கைபிடிக்கக் காத்திருந்த நேசம் காலமெல்லாம் அன்பின் வாசம்

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்! இந்தோனீசிய மங்கையின் மனங்கவர்ந்த தமிழ்நாட்டுத் திருமகன்

கைபிடிக்கக் காத்திருந்த நேசம் காலமெல்லாம் அன்பின் வாசம்

2 mins read
ac1cf6e0-7b06-4adb-9beb-bae5a9e0de55
அன்பர் தினத்தில் மட்டும் நினைவூட்டப்பட வேண்டியதன்று காதல். ஒவ்வொரு நொடியும் வாழ்ந்து காட்ட வேண்டிய உணர்வு என்று கூறினர் சேதுரத்தினம் மதன் - யெஸ்ஸீ மர்லினா இணையர். - படம்: பே கார்த்திகேயன்
multi-img1 of 2

பார்த்தவுடன் பிறந்ததன்று இவர்களின் காதல். வாய்மை, கனிவு, பொறுமை போன்ற நற்பண்புகளால் ஈர்க்கப்பட்டு, பத்து ஆண்டுகளாக மலர்ந்து வந்த நேசம், பெருமுயற்சிக்குப் பிறகு பெற்றோரின் சம்மதத்துடன் திருமணப் பந்தலில் நிலைகொண்டது.

1990களில் வேலைக்காகச் சிங்கப்பூருக்கு வந்தார் தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த திரு சேதுரத்தினம் மதன், 51.

இந்தோனீசியாவில் பிறந்து வளர்ந்த வழக்கறிஞர் யெஸ்ஸீ மர்லினா, 50, தமது வாழ்க்கைத் துணையாக வருவார் என்று கனவிலும் அவர் நினைத்ததில்லை.

மொழி வேறு, சமயமும் வேறு; கலாசாரங்கள் புதியவை. ஆனாலும் வாழ்நாள் முழுதும் சேர்ந்திருக்க இந்த வேற்றுமைகள் எதுவும் இவர்களுக்குத் தடையாக இருக்கவில்லை.

“வேலைக்காகச் சிங்கப்பூர் வந்தேன். பிறகு பணி நிமித்தமாக பாத்தாம் தீவுக்குச் செல்ல நேர்ந்தது. வேலையிடத்தில்தான் யெஸ்ஸீயைச் சந்தித்தேன். அவருக்கு மனிதவளப் பிரிவில் வேலை.

‘‘நாடு, மக்கள், பழக்கவழக்கம், வேலைச் சூழல் எல்லாமே புதிது. அந்த நேரத்தில் நான் பணியை நேர்த்தியாக செய்யக் கைகொடுத்தார் யெஸ்ஸீ. அயல்நாட்டின் வேலைப்போக்கை உணர்ந்து, குழுவில் உள்ளவர்களுடன் இணக்கமாகப் பணியாற்றி, பதவியிலும் வாழ்க்கையிலும் முன்னேற எந்தவோர் எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவிய அந்தக் கனிவன்பே, வாழ்ந்தால் இவருடன்தான் என்ற முடிவை எடுக்க உதவியது,’’ என்று தமிழ் முரசிடம் விவரித்தார் திரு மதன்.

மறுபுறம் திருவாட்டி யெஸ்ஸீயும் திரு மதனின் நேர்மை, விடாமுயற்சி, விட்டுக்கொடுத்தல் போன்ற குணங்களால் கவரப்பட்டார். தங்களுக்கு இடையிலான அன்பைத் திருமண உறவின்மூலம் தொடர முடிவெடுத்தனர் இந்த இணையர்.

Watch on YouTube

‘‘வீட்டில் யாரும் உடனே பச்சைக்கொடி காட்டவில்லை. எனினும் ஒருபுறம் நம்பிக்கை, மறுபுறம் பிடிவாதத்துடன் குடும்பத்தார் நல்லாசியுடன் மணம் முடிக்க ஆண்டுக்கணக்கில் காத்திருந்தோம்,’’ என்று திருவாட்டி யெஸ்ஸீ நினைவுகூர்ந்தார்.

யெஸ்ஸீ இல்லை என்றால் திருமணமே வேண்டாம் என்று உறுதியுடன் இருந்த காலங்கள் நற்பலனாகக் கனிந்திட, திரு மதனின் பெற்றோர் இந்தோனீசியா சென்று பெண் பார்த்தனர். 

மகன் ஜெகதீஷ் சாய்நாத்துடன்சேதுரத்தினம் மதன் - யெஸ்ஸீ மர்லினா இணையர்.
மகன் ஜெகதீஷ் சாய்நாத்துடன்சேதுரத்தினம் மதன் - யெஸ்ஸீ மர்லினா இணையர். - படம்: பே கார்த்திகேயன்

பிறகு திரு மதனின் குடும்பத்தினர் உள்ளத்திலும் திருவாட்டி யெஸ்ஸீ இடம்பிடிக்க, இன்று 12 வயது மகன் ஜெகதீஷ் சாய்நாத்தின் பெற்றோராக, பாத்தாம் தீவில் குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர் இந்த இணையர்.

இப்போது திருவாட்டி யெஸ்ஸீயின் காலை உணவு நாசி யுடுக்கிலிருந்து (Nasi Uduk) தோசைக்கு மாறிவிட்டது. பஹாசா இந்தோனீசியாவாக இருந்த பேச்சுமொழி தமிழாகிவிட்டது. ஆடையும் சேலை, சுடிதார் என மாற, இந்திய மருமகளாக மாறிவிட்டார்.

‘‘திருமணத்திற்குமுன் பிறமொழிப் பாடல்கள் கேட்பேன். ஆனால், மதன் குடும்பத்தில் இணைந்தவுடன் தமிழ்த் தொலைக்காட்சித் தொடர்களைப் பார்க்கத் தொடங்கினேன். தமிழ்ப் பாடல்கள் பாடவும் பழகிவிட்டேன்,’’ என்றவர், ஒரு சில வரிகளைப் பாடியும் காட்டினார்.

‘‘நாட்டின் எல்லைகளோ மொழியோ எதுவுமே உண்மையான அன்புக்குத் தடையாக நிற்கமாட்டா. ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்வதும், தோல்விகள், பின்னடைவுகள் ஏற்பட்டாலும் இறுதிவரை இணைந்து இருப்பதுமே மெய்சிலிர்க்க வைக்கும் நேசம்.

‘‘அது அன்பர் தினத்தில் மட்டும் நினைவூட்டப்பட வேண்டிய ஒன்றன்று. ஒவ்வொரு நொடியும் வாழ்ந்துகாட்டப்பட வேண்டிய உணர்வு. அவ்வகையில், தடைகளை வென்ற நேசத்தைப் பொன்போலப் பாதுகாப்போம்,’’ எனக் கூறும் இவ்விணையர், அனைவர்க்கும் அன்பர் தின வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர்.

குறிப்புச் சொற்கள்