சிங்கப்பூரில் அதிகமானோர் குறைவான சர்க்கரையை உட்கொள்வதும் மருத்துவப் பரிசோதனைகளைச் செய்துகொள்வதும் அண்மைக் கருத்தாய்வுகளில் தெரியவந்துள்ளது.
இருப்பினும் அதிகமானோர் அடிக்கடி வெளியில் சாப்பிடுவதால், அவர்கள் உட்கொள்ளும் கலோரி, உப்பு ஆகியவற்றின் அளவு அதிகரித்துள்ளது.
ஏறக்குறைய 95 விழுக்காட்டினர் அன்றாடம் பரிந்துரைக்கப்பட்ட உப்பின் அளவுக்கும் மேல் உட்கொள்வதும் கருத்தாய்வுகளில் தெரியவந்தது.
இந்நிலையில் ஹார்ட்பீட்@பிடோக் நிலையத்தில் சனிக்கிழமை (அக்டோபர் 3) சிங்கப்பூர் இதய அறநிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘தேசிய இதய வாரம் - உலக இதய தின’ நிகழ்ச்சியில் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் உடல்நலத்தைப் பேணுவதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
சுகாதார மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
“அதிகப்படியான உப்பை உட்கொள்வது ரத்த அழுத்தத்தை உயர்த்துகிறது. மேலும் இதய நோய், பக்கவாதம் ஏற்படக்கூடிய ஆபத்தையும் அது அதிகரிக்கிறது. இதன் காரணமாக, சிங்கப்பூரில் அன்றாடம் 60க்கும் மேற்பட்டோர் மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர். இங்கு நிகழும் மூன்று இறப்புகளில் ஒன்று இதய நோயினால் ஏற்படுகிறது. அதனால் உடல்நலத்தில் சிறுவயதிலிருந்தே கவனம் செலுத்துவது முக்கியம்,” என்று அமைச்சர் ஓங் சொன்னார்.
ஆரோக்கியமான இதயத்தைப் பேணுவதற்கு வாரத்திற்குக் குறைந்தபட்சம் 150 முதல் 300 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபடுவது அவசியம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஆயினும் 2024 ஆம் ஆண்டின் தேசிய மக்கள்தொகை சுகாதார ஆய்வின்படி, 18 முதல் 74 வயதுக்குட்பட்ட சிங்கப்பூர் குடியிருப்பாளர்களில் ஆறில் ஒருவர் பரிந்துரைக்கப்பட்ட அளவுக்கு உடற்பயிற்சியைச் செய்வதில்லை என்பது தெரியவந்துள்ளது.
இந்த விழாவில், உடற்பயிற்சியை அனைத்து வயதினருக்கும் வலியுறுத்தும் வகையில் ‘ஸ்பிரிங் டு த பீட்’ என்ற புதிய உடற்பயிற்சி நடனம் அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நடனம், ‘எளிமையான’, ‘மேம்பட்ட’ என இரு வகைகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
“இளையர் வயதாகும்போதும் தொடர்ந்து பின்பற்றக்கூடிய நல்ல உடற்பயிற்சி பழக்கவழக்கங்களைச் சிறுவயதிலேயே அவர்களிடம் விதைக்க வேண்டும்,” என்றார் சிங்கப்பூர் இதய அறநிறுவனத்தின் நிர்வாகக் குழு உறுப்பினரும் மருத்துவ உதவிப் பேராசிரியருமான டாக்டர் முஹம்மது இடு ஜியோன்.
ஆரோக்கியமான வாழ்க்கைமுறையின் முக்கியத்துவத்தை மற்றவர்களுக்கு வலியுறுத்தும் நோக்கத்துடன் மூன்று ஆண்டுகளாகச் சில அமைப்புகளில் தொண்டூழியராக உதவி வருகிறார் 55 வயது திரு மனோகரன் கிருஷ்ணன்.
“உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள, நம் உணவில் உப்பைக் குறைத்து, சர்க்கரையைக் தவிர்த்து, உடல் எடைக் குறியீட்டைக் கண்காணித்து, வாரத்திற்கு 150 முதல் 300 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சியில் ஈடுபடுவது சிறந்தது.
நோய் வருமுன் காக்க மருத்துவப் பரிசோதனைகளையும் உரிய வயதில் மேற்கொள்ள வேண்டும். இவற்றை நானும் கடைப்பிடித்து மற்றவர்களுக்கும் வலியுறுத்தி விழிப்புணர்வை உருவாக்க உதவுவது எனக்கு மனநிறைவை அளிக்கிறது,” என்று தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் திரு மனோகரன் கூறினார்.
