தங்களது செல்லப்பிராணிகளின் உடல்நலன், மனநலன், நீண்ட ஆயுள், மறுபிறவி என அனைத்தும் சிறப்பாக அமைய ஆசி வேண்டி, செல்லப் பிராணிகளுக்கான ஆசீர்வாதம் பெறும் நிகழ்ச்சியில் ஈராயிரத்துக்கும் மேற்பட்ட செல்லப் பிராணி உரிமையாளர்கள் பங்கேற்றனர்.
விசாக தினக் கொண்டாட்டங்களின் ஓர் அங்கமாக, தெக்சென் சோலிங் (Thekchen Choling) புத்த ஆலயம் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. கடந்த செவ்வாய்க்கிழமை (மே 26), நெக்ஸ் கடைத்தொகுதிக்கு அருகிலுள்ள வளாகத்தில் அந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
புத்தத் துறவிகள், புனித நூல்களை ஏந்தியபடி அமர்ந்திருக்க, வந்திருந்தோர் செல்லப்பிராணிகளுடன் அவர்கள்முன் மண்டியிட்டு ஆசீர்வாதங்களைப் பெற்றனர். துறவிகள் பிராணிகளின் காதுகளில் மந்திரங்களைக் கூறி, புனித நூலினைத் தலையில் வைத்து ஆசி வழங்கினர்.
மொத்தம் எட்டுத் துறவிகள், 727 செல்லப்பிராணிகளுக்கு ஆசி வழங்கினர்.
உணர்வுள்ள அனைத்து உயிரினங்களுக்கும் ஞானம் பெறும் ஆற்றல் உண்டு என்பது புத்த சமய நம்பிக்கை. ஆனாலும், விலங்குகளால் தாங்களாகவே உரிய தர்மத்தைப் பின்பற்ற முடியாது என்பதால், இந்த ஆசீர்வாதங்கள் அவற்றைத் தூய்மைப்படுத்தி, சிறந்த, உயர்ந்த மறுபிறவிக்கு வழிவகுக்கும் என்பது அச்சமயத்தின் நம்பிக்கை.
இந்த ஆலயம் கடந்த ஐந்தாண்டுகளாக இந்த ஆசீர்வாத அமர்வினை நடத்தி வருகிறது. விசாக தினத்திற்கு முன்னதாக அமையும் வகையில் இதனை ஏற்பாடு செய்வதாகக் கூறினார் ஏற்பாட்டுக் குழு உறுப்பினர் வின்சென்ட் கெஸ்லர்.
“விலங்குகள் உட்பட ஒவ்வோர் உயிரினமும் புத்தராக மாறுவதற்கான ஆற்றலைக் கொண்டுள்ளது என்று நாங்கள் நம்புவதால், அவை ஞானம் பெறுவதற்கான விதையை நாங்கள் விதைக்கிறோம். இதில் பங்கேற்போரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது,” என்றார் அவர்.
சிங்கப்பூரில் பல ஆலயங்களிலும் இது நடைபெறுவதைச் சுட்டிய அவர், “எங்கள் ஆலயம் ஏற்பாடு செய்யும் அமர்வு ஆகப்பெரியது என்பதில் மகிழ்ச்சி,” என்றார். உலகின் பல ஆசிய நாடுகளிலும் இந்த நம்பிக்கை நிலவுவதை அவர் சுட்டினார். இதில் புத்த சமயம் மட்டுமன்றி, பல சமயத்தினரும் பங்கேற்கலாம் என்றும் அவர் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
நிகழ்ச்சியில் பொதுவான செல்லப்பிராணிகளான நாய்கள், பூனைகளுடன், பறவைகள் பலவும் பங்கேற்றன. அதில் மொழி, சமய வேறுபாடுகளின்றி பல இந்தியச் சமூகத்தினரும் பங்கேற்றனர்.
‘டக்சி’, ‘ட்ரெக்சி’ ஆகிய தங்களது இரு செல்லப்பிராணிகளுக்கு ஆசிபெற மகள், மகன், மருமகள் என குடும்பத்தினருடன் வந்திருந்தார் செல்வமலர், 56.
“ஏறத்தாழ நான்காண்டுகளாக இரு செல்லப்பிராணிகள் எங்களுடன் உள்ளன. உண்மையில் எனக்கு நாய்கள் என்றால் பயம். இவ்விருவரும் வந்தபின்னர் அந்தப் பயம் விலகி, அவர்கள்மீது அளவற்ற அன்பு வளர்ந்துள்ளது,” என்றார் செல்வமலர்.
“புத்த மதத்தை நான் பின்பற்றும் இந்து மதத்தின் ஒரு பகுதியைப் போலவே பார்க்கிறேன். என் செல்லங்கள் உடல்நலனுடன் இருக்க ஆசி பெற வந்தோம்,” என்றும் அவர் சொன்னார்.
நான்கு வயது நாய்க்குட்டி வீராவைத் தமது குழந்தைபோல கருதுபவர் கலைவாணி, 46.
“கடந்த ஆண்டே இந்நிகழ்ச்சிக்குச் செல்ல விரும்பினேன். முடியவில்லை. இந்த ஆண்டு பங்கேற்றதில் மிக்க மகிழ்ச்சி. குறிப்பாக, இவனுக்குப் பயம் அதிகம். அதனைப் போக்கவே இங்கு ஆசிபெற வந்தேன்,” என்றார் அவர்.
“நானும் எனது கணவரும் செல்லப்பிராணிகளுடன் வளர்ந்தவர்கள். எங்கள் பிள்ளைக்கும் அந்த உணர்வைத் தர விரும்பி இப்போது ‘காஜு’ எனும் ‘கோல்டன் ரிட்ரீவர்’ வகை நாயை வளர்க்கிறோம். எங்கள் செல்லப்பிராணியின் நீண்ட ஆயுளுக்காக ஆசி பெறுகிறோம்,” என்றார் சினேகா வெள்ளன்கி, 34.

