சிறப்புத் தேவைகள் கொண்ட 26 வயது பாடகர் காயத்ரி, 2026ல் பள்ளிகளிலும் நூலகங்களிலும் கூடுதலான இசை நிகழ்ச்சிகள் படைக்க விரும்புகிறார். ‘ஏக்ட் 3 தியேட்ரிக்ஸ்’, ‘மூன்பீம் தியேட்டர்’ ஆகிய அமைப்புகள்மூலம் இவ்வாய்ப்புகள் கிடைத்துள்ளன.
12 வயதிலிருந்து இசை வகுப்புகளுக்குச் சென்றுவந்துள்ளார் காயத்ரி. இந்திய, கர்நாடக இசையைச் சிறப்புத் தேவைகள் கொண்டவருக்குக் கற்பிக்கத் தயாராக இருந்த ஆசிரியர் கிடைக்காததால் ஆங்கிலப் பாடல்களின் பாதையில் சென்றுவருகிறார் காயத்ரி.
“இசைப் பள்ளிகளில் வகுப்புகளுக்குப் பொதுவாக அதிகம் செலவாகும். இசை என்பது விலையுயர்ந்த பயணம் என்பது மறைக்கமுடியாத உண்மை. தற்போது லாப நோக்கற்ற அமைப்பில் சலுகையுடன் கற்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது,” என்றார் காயத்ரியின் தாய்மாமா ஆறுமுகம்.
வாரம் ஒருமுறை அரை மணி நேர இசை வகுப்புக்கு காயத்ரி செல்கிறார். “ஆனால், சிறப்புத் தேவைகள் கொண்டவர்களுக்கு, இசை கற்கக் கூடுதல் நேரம் தேவைப்படுகிறது. அதனால், வீட்டில் நானே அவருக்குப் பாடