சட்டத்தின் மொழியில் சாமானியரின் குரல்!

200 ஆண்டுகால நீதித்துறை விழா

சட்டத்தின் மொழியில் சாமானியரின் குரல்!

4 mins read
0faa7abd-8aac-47bb-b621-4b35500b4901
சிங்கப்பூர் நீதித்துறையின் 200வது ஆண்டை (1826 -2026) எட்டும் வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை (மே 22) செய்தியாளர்களைச் சந்தித்தார் தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

நீதிமன்றம் என்றாலே சாமானியர்களுக்கு ஒருவித அச்சமும் புரியாத சட்ட விதிமுறைகளுமே முதலில் நினைவுக்கு வரும்.

ஆனால் அந்த நிலை மாறி, நீதிமன்றங்கள் பொதுமக்களுக்கானது என்பதை உணர்த்தும் வகையில் ‘நீதி கிடைப்பதற்கான அணுகுமுறை’  வடிவமைக்கப்பட்டுள்ளது என்று தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் கூறினார். மேலும் மக்களை மையமாகக் கொண்ட அமைப்பாக அதனை மாற்றுவதும் நோக்கம் என்றார் அவர்.

சிங்கப்பூர் நீதித்துறையின் 200 ஆண்டுகால நிறைவை முன்னிட்டுச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பல்வேறு அம்சங்கள் பற்றி அவர் பேசினார். சந்திப்பு கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நீடித்தது.

‘‘நீதிக்கான நுழைவாயில், அணுகுமுறை என்று கூறும்போது, பெரும்பாலான மக்கள் ‘இலவசச் சட்ட உதவி’ பற்றி மட்டுமே நினைக்கிறார்கள்; அதாவது, சட்டச் சேவைகளைப் பெறப் பொருளியல் வசதி உள்ளவர்களுக்கும் வசதியற்றவர்களுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைப்பது மட்டுமே அது என்று அவர்கள் கருதுகிறார்கள்,’’ எனத் தலைமை நீதிபதி மேனன் சொன்னார்.

ஆனால் நீதிக்கான அணுகுமுறை என்பது அதைவிடப் பரந்தது என்று அவர் கூறினார். நீதிமன்றங்களைப் பற்றியும் அவை என்ன செய்கின்றன என்பது குறித்தும் மக்கள் விழிப்புணர்வுடன் இருப்பதும்கூட அதில் அடங்கும் என்பதைத் தெளிவுபடுத்தினார் தலைமை நீதிபதி.

அதனை எட்டும் நோக்கில், நீதிமன்றத்தை நாடுவோருக்கு ஏற்படக்கூடிய தடைகள், இடையூறுகள் அனைத்தையும் கண்டறிந்து களைவதே ‘நீதி கிடைப்பதற்கான அணுகுமுறை’ எனும் கொள்கையின் முக்கிய நோக்கம் என்றார் அவர். 

“தீர்ப்புகளில் எளிய ஆங்கிலத்தைப் பயன்படுத்துவதும் நீதிமன்றக் கடிதங்கள் எழுதப்படும் முறையை மாற்றுவதும் அதில் அடங்கும்,’’ என்று திரு மேனன் கூறினார்.

முன்பெல்லாம் நீதிமன்றக் கடிதங்கள் வழக்கறிஞர்களை மனத்தில்கொண்டே எழுதப்பட்டன; அவற்றில் எளிதில் புரிந்துகொள்ள முடியாத சட்டச் சொற்கள் அதிகம் இருந்தன. தற்போது, அக்கடிதங்கள் தங்களுக்குத் தாங்களே வாதாடும் பொதுமக்களையும் எளியோரையும் மனத்தில் கொண்டு முற்றிலும் புதிய வடிவில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

“நீதிமன்றக் கடிதங்களின் வடிவமைப்பை எவ்வாறு மாற்றுவது என்பது குறித்துச் சிந்திக்கப்பட்டது. அவ்வகையில் முக்கிய விவரங்களைத் தெளிவாகக் காட்டுவதற்குக் கட்டங்கள், வண்ணக் குறியீடுகள், பல்வேறு வடிவங்கள் முதலியவை உருவாக்கப்பட்டன,’’ என்றார் திரு மேனன்.

அதனால் கடிதத்தைப் பெறுபவர், தகவலை உடனே பார்க்கவும் புரிந்துகொள்ளவும் மிக விரைவாகத் தேடிக் கண்டறியவும் செய்யப்பட்ட அந்த எளிய மாற்றம் நீதி கிடைப்பதற்கான அணுகுமுறை என்று அவர் குறிப்பிட்டார்.

அதேபோல், நொடித்துப்போனநிலை போன்ற இக்கட்டான சூழலில் நீதிமன்றத்திற்குச் செல்வோர், சான்றிதழ்களுக்காகப் பல சவால்களை எதிர்கொள்ள நேரிடலாம். அவற்றை எளிமையாக்க, உச்சநீதிமன்றத்தின் கீழ்த்தளத்திலேயே ‘ஒருங்கிணைந்த சேவை நிலையம்’ உருவாக்கப்பட்டுள்ளது. அது மக்களின் நேரத்தை மிச்சப்படுத்த உதவுகிறது என்றார் தலைமை நீதிபதி.

