நவீனத் தொழில்நுட்ப உலகில், பெரும்பாலான இளையர்கள் ஆபத்தான தருணங்களைக் கைப்பேசிகளில் படம்பிடித்துப் பகிரத் துடிக்கும் வேளையில், சக மனிதனின் உயிரைக் காப்பதற்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதைச் செயலில் காட்டியிருக்கிறார் செயிண்ட் ஆண்ட்ரூஸ் தொடக்கக்கல்லூரி மாணவர் ஒருவர்.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வேளையில், ஜூராங் வெஸ்ட் பகுதியில் நிகழ்ந்த சம்பவம் ஒன்று, இன்றளவும் மனிதநேயம் உயிர்ப்புடன் இருப்பதை உலகிற்குப் பறைசாற்றியுள்ளது.
மனிதநேயம் வெளிப்பட்ட தருணம்
செயிண்ட் ஜோசஃப் கல்வி நிலையத்தில் பள்ளிப் படிப்பை முடித்து, தற்போது செயிண்ட் ஆண்ட்ரூஸ் தொடக்கக்கல்லூரியில் பயின்று வருகிறார் கேலன் ஏரன் குணாளன்.
ஜூராங் வெஸ்ட் ஸ்திரீட் 41ல் உள்ள புளோக் 464ல் வசித்துவரும் அவர், ரக்பி விளையாட்டிலும் மேடை நாடகக்கலையிலும் ஆர்வம் கொண்டவர்.
இவ்வாண்டு ஜனவரி 31ஆம் தேதி, தேவாலயத்திற்குச் சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்புகையில் புளோக்கிற்கு கீழே உணவுக் கடையில் உணவு வாங்கினார் கேலன்.
அப்போது சுட்டெரிக்கும் வெயிலில் புளோக்கின் கீழே உள்ள பூங்காவில் இரண்டு அல்லது மூன்று வயதுடைய பிள்ளை ஒன்று அணையாடையுடன் தனியாக நிற்பதை அவர் கண்டார்.
ஏதோ அசாதாரணமாக இருப்பதை உணர்ந்த கேலன், பூங்காவைச் சுற்றியுள்ள இடங்களில் பிள்ளையின் பெற்றோரைத் தேடினார்.
அங்கு யாரும் இல்லாததால் உடனடியாக அவர் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
காவல்துறையின் அறிவுறுத்தலின்படி பிள்ளை அவ்விடத்தைவிட்டு வேறு எங்கும் செல்லாதவாறு அவர் கண்காணித்து வந்தார்.
அப்பிள்ளை மெதுவாகப் படிக்கட்டுகளில் ஏறி இரண்டாவது தளத்தில் உள்ள ஒரு வீட்டுக்குள் சென்றதைக் கண்ட கேலன், அப்பிள்ளையைப் பின்தொடர்ந்தார்.
அந்த வீட்டின் கதவுகள் திறந்திருந்ததாகவும் தொலைக்காட்சியும் மின்விசிறியும் இயங்கிக்கொண்டிருந்ததாகவும் அவர் தமிழ் முரசிடம் கூறினார்.
காவல்துறையினரிடம் தொலைபேசியில் கேலன் நிலைமையை விளக்கிக்கொண்டிருந்தார். அப்போது, பிள்ளை திடீரென வீட்டிற்குள் இருந்து கூர்மையான கத்தரிக்கோலை எடுத்துக்கொண்டு, வாகனங்கள் நிறுத்தும் இடத்திற்கு அருகில் இருந்த சாலையை நோக்கி ஓடியது.
பிள்ளையின் செயலால் பதற்றமடைந்த கேலன், குழந்தையைப் பின்தொடர்ந்து ஓடினார்.
ஒரு கார் பிள்ளைமீது மோதவிருந்த தறுவாயில், விரைந்து செயல்பட்டு பிள்ளையைக் காப்பாற்றினார் கேலன். பின்னர், கத்திரிக்கோலைப் பிடுங்கி, அழுத பிள்ளையைத் தூக்கிக்கொண்டு தமது புளோக்கிற்கு அவர் திரும்பினார்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினரிடம் கேலன், பிள்ளையை ஒப்படைத்தார்.
பிள்ளையின் தற்போதைய நிலை குறித்து அறிய காவல்துறையைத் தமிழ்முரசு தொடர்புகொண்டது.
பிள்ளை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர்கள் சற்றுக் கண்ணயர்ந்த நேரம் பிள்ளை வீட்டைவிட்டு வெளியேறியதாகவும் காவல்துறை தெரிவித்தது.
வரும் காலங்களில் பிள்ளையைக் கூடுதல் கவனத்துடன் பார்த்துகொள்ளப்போவதாய்ப் பெற்றோர் உறுதியளித்ததாகவும் அது கூறியது.
காவல்துறையின் சான்றிதழும் பாராட்டும்
சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்குப் பிறகு, ஜூரோங் காவல் பிரிவின் உயரதிகாரி ஒருவர், கேலனைத் தொடர்புகொண்டு, அவரின் மனித நேயத்தைப் பாராட்டிப் பொதுநலச் செயலுக்கான சான்றிதழை வழங்கப்போவதாகச் சொன்னார். அதனைத் தொடர்ந்து மார்ச் மாதம் அவருக்குச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
கேலனுக்குச் சான்றிதழ் கிடைத்த தகவல், காவல்துறையின் சமூகப் பக்கங்களிலும் ‘ஒலி 968’ வானொலியிலும் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்றது.
“தங்களைத் தாண்டி பிறரைப் பற்றிச் சிந்திக்கும் தலைவர்களை உருவாக்க நாங்கள் விழைகிறோம். கேலனின் செயல் எங்கள் கல்வி நிறுவனத்தின் விழுமியங்களை வெளிப்படுத்துகிறது. அவரின் இந்த மனிதநேயச் செயல், அவரது சக மாணவர்களையும் சமூகத்தையும் அதே போன்ற சேவை மனப்பான்மையுடன் செயல்பட ஊக்குவிக்கும் என நாங்கள் நம்புகிறோம்,” என்று செயிண்ட் ஆண்ட்ரூஸ் தொடக்கக் கல்லூரியின் முதல்வர் தாம் கைன் தோங் தெரிவித்தார்.
“பொது இடத்தில் மற்றவர்கள் ஆபத்தில் சிக்கியிருந்தால் அத்தகைய சம்பவங்களைக் கைப்பேசியில் பதிவுசெய்வதைத் தவிர்த்து, அவர்களுக்கு உடனடியாகத் தேவையான உதவியை எவ்வாறு வழங்க முடியும் என்பதைச் சிந்திக்க வேண்டும். மேலும் இளையர்கள் எந்நேரமும் கைப்பேசியிலேயே மூழ்கி இருக்காமல் நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதில் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்,” என இளையர்களுக்கு கேலன் அறிவுரை வழங்கினார்.
மகனின் மனிதநேயச் செயலை நினைத்துப் பெருமைப்படுவதாகக் கூறினார் கேலனின் தாயார் ஜசிந்தா மேரி வின்சென்ட் ஃபிரான்சிஸ், 44. கேலன் தொடர்ந்து அதுபோன்ற மனிதநேயச் செயல்களில் ஈடுபட்டுச் சமூக நலனில் அக்கறை கொண்டிருக்க வேண்டும் என்பது அவரின் விருப்பம்.

