தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அன்பு என்றால் அம்மா

3 mins read
அன்புள்ளத்தின் ஆற்றலுக்கு 95 வயது மேக்டலின் ரோட்ரிகஸ் ஒரு சான்று.
cf4b6faa-7cc0-42fa-bbdf-b945f2dde6a6
மகன் கிறிஸ்டஃபர் கொடுத்த பூவைக் கண்டு பூரித்தார் மேக்டலின் ரோட்ரிகஸ், 95. - படம்: சாவ்பாவ்
multi-img1 of 2

மூன்று மகன்கள், ஒரு மகள், இரு பேரப்பிள்ளைகள், இரு கொள்ளுப் பேரப்பிள்ளைகள், உடல்நலம் குன்றிய கணவர் என எல்லாரையும் பல்லாண்டுகள் கவனித்துவந்துள்ளார் 95 வயது மேக்டலின் ரோட்ரிகஸ். அவருடைய கணவர் உடல்நலம் குன்றியதால் 2023ல் இறந்தார்.

பல மருத்துவப் பிரச்சினைகளை எதிர்கொண்டபோதும், தன் குடும்பத்தினரைக் கண்ணும் கருத்துமாய்ப் பராமரித்து வருகிறார் இந்த அன்னை.

குடும்பத்தின் நிதிச் சூழலால் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்க அவர் பல வேலைகளையும் செய்யவேண்டியிருந்தது. காலையில் குழந்தைப் பராமரிப்பு நிலையத்திலும், பிற்பகல் அலுவலகத்திலும், இரவு 11 மணி வரை காப்பிக் கடையிலும் அவர் முன்பு வேலை செய்தார்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு, மகன் கிறிஸ்டஃபர் மோரிஸ் ரோட்ரிகஸ், 72 புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

அவருக்காக இன்றுவரை வாரத்துக்கு மூன்று, நான்கு முறையாவது தானே உணவு தயாரிக்கிறார் மேக்டலின். நடமாடச் சிரமப்பட்டாலும் மகனுக்குச் சேவை செய்ய முடிவதே அவருக்குப் பெரும் வரமாக இருக்கிறது.

பணியிடத்தில் மூன்று முறை மயங்கி விழுந்ததால் கிறிஸ்டஃபரால் வேலைக்குச் செல்ல முடியவில்லை.

மகனும் தாயாரும் ஒரே அடுக்குமாடிக் கட்டடத்தில் வசிக்கின்றனர். தாயாரின் வீட்டின் மேல் மாடியில் மகனுடைய வீடு உள்ளது.

அன்னையர் தினத்தை முன்னிட்டு, தன் தாயார் தனக்காகச் செய்த தியாகங்களைப் பாராட்ட விரும்பிய கிறிஸ்டஃபர் அவருக்குப் பூ தந்து நன்றி கூறினார்.

அந்த அழகிய தருணத்தை ஏற்படுத்த பிலோசம் சீட்ஸ் அறநிறுவனமும் ‘போஸ்’ குழுமமும் உதவின.

என்னால் செய்ய இயன்றதை நான் வாழும்வரை என் பிள்ளைகளுக்குச் செய்வேன்.
மேக்டலின் ரோட்ரிகஸ், 95

வெள்ளிக்கிழமை மே 9ஆம் தேதியன்று திருவாட்டி மேக்டலின் போன்ற பல முதியோருக்கும் அன்னையருக்கும் காகிதப் பூக்களை பிலோசம் சீட்ஸ், ‘போஸ்’ குழுமம், மக்கள் கழகம் ஆகியவற்றுடன் இணைந்து செயல்படும் நிறுவனப் பங்காளிகள் வழங்கினர்.

முதியோரும் அன்னையரும் பிலோசம் சீட்ஸ் துடிப்பான மூப்படைதல் நிலையத்துக்கு வந்து மதிய உணவு உண்டு, கலைநிகழ்ச்சியில் பங்கேற்று பூக்கள் பெற்ற அதேநேரத்தில், தொண்டூழியர்கள் வீடு வீடாகச் சென்று பூக்களை வழங்கினர்.

முதியோரும் அன்னையரும் பிலோசம் சீட்ஸ் துடிப்பான மூப்படைதல் நிலையத்துக்கு வந்து மதிய உணவு உண்டு, கலைநிகழ்ச்சியில் பங்கேற்று பூக்கள் பெற்றனர்.
முதியோரும் அன்னையரும் பிலோசம் சீட்ஸ் துடிப்பான மூப்படைதல் நிலையத்துக்கு வந்து மதிய உணவு உண்டு, கலைநிகழ்ச்சியில் பங்கேற்று பூக்கள் பெற்றனர். - படம்: சாவ்பாவ்

மதிய உணவை ஆதரித்த ‘ஹெச்பி’ நிறுவனத்திலிருந்து தொண்டூழியர்கள் உணவை வழங்கினர். ‘எஸ் & பி குளோபல்’, ‘எஸ்டி என்ஜினியரிங் மி‌‌ஷன் சாஃப்ட்வேர் அண்ட் சர்வீசஸ்’, ‘கோன்ரட் சிங்கப்பூர் ஆர்ச்சர்ட்’ ஆகிய நிறுவனங்களிலிருந்து தொண்டூழியர்களும் பூக்களை வழங்கினர்.

