில யோசனைகள்:

விலைமதிப்பற்ற பரிசு

அன்பு தோய்ந்த வார்த்தைகளை எழுத்தில் வடித்துக் கடிதமாய் அனுப்பிப் பாருங்கள். விலையுயர்ந்த பரிசுப் பொருளைவிட உயர்ந்தது, கைப்பட நீங்கள் எழுதும் கடிதம். கவிதையோ, உரைநடையோ, உங்கள் உணர்வுகளின் உண்மையை உரக்கச் சொல்லுங்கள்.

நேரமே அன்பின் வெளிப்பாடு

அதிவேகத்தில் சுழன்றுகொண்டிருக்கும் நம் புவியில் பணம் கொடுத்துத் திரும்பப் பெற முடியாத ஒன்று, நேரம். பொன், பொருள் இல்லை என்றால் என்ன? இந்த அன்னையர் தினத்தன்று உங்கள் தாயாருடன் நேரம் செலவிடுங்கள். வீட்டில் அவருக்குப் பிடித்த உணவுப் பண்டங்களைச் செய்தோ அவருக்குப் பிடித்த இடத்திற்குச் சென்றோ பேசி மகிழுங்கள்.

ஓய்வின்றி உழைக்கும் அன்னைக்கு ஓய்வே அன்பளிப்பு

எந்த எதிர்பார்ப்பும் இன்றி அயராது உழைக்கும் அன்னைக்காக ஒருநாள் நாம் ஓய்வு கொடுப்போமே! அவருக்குப் பிடித்த உணவைச் சமைத்துக் கொடுத்து, குடும்பத்தினருடன் ஒன்றாகச் சுவைக்கலாம். பிறகு, அவருடன் ‘ஸ்பா டே’ (Spa day) சென்று இளைப்பாறலாம். வீட்டிலோ திரையரங்கிலோ திரைப்படம் கண்டு மகிழலாம்.

இயற்கையை ரசிக்கும் அன்னைக்கான சிறப்பு அன்பளிப்பு

இயற்கைக் காற்றில் பாரங்களை இறக்கிவைத்து ரசிக்க விரும்பும் உங்கள் அன்னையுடன் சிங்கப்பூரில் நீங்கள் பல இடங்களுக்குச் செல்லலாம். மண்டாயில் உள்ள ‘ரெயின்ஃபாரஸ்ட் வைல்ட் ஏஷியா’ (Rainforest Wild Asia) விலங்கியல் பூங்காவிற்குச் சென்று நேரம் கழிக்கலாம். மெக்ரிச்சி நீர்த்தேக்கம் அல்லது புக்கிட் தீமா இயற்கை வனப்பகுதி போன்ற இயற்கையான இடங்களுக்கும் செல்லலாம்.

வெகுதூரத்தில் இருக்கும் அன்னைக்கான அன்பளிப்பு

அன்னையிடமிருந்து பிரிந்து வெளிநாட்டில் இருப்பவராக நீங்கள் இருக்கலாம். ஆனால் அன்பு, தொலைதூரங்களையும் கடந்து செல்லும். அன்னையுடன் எடுத்திருக்கும் புகைப்படங்களையும் காணொளிகளையும் தொகுத்து, சிறப்புக் காணொளி ஒன்றை நீங்களே தயாரிக்கலாம். அதில் உங்கள் குரலில் நீங்களே அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து அனுப்பலாம். ஆயிரம் மைல் தூரத்தில் இருந்தாலும் அன்புக்கு எல்லை இல்லை என்பதை இது வெளிப்படுத்தும்.

குறிப்புச் சொற்கள்