வெகுகாலமாக அத்தர் நறுமண விற்பனையை இந்திய முஸ்லிம்கள் ஒரு பாரம்பரியத் தொழிலாகக் கொண்டுள்ளனர்.
‘அத்தர்’ என்ற சொல், அரேபியர்கள் வாசனைத் திரவியங்களைக் குறிப்பிடப் பயன்படுத்துவதாகும். மது சேர்க்கப்படாமல் தயாரிக்கப்படும் வாசனைத் திரவியங்களை அத்தர் என்றழைப்பர்.
சிங்கப்பூரில் அதிக காலம் இயங்கி வரும் இத்தகைய கடைகளைப் பற்றி அறிந்து வந்தது தமிழ் முரசு.
வெற்றிக்குக் காரணம் மரபு
கடந்த 91 ஆண்டுகளாக கம்போங் கிளாம் பகுதியில் செயல்பட்டு வரும் ஜமால் கஜூரா வாசனைத் திரவியக் கடை, ஒரு காலத்தில் ஹஜ் யாத்திரைக்குச் செல்லும் யாத்திரிகர்கள் வாடிக்கையாகச் செல்லும் கடையாக விளங்கியது.
சந்தனம், குங்குமப்பூ ஆகிய மூலப்பொருள்களிலிருந்து வரும் மணமுள்ள எண்ணெய்களைக் கலந்து இந்தக் கடையில் அத்தர்களாக விற்கப்படுகின்றன.
நீண்ட காலம் நீடிக்கும் நறுமணம் கொண்ட இந்த திரவியங்கள் ஜப்பான், அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளிலிருந்து வரும் சுற்றுப்பயணிகளைப் பெரிதும் ஈர்க்கின்றன.
இத்தொழிலை முதன்முதலில் இந்தியாவிலிருந்து குடிபெயர்ந்த முகமது ஹனிஃபா முகமது ஆரம்பித்தார்.
அவருக்குப் பின்னர் அவரின் மகன் முகமது ஜமால் கஜூரா, 76, தொழிலை முன்னெடுத்துச் செல்ல, தற்போது ஜமால் கஜூராவின் மகன் முகமது சமீர் கஜூரா நவீனக் கூறுகளைத் தொழிலில் புகுத்தியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
இக்காலத்திற்கு ஏற்றவாறு நவீன வாசனை நறுமணங்களை அறிமுகப்படுத்தியுள்ளார் சமீர் கஜூரா. மூன்று தலைமுறைகளாக இத்தொழிலை வெற்றிகரமாக இட்டுச் செல்வதற்கான காரணத்தைப் பற்றி பகிர்ந்துகொண்ட ஜமால் கஜூரா, மரபு முக்கியக் காரணம் என்றார்.
நலிந்துவரும் தொழில் அல்ல
தந்தையுடன் மசூதிகளுக்குச் சென்று அங்கு கடை அமைத்து ‘அத்தர்’ எனும் நறுமணத்தை விற்ற அனுபவம், 30 வயது முகமது ஜுபைருக்கு இன்னமும் ஞாபகத்தில் உள்ளது.
நான்கு சகோதரர்களுடன் இணைந்து தந்தையின் வாசனைத் திரவியத் தொழிலுக்குக் கைகொடுத்து வரும் முகமது ஜுபைர், அந்தத் தொழிலுடனே சேர்ந்து வளர்ந்தார்.
‘ஜி என் ஜூஸி’ வாசனைத் திரவிய வியாபாரத்தை, முகமது ஜுபைரின் தந்தை ஷேய்க் அப்துல் காதர் முகமது கசாலி, 59, 1999ஆம் ஆண்டு ஆரம்பித்தார். கடையில் வாசனைத் திரவியங்களை விற்பனை செய்வதற்குப் பதிலாக அவர்கள் மொத்த விற்பனையில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தின் பரங்கிப்பேட்டை எனும் ஊரிலிருந்து 1981ல் தம் தந்தையின் உந்துதலில் சிங்கப்பூருக்கு வந்த முகமது கசாலி முதலில் ஜவுளி, தற்போது தொழிலை நடத்தி வந்தார்.
“சுயதொழில் செய்ய வேண்டுமென்ற ஆர்வம் எனக்கு எப்போதும் இருந்துகொண்டே இருந்தது. என் அப்பாவின் வழிகாட்டலில் நான் தொழில் செய்வதில் அதிக ஈடுபாடு காட்டத் தொடங்கினேன்,” என்றார் முகமது கசாலி.
ஜவுளித் தொழிலில் சவால்கள் அதிகரிக்க, மனைவியின் ஊக்கத்தில் வாசனைத் திரவியத் தொழிலில் இறங்க அவர் முடிவெடுத்தார்.
“எனக்கு வாசனைத் திரவியங்கள் பற்றி ஒன்றும் தெரியாது. ஆனால், என் மனைவியின் உறவினர்கள் சிங்கப்பூரில் பிரபலமாக இருக்கும் வாசனைத் திரவியத் தொழிலை நடத்தி வருகிறார்கள். வாசனைத் திரவிய வர்த்தகத்தை நடத்த விரும்பியபோது என் மனைவி எனக்குப் பேராதரவாக இருந்தார்,” என்று முகமது கசாலி சொன்னார்.
இன்று, முகமது கசாலியின் நான்கு மகன்களும் அவரின் ஒரே மகளும் தொழிலை முன்னெடுத்துச் செல்லும் அளவுக்கு இத்தொழில் முன்னேறியுள்ளது.
