சிறுவயதிலிருந்தே தேவாலயத்திற்குச் சென்று பழகிய லீனா லோக், 31, அங்குத் திருமணத்திற்காகத் தம்பதியரைத் தயார்ப்படுத்தும் பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன என்பதை அறிவார்.
தமது அன்பர் மனோஜ் ஸ்ரீகாந்தனை, 33, மூன்று ஆண்டுகளுக்கு முன் சந்தித்த பிறகு அவர் இந்துத் திருமணத்திற்குத் தம்பதியரைத் தயார்ப்படுத்துவதற்காக இதுபோன்ற நிகழ்ச்சிகள் உள்ளனவா என்று யோசித்தார்.
இருவருக்கும் இடையிலான திருமணத்தில் இரு கலாசாரங்கள் சார்ந்த சடங்குகளும் இடம்பெறும் என்று தெரிவித்தார் லீனா.
“ஒரு சீனராக, தென்னிந்தியத் திருமணச் சடங்குகளின் பின்னணியில் உள்ள முக்கியத்துவத்தைப் பற்றியும் அவற்றை நான் எவ்வாறு கடைப்பிடிக்கலாம் என்பது பற்றியும் மேலும் தெரிந்துகொள்ள விரும்பினேன்,” என்றார் லீனா.
இந்து ஆலோசனை வாரியமும் இந்து நிலையமும் அக்டோபர் 4ஆம் தேதி ‘பிஜிபி’ மண்டபத்தில் இணைந்து ஏற்பாடு செய்திருந்த ‘விவாஹா’ எனும் திருமணத்திற்கு முந்திய பயிலரங்கில் லீனாவும் மனோஜும் கலந்துகொண்டனர்.
திருமணம் செய்துகொள்ளும் தம்பதியர், பாரம்பரியத் திருமணத்தில் உள்ள இந்துச் சடங்குகளின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளவும் ஓர் இளம் குடும்பமாக நிதியை எவ்வாறு நிர்வகிப்பது, தனித்தனிப் பழக்கவழக்கங்களை எப்படிக் கையாள்வது என்பனவற்றை அறிந்துகொள்ளவும் இந்தப் பயிலரங்கு கை கொடுக்கும்.
மனோஜ், இந்துவாக இருந்தாலும் பயிலரங்கிற்கு முன்பு சில சடங்குகளைப் பற்றித் தமக்குத் தெளிவாகத் தெரிந்திருக்கவில்லை என்றும் பின்னர் அவை புரியவந்தன என்றும் சொன்னார்.
“உதாரணமாக, தாலி கட்டும் சடங்கிற்குப் பிறகு நாம் ஏன் அக்னியைச் சுற்றி வலம் வருகிறோம் என்பதற்கான காரணம் இப்போது எனக்குப் புரிகிறது,” என்றார் அவர்.
அவர்களைப் போலவே, சாதனா-அனில் தம்பதியரும் பயிலரங்கில் கலந்துகொண்டனர்.
“நாங்கள் நண்பர்கள் பலரின் திருமணங்களுக்குச் சென்றிருக்கிறோம். அங்கு என்ன செய்யப்படுகிறது என்பதைப் பற்றி எங்களுக்கு எந்த அளவுக்குத் தெரியவில்லை என்பதைப் பயிலரங்கில் உணர்ந்துகொண்டோம்,” என்றார் சாதனா, 42.
இருவரும் வட இந்தியர்களாக இருந்தாலும் பயிலரங்கின்போது கற்றுக்கொண்டவை அர்த்தமிக்கவையாக இருந்தன என்றும் அவை தங்கள் பழக்கவழக்கங்களுக்குக் கிட்டத்தட்ட 90 விழுக்காடு பொருந்துகின்றன என்றும் தெரிவித்தார் அனில், 40.
“ஒவ்வொரு சடங்கையும் மேலோட்டமாக அறிந்துகொள்வதைவிட, அதன் பின்னணியில் உள்ள அர்த்தத்தைத் தெரிந்துகொள்வது அவசியம்,” என்றார் அவர்.
இந்துத் திருமணத்துக்கு முந்திய தயாரிப்புப் பயிலரங்குகள், 2013ஆம் ஆண்டில் தொடங்கியதாகக் கூறினார் இந்து நிலையத்தின் தலைவர் நடராஜன் வரபிரசாத்.
“ஓர் இந்துத் திருமணத்தின் தர்மக் கோட்பாடுகளையும் அதன் சடங்குகளில் உள்ள ஆழ்ந்த ஆன்மிக அர்த்தங்களையும் இணைந்து வாழ்வதற்கான கூட்டுப் பொறுப்புகளைப் பற்றியும் பங்கேற்பாளர்கள் அறிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன்,” என்றார் அவர்.
தற்போது, இளம் தம்பதியினரைச் சென்றடைய மேலும் பல கோயில்களின் உதவியை நாட இந்து ஆலோசனை வாரியம் முற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார் அதன் தலைவர் செங்குட்டுவன் கண்ணியப்பன்.
அத்துடன், இறுதியாக நடைபெற்ற திருமணத் தயாரிப்புப் பயிலரங்கில் கலந்துகொண்டோரின் எண்ணிக்கை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றும் தமிழ் முரசிடம் அவர் சொன்னார்.
“இதுபோன்ற பயிலரங்குகளின் நோக்கத்தை இளம் தம்பதியர் இன்னும் பலர் புரிந்துகொண்டு, கற்றுக்கொள்ள முன்வருவார்கள் என நம்புகிறோம்,” என்று அவர் கூறினார்.
திருமணமாகவிருக்கும் தம்பதியினரைத் தவிர, பயிலரங்கில் கலந்துகொள்ள ஸ்ருதி, 27, ப்ரீத்தி, 30, எனும் இரண்டு சகோதரிகள் வந்திருந்தனர். தாயாரின் ஊக்கத்தால் அதில் பங்கெடுத்தாக அவர்கள் கூறினர்.
திருமணத்திற்குத் தாங்கள் இன்னும் தயாராகவில்லை என்று சொன்ன ஸ்ருதி, பயிலரங்கில் கிடைத்த அனுபவம், எதிர்காலத்தில் திருமணங்களைத் திட்டமிடும்போது பயனுள்ளதாக இருக்கும் என்று உணர்ந்ததாகக் குறிப்பிட்டார்.
“புதிதாக எதையும் கற்றுக்கொள்வது எப்போதும் மகிழ்ச்சி அளிக்கும்,” என்றார் அவர்.
திருமண மேடையில் கலாசாரச் சடங்குகளைக் காண்பது ஒன்று; ஆனால் அதன்பின் உள்ள அர்த்தங்கள், முக்கியத்துவத்தை அறிந்துகொள்வதும் அவசியம் என்றார் ப்ரீத்தி.
“என் நண்பர்கள் திருமணம் செய்துகொள்ளத் திட்டமிடவில்லை என்றாலும் நான் நிச்சயமாக இந்தப் பயிலரங்கை அவர்களுக்குப் பரிந்துரைப்பேன். இது அனைவருக்கும் பயனுள்ளதாகும்,” என்று அவர் கூறினார்.