உலக அரங்கில் தனி முத்திரை பதிக்கும் சிங்கப்பூர்

எளியோருக்கு நீதி வழங்குவது மட்டுமின்றி, வர்த்தக உலகிலும் சிங்கப்பூர்ச் சட்டம் பேரளவில் முத்திரை பதித்து வருகிறது.

‘‘ஒரு வர்த்தக வழக்கில் லண்டன் அல்லது சுவிட்சர்லாந்து நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்திருந்தால், அதே வழக்கை மீண்டும் சிங்கப்பூருக்குக் கொண்டுவந்து நேரத்தை வீணடிக்கக்கூடாது என்ற உலகளாவிய வர்த்தக நேர்மையைச் சிங்கப்பூர் கட்டிக்காத்து வருகிறது,’’ என்று திரு மேனன் கூறினார்.

‘‘உலகெங்கிலும் உள்ள நீதிபதிகள் நம் நாட்டு நீதிபதிகளுடன் இணைந்து வழக்குகளை விசாரிப்பது, சிங்கப்பூரின் சட்டப் பாரம்பரியத்திற்கு உலக நாடுகள் தந்துள்ள ஆகச் சிறந்த அங்கீகாரமாகும்,’’ என்றார் அவர்.

சமூக ஊடகங்களின் தாக்கமும் உண்மையை உணர்த்தும் தீர்ப்பின் சாரமும்!

சமூக ஊடகங்களால் அடிப்படை உண்மைக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக் குறித்தும் திரு மேனன் பேசினார். இன்றைய மின்னிலக்க யுகத்தில் சமூக ஊடகங்களின் பெருக்கத்தால் உண்மைச் சிதைவும் போலித் தகவல்களும் உலக அளவில் பெருஞ்சவாலாய் உருவெடுத்துள்ளதாகத் தலைமை நீதிபதி கவலை தெரிவித்தார்.

‘‘நீதிமன்றங்கள் என்பவை வெறும் தீர்ப்புகளை வழங்கும் இடங்கள் மட்டுமல்ல, அவை ஆதாரங்களின் அடிப்படையில் உண்மையை நிலைநாட்டும் அமைப்புகள். நீதிமன்றங்கள்மீது மக்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கை மட்டுமே நீதித்துறையின் அடிநாதம் என்றார் அவர்.

‘‘இன்றைய சூழலில் பலர் நீதிமன்றத் தீர்ப்புகளை முழுமையாகப் படிக்காமலேயே சமூக ஊடகங்களில் கருத்துகளைப் பதிவிடுகின்றனர்.

“இணையத்தில் வரும் வெறும் தலைப்புச் செய்திகளை மட்டுமே பார்த்துவிட்டு, முழு விவரமும் தெரியாமல் அவசரப்பட்டு ஒரு முடிவுக்குவரும் போக்கு அதிகரித்துள்ளது. அது தவறான புரிதல்களுக்கு வழிவகுக்கிறது,’’ என்று திரு மேனன் குறிப்பிட்டார்.

சமூக ஊடகங்களின் பெருக்கத்தால் உண்மைக் கூற்றுகளை நிலைநிறுத்துவது சவாலாகியுள்ளது. அதனை எதிர்கொள்ளப் புதிய உத்தி கையாளப்படுவதாகவும் அவர் கூறினார்.

பொதுமக்கள் நூற்றுக்கணக்கான பக்கங்கள் கொண்ட மிக விரிவான சட்டத் தீர்ப்புகளை முழுமையாகப் படித்துப் புரிந்துகொள்வது கடினம் என்பதை நீதிமன்றம் உணர்ந்துள்ளது என்று திரு மேனன் சொன்னார்.

எனவே, தகவல் இடைவெளியைக் குறைக்க, அனைத்து முக்கியத் தீர்ப்புகளுடன் 3 முதல் 5 பக்க அளவில் வழக்கின் முக்கிய அம்சங்கள் அடங்கிய சாராம்சம் சம்பந்தப்பட்டோருக்கு உடனுக்குடன் கிடைக்க ஏற்பாடு செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அதன் மூலம் வழக்கின் முக்கிய அம்சங்களையும் தீர்ப்பின் காரணங்களையும் துல்லியமாகத் தெரிந்துகொள்ள முடியும்.

“தோல்வியுற்றோம் அல்லது வென்றோம் என்பதைத் தாண்டி, நீதிமன்றத்திற்கு வந்தோருக்கு நியாயமான முறையில் நீதி கிடைத்தது என்ற மன நிறைவோடு ஒருவர் செல்வதே சிங்கப்பூர் நீதித்துறைக்குக் கிடைத்த உண்மையான வெற்றி,’’ என்றார் தலைமை நீதிபதி.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்நீதித்துறைதலைமை நீதிபதி