பரம்பரைத் தொழில்கள் பல இருந்தாலும் ஒரு குடும்பத்தில் உள்ள பிள்ளைகள் அனைவரும் குடும்பத் தொழில் செழிப்பதை விரும்புவது மிக அரிதாகத்தான் பார்க்க இயலும்.
மூத்த மகன் முகமது ஜுபைருடன் அவரின் அக்கா ஜுவைரியா, 32, தம்பிகள் முகமது ஜாயித், 27, முகமது இம்ரான், 26, முகமது இனாமுல், 22, ஆகியோர் குடும்பத் தொழில் ஏற்றம் காணப் புதிய உத்திகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.
வழிபாட்டுக்கு பயன்படுத்தப்படும் அத்தர், மத்திய கிழக்கு நாடுகளில் பிரபலமாக வலம் வரும் வாசனைத் திரவியங்கள், குளியலுக்குப் பயன்படுத்தப்படும் ஜவ்வாது போன்ற பொருள்கள் இவர்களிடம் உண்டு.
வெவ்வேறு வாசனைத் திரவியங்களைக் கலந்து புதிதாக உருவாக்கப்படும் வாசனைத் திரவியங்களும் விற்கப்படுகின்றன. வெவ்வேறு துறைகளில் மேற்படிப்பு மேற்கொண்டிருந்தாலும் முகமது கசாலியின் பிள்ளைகள் ஆர்வம் காட்டுவதற்கு ஒரே காரணம், அந்த குடும்பத் தொழில் விட்டுப்போய்விடக்கூடாது என்பதற்கே.
“நான் இதற்கு முன்னர் பல துறைகளில் பணியாற்றினேன். இருப்பினும், அது எனக்கு மனநிறைவு அளிக்கவில்லை. சிறுவயதிலிருந்தே தொழில் செய்வது பற்றி எங்கள் தந்தை சொல்லி வளர்த்ததால் அது எங்கள் ரத்தத்தில் ஊறிவிட்டது,” என்றார் தொழிலின் செயல்பாடுகளைக் கவனித்துக்கொள்ளும் முகமது இம்ரான்.
“நான் வெளிநாட்டில் தகவல் தொடர்புத் துறையில் மேற்படிப்பு மேற்கொள்ளவிருக்கிறேன். சிறிது காலம் வெளிநாட்டில் அது தொடர்பாக வேலை செய்ய நான் முடிவெடுத்தாலும் அதன் பின்னர் நான் கற்றுக்கொண்ட திறன்களை உத்திகளாகப் பயன்படுத்தி தொழிலை முன்னெடுத்துச் செல்ல விரும்புகிறேன்,’ என்று கடைக்குட்டி முகமது இனாமுல் தெரிவித்தார்.
“வாசனைத் திரவியத் தொழில் நலிந்துவரும் தொழில் அல்ல. அது பலருக்கும் தேவையான ஒன்று. இந்தப் பழம்பெரும் தொழிலைப் பாதுகாக்க வேண்டும். அதற்கு நாங்கள் சகோதரர்கள் முழு ஈடுபாட்டுடன் செயல்படுகிறோம்,” என்றார் முகமது ஜுபைர்.
சிறப்புவாய்ந்த ‘ஊத்’
சிலர் ராயல் ஃபிரேக்ரன்சஸ் கடையை அதிகம் நாடுவதற்கு அங்கு விற்கப்படும் ‘ஊத்’ (oodh) மணமுள்ள எண்ணெய். இந்த எண்ணெய் மத்திய கிழக்கிலும் சிங்கப்பூரிலும் மிக பிரபலம்.
கடந்த 17 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் ராயல் ஃபிரேக்ரன்சஸ் கடையை 54 வயது ஷேய்க் அப்துல்லா, 29 வயதுடைய அவரின் மகன் முகமது அர்ஷத் நடத்தி வருகின்றனர்.
முகமது அர்ஷத் ஊத் எண்ணெய் பற்றி தெரிந்துகொள்ளும் ஆவவில் தமது தந்தைக்கு உதவ ஆரம்பித்தார்.
“எனக்கு வாசனைத் திரவியங்கள் பற்றி ஒன்றுமே தெரியாது. என் உறவினர் மூலம் நான் அதிலுள்ள பல நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டேன்,” என்றார் ஷேய்க் அப்துல்லா.
தென்கிழக்காசியாவில் மட்டுமே வளரக்கூடிய ‘அக்விலேரியா’ (Aquilaria), ‘ஜிரனோப்ஸ்’ (Gyrinops) ஆகிய மாறாப் பசுமைத்தன்மையுடைய மரங்கள், ஒருவகை பூஞ்சையால் தாக்கப்படும்போது அதிலிருந்து உருவாகும் ஒருவித பசையே, ‘ஊத்’.
இச்சிறப்புமிக்க ஊத், ராயல் ஃபிரேக்ரன்சஸ் கடையில் விற்கப்படும் பல பொருள்களில் மூலப்பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.
மணமுள்ள எண்ணெய், ஊதுபத்தி, சாம்பிராணி ஆகிய பொருள்களை வாடிக்கையாளர்கள் இங்கு வாங்க முடியும். மேலும், வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்றவாறு கடையில் வாசனைத் திரவியங்கள் உடனடியாகச் செய்து தரப்படும்.