‘போஸ்’ குழுமத்துடன் இணைந்து 600க்கும் மேற்பட்ட பூக்களைப் பிலோசம் சீட்ஸ் வழங்கியது.

பிலோசம் சீட்ஸ் துடிப்பான மூப்படைதல் நிலையத்தில் நடைபெற்ற அன்னையர் தினக் கொண்டாட்டம்.
பிலோசம் சீட்ஸ் துடிப்பான மூப்படைதல் நிலையத்தில் நடைபெற்ற அன்னையர் தினக் கொண்டாட்டம். - படம்: சாவ்பாவ்

இம்முயற்சியை 16வது ஆண்டாகச் செயல்படுத்துகிறது ‘போஸ்’ குழுமம். இரண்டாம் ஆண்டாக அக்குழுமம் ‘பிலோசம் சீட்ஸ்’ உடன் கைகோத்து இதை ஏற்பாடுசெய்துள்ளது.

‘போஸ்’ குழுமம் இவ்வாண்டின் அன்னையர் தினத்துக்காகப் பிலோசம் சீட்ஸ் மற்றும் பல அமைப்புகளுடன் இணைந்து மொத்தம் 12,000 காகிதப் பூக்களை அன்னையருக்கும் முதியோருக்கும் வழங்குகிறது. ‘எஸ்ஜி50’ ஆண்டில் 52,000 அது பூக்களை வழங்கியது.

இக்காகிதப் பூக்களை ‘மெட்டா’, ‘ஏவ்வா’, ‘மைண்ட்ஸ்’ போன்ற அமைப்புகளின் பயனாளிகளும் ‘பிலோசம் சீட்ஸ்’ முதியோரும் தம் கைப்படச் செய்துள்ளனர்.

‘பிலோசம் சீட்ஸ்’ நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் சரஸ்வதி கோபால் நாயுடு, 73, இதய அறுவை சிகிச்சை மேற்கொண்ட தன் கணவரைப் பராமரிக்கிறார்.

முன்னாள் காவல்துறை அதிகாரியான சரஸ்வதி, தற்போது வாரத்துக்கு ஆறு நாள்கள் அன்றாடம் 12 மணி நேரம் பாதுகாவல் அதிகாரியாக வேலை பார்க்கிறார். வீடு திரும்பியதும் கணவருக்குச் சமைப்பதுடன் அவரது தேவைகளையும் கவனித்துக்கொள்கிறார்.

தன் குடும்பத்தினர்மீது வைத்திருக்கும் அன்பே சரஸ்வதியைத் தொடர்ந்து பாடுபடத் தூண்டுகிறது.

“என் பிள்ளைகள் அன்னையர் தினத்தன்று எங்களை வெளியே அழைத்துச் செல்வார்கள். அண்மையில் தாய்லாந்துக்கு அழைத்துச் சென்றார்கள். என் பிறந்தநாளைச் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். அன்னையர் தினத்தன்று நான் அவர்களுக்காகச் சமைப்பேன்,” என்றார் சரஸ்வதி.

உறவுகளுக்கு அப்பாலும் விரிந்த அன்னையின் அன்பு

‘பிலோசம் சீட்ஸ்’ தொண்டூழியர் முத்தையா பார்வதி, 71, பல முதியோரும் தனியாக இருப்பதை உணர்ந்து வாரத்தில் ஐந்து நாள்கள் அவர்களை மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறார்.

“என் மருமகள்கள் என் விருப்பங்களை உணர்ந்து எனக்காக அன்னையர் தினத்தன்று விரும்பியதை வாங்கித் தருகின்றனர். அவர்களுக்காக நானும் வாங்கித் தருவேன். என் மகன்கள் என்னை அன்போடு பார்த்துக்கொள்கிறார்கள்,” என்றார் பார்வதி.

வலமிருந்து பிலோசம் சீட்ஸ் தொண்டூழியர் முத்தையா பார்வதி, பாதுகாப்பு அதிகாரியாகப் பணி புரியும் சரஸ்வதி கோபால் நாயுடு, அவருடைய கணவர் ஜே பிரகாசம் சாமி.
வலமிருந்து பிலோசம் சீட்ஸ் தொண்டூழியர் முத்தையா பார்வதி, பாதுகாப்பு அதிகாரியாகப் பணி புரியும் சரஸ்வதி கோபால் நாயுடு, அவருடைய கணவர் ஜே பிரகாசம் சாமி. - படம்: சாவ்பாவ்
மே 8ஆம் தேதி செம்பவாங் சென்ட்ரல் வட்டாரம் (zone) 1ல் பிலோசம் சீட்ஸ் ஏற்பாடுசெய்த அன்னையர் தினக் கொண்டாட்டம்.
மே 8ஆம் தேதி செம்பவாங் சென்ட்ரல் வட்டாரம் (zone) 1ல் பிலோசம் சீட்ஸ் ஏற்பாடுசெய்த அன்னையர் தினக் கொண்டாட்டம். - படம்: பிலோசம் சீட்ஸ்
குறிப்புச் சொற்கள்