உலகக் கிண்ணக் காற்பந்து குறித்த ஓர் அலசல்: தமிழ் முரசின் சிறப்பு வலையொளி

உலகக் கிண்ணக் காற்பந்து குறித்த ஓர் அலசல்: தமிழ் முரசின் சிறப்பு வலையொளி

2 mins read
cd24327d-7718-4635-a99f-99f02fb4493b
உலகக் கிண்ணப் போட்டி குறித்தும் சிங்கப்பூர்க் காற்பந்தின் எதிர்காலம் குறித்தும் (வலமிருந்து) திரு கௌசிகன் யோகநாதன், திரு த.ராமு, திரு முகம்மது அல் அமீன் மரிக்கார் ஆகியோர் தமிழ் முரசு செய்தியாளர் யுகேஷ் கண்ணனுடன் (இடக்கோடி) தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். - படம்: த. கவி

​நான்காண்டுகளுக்கு ஒருமுறை உலகமே எதிர்பார்த்துக் காத்து நிற்கும் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகள் வெள்ளிக்கிழமை (ஜூன் 12) தொடங்கவிருக்கின்றன.

​இவ்வாண்டின் போட்டியில் பற்பல புதிய அம்சங்களும் திருப்பங்களும் அறிமுகம் காணவுள்ள நிலையில், காற்பந்தாட்டத்துடன் நெருங்கிய பிணைப்பு கொண்ட சிங்கப்பூரர் மூவரின் கருத்துகளைத் தமிழ் முரசு கேட்டறிந்தது.

​முன்னாள் காற்பந்தாட்ட விளையாட்டாளரும் இந்நாள் பயிற்றுவிப்பாளருமான த.ராமு, 55, இவ்வாண்டு 48 அணிகள் களமிறங்குவதால் போட்டியைக் காண உற்சாகத்துடன் காத்திருப்பதாகக் கூறினார்.

​“எனக்கு எப்போதும் பிடித்தமான அணி பிரேசில்தான். சிறு வயதிலிருந்தே எனக்கு அவர்களைப் பிடிக்கும்,” என்று அவர் கூறினார்.

​“அவர்கள் தற்போது கிண்ணத்தை வெல்வது சற்றுக் கடினமாக இருக்கலாம். ஆனாலும் அவர்கள் கிண்ணத்தைத் தட்டிச் செல்ல வேண்டுமென விரும்புகிறேன்,” என்றார் அவர்.

​பொதுவாகப் பலரும் பிரேசில், நெதர்லாந்து போன்ற நாடுகளுக்கு ஆதரவு அளித்தாலும் ஆசிய நாடான ஜப்பானுக்கே தனது ஆதரவு என்று கூறினார் காற்பந்துப் பயிற்றுவிப்பாளர் முகம்மது அல்-அமீன் மரிக்கார், 38.

​“இந்த ஆண்டு ஜப்பான் ஒரு வலுவான அணியாக இருக்கும் என்று நினைக்கிறேன். அண்மையில்கூட நன்றாக விளையாடி இங்கிலாந்தை வென்றிருக்கிறார்கள்.

“அதுமட்டுமன்றி அது ஓர் ஆசிய அணி என்பதால் நமக்குப் பெருமை. எனவே அவர்கள் நிச்சயமாக நன்றாக விளையாடுவார்கள் என்று நினைக்கிறேன்,” என அவர் குறிப்பிட்டார்.

​இவ்வாண்டுப் போட்டியில் ஜெர்மனி, ஸ்பெயின் அணிகள் நன்கு விளையாடுமென நம்பிக்கை கொண்டுள்ளார் தேசிய உள்ளரங்கு ஹாக்கி வீரரும் தீவிர காற்பந்து ரசிகருமான கௌசிகன் யோகநாதன், 23.

​“இவ்விரண்டு அணிகளும் சிறந்த கட்டமைப்புடனும் துடிப்புடனும் விளையாடுகிறார்கள் என்று தோன்றுகிறது. எனவே அவ்விரு குழுக்கள் விளையாடுவதைப் பார்க்க ஆசையாக உள்ளது,” என்று அவர் சொன்னார்.

​முதன்முறையாக 48 அணிகள் பங்கெடுப்பது பல சிறிய நாடுகளுக்கு நல்லதொரு வாய்ப்பாக அமைந்துள்ளதென மூவரும் கருதுகின்றனர்.

​“இந்தப் போட்டி, நாடுகளுக்குக் கடினமாக இருக்க வாய்ப்பு அதிகம். ஏனெனில், இது ஒரு நீண்ட தொடர். ஆனால், ஆப்பிரிக்க, ஆசிய கண்டங்களைச் சேர்ந்த நாடுகளுக்கு உலகக் கோப்பையில் கலந்துகொள்ள இந்த விரிவாக்கம் சிறப்பான வாய்ப்பாக அமைந்துள்ளது,” என்று கூறினார் திரு ராமு.

​“பல நாடுகளுக்கு இது முதல் முறை அனுபவமாக இருக்கும். உதாரணத்திற்கு, ‘டார்க் ஹார்ஸ்’ என்று சொல்லப்படும் உஸ்பெகிஸ்தான் முதன்முறையாகத் தகுதி பெற்றுள்ளது. அவர்களுக்கு இது ஒரு பெரிய வாய்ப்பு. அவர்கள் நிச்சயம் தங்களை நிரூபித்துக் கொள்ளப் பார்ப்பார்கள்,” என்று திரு அல்-அமீன் கூறினார்.

​“48 அணிகள் விளையாடுவதால் போட்டிகள் அதிகமாகி, வீரர்களின் உடல்நலம் பாதிக்கப்படலாம், காயமடையும் அபாயமும் அதிகம். இதைப் பற்றி யாரும் அதிகமாகப் பேசுவதில்லை. மற்றொரு புறம், இளம் வீரர்களுக்குக் கிடைக்கும் இந்த அனுபவம் வேறு எங்கும் கிடைக்காது என்பதையும் மறுக்கமுடியாது,” என்றார் திரு கௌசிகன்.

​மேலும், உலகக் கிண்ணப் போட்டிகளில் சிறந்த விளையாட்டாளர்களாகத் திகழக்கூடியவர்கள், சிங்கப்பூரின் உலகக் கிண்ணக் கனவு, சிங்கப்பூர் விளையாட்டுத் துறையின் எதிர்காலம் போன்றவை குறித்தும் மூவரும் கருத்துரைத்தனர்.

Watch on YouTube
குறிப்புச் சொற்கள்
காற்பந்துஉலகக் கிண்ணம்சிங்கப்பூர்