‘டீனேஜ் மியுடண்ட் நிஞ்சா டர்டில்ஸ்’, ‘பேட்மேன்: தி அனிமேட்டட் சீரிஸ்’ போன்ற பெயர்கள் 80கள், 90களில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு மிகப் பரிச்சயமான திரைப்பட, தொலைக்காட்சித் தொடர்கள். 

அரியவகை விளையாட்டுப் பொருள்களைச் சேகரிக்கும் தந்தை, பிள்ளைகள்

2 mins read
dab11b7c-e842-4d50-a943-0e9005889dbd
80கள், 90களில் பிரபலமான திரைப்படங்களும் தொலைக்காட்சித் தொடர்களை மையமாகக் கொண்ட விளையாட்டுப் பொம்மைகளை தனது மூன்று குழந்தைகளுடன் இணைந்து சேகரிப்பதை ஒரு பொழுதுபோக்காக கருதுகிறார் ஜெகதீஸ்வரன். - படம்: கீர்த்திகா ரவீந்திரன் 

80கள், 90களில் பிரபலமான திரைப்படங்களையும் தொலைக்காட்சித் தொடர்களையும் மையமாகக் கொண்ட விளையாட்டுப் பொம்மைகள் தற்போது எளிதில், பதப்படுத்தப்பட்ட நிலையில் கிடைப்பது சிலருக்குக் கடினமாக இருப்பினும், அவற்றை சேகரிப்பதை ஒரு பொழுதுபோக்காகக் கருதுகிறார் ஜெகதீஸ்வரன், 45. 

அதுமட்டுமல்லாமல், தம் மூன்று பிள்ளைகளும் அவருடன் இணைந்து ‘வின்டேஜ்’ விளையாட்டுப் பொம்மைகளைச் சேகரிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள். 

2016ல் நண்பர் ஒருவர் 80கள், 90களின் விளையாட்டுப் பொம்மைகள் சேகரிப்பதை யதார்த்தமாக சமூக ஊடகங்களில் பார்த்த ஜெகதீஸ்வரன் தாமும் ‘வின்டேஜ்’ விளையாட்டுப் பொம்மைகள் வாங்கி, சேகரிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

“சிறு வயதில் இதுபோன்ற விளையாட்டுப் பொம்மைகளை வாங்க என்னால் முடியவில்லை. இப்போது என்னிடம் சுமார் $1,800 மதிப்பிலான ‘வின்டேஜ்’ விளையாட்டுப் பொம்மைகள் உள்ளன,” என்றார் ஜெகதீஸ்வரன். 

படிப்படியாக தனது பொழுதுபோக்கை ‘ப்ரிமல் டாய்ஸ்’ எனும் இணைய வர்த்தகமாக இன்ஸ்டகிராம் தளத்தில் வழிநடத்தினார் ஜெகதீஸ்வரன். ‘வின்டேஜ்’ விளையாட்டுப் பொம்மைகளை வாங்குவது மட்டுமல்லாமல் சில நேரங்களில் மற்ற சேகரிப்பாளர்களிடம் அவர் விற்பதுண்டு. 

1982ல் வெளிவந்த ‘நைட் ரைடர்’ ஆங்கிலத் தொலைக்காட்சித் தொடரில் இடம்பெற்ற ‘நைட் 2000’ வாகனம், 1987ல் ஒரு பிரபல விளையாட்டுப் பொம்மையாகக் கருதப்பட்டது. அதுவே ஜெகதீஸ்வரனுக்கு மிகப் பிடித்த பொம்மை.  

“விளையாட்டுப் பொம்மைகளின் தன்மை, அதன் தனித்துவம் அடிப்படையில் நான் அதை விற்பதுண்டு. ‘நைட் ரைடர்’ விளையாட்டுப் பொம்மையுடன் விடைபெறுவது கடினம்,” என்று சிரித்தார் ஜெகதீஸ்வரன். 

விளையாட்டுப் பொம்மைகளின் தரத்தைப் பராமரிக்க, பிளாஸ்டிக் உறைகளில் வைக்கப்பட்டு ஒரு குளிர்ந்த அறையில் அவை பாதுகாக்கப்படுகின்றன என்றார் ஜெகதீஸ்வரன். 

“பழமை வாய்ந்த விளையாட்டுப் பொம்மைகளின் தன்மை பாதுகாக்கப்படுவதால் அது அரிய வகை பொருளாகிறது,” என்றார்.  

ஜெகதீஸ்வரனின் இந்த தனித்துவமான பொழுதுபோக்குக்கு அவரின் மனைவியும் பிள்ளைகளும் கைகொடுக்கிறார்கள். குறிப்பாக, தன் தந்தையின் சேகரிப்பைப் பார்த்து கௌரவ், மேகவ், மேகனா ஆகியோருக்கு ‘ஸ்பைடர்மேன்’, ‘பேட்மேன்’, ‘வண்டர் வுமன்’ போன்ற 90களின் தொலைக்காட்சித் தொடர் கதாபாத்திரங்கள் மீது அதிக ஆர்வம்  ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இந்தக் கதாபாத்திரங்களை மையமாக வைத்து 2000கள், 2010களில் திரைப்படங்கள் வெளியானதால் தந்தையின் பொழுதுபோக்கின் மீதான புரிதலும் ஏற்பட்டது. 

“விளையாட்டுப் பொம்மைகளைக் கணக்கெடுப்பது, அடுக்கி வைப்பது போன்ற உதவிகளை அப்பாவுக்கு செய்வோம்,” என்றார் கௌரவ். 

மேலும் அரிய வகை ‘வின்டேஜ்’ பொம்மைகளைச் சேகரிக்க வேண்டும் என்ற ஆசை இருந்த போதிலும் தற்போது உள்ள சேகரிப்பு தனக்கு மிகுந்த திருப்தி அளிக்கிறது என்றார் ஜெகதீஸ்வரன். 

“சிங்கப்பூரில் ‘வின்டேஜ்’ விளையாட்டுப் பொம்மைகளைச் சேகரிப்போர் எண்ணிக்கை குறைவு. இதனால் இந்தப் பொழுதுபோக்கில் ஆர்வம் காட்டுபவர்கள் கூடுதல் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்,” என்று சொல்கிறார்.

அதுமட்டுமல்லாமல்,  ‘வின்டேஜ்’ விளையாட்டுப் பொம்மைகளை சேகரிப்பதால் தம் மனைவி, பிள்ளைகளிடம் ‘வின்டேஜ்’ திரைப்பட, தொலைக்காட்சி கதாபாத்திரங்களை ஜெகதீஸ்வரன் அறிமுகப்படுத்துகிறார். 

“ஒரு குடும்பமாக அவர்கள் என் பொழுதுபோக்குக்கு ஆதரவு அளிப்பது எனக்கு தன்னம்பிக்கை தருகிறது. இதனால் எங்களிடையே புரிந்துணர்வும் பிணைப்பும் வளர்கின்றன,” என்றார் ஜெகதீஸ்வரன்.

குறிப்புச் சொற்கள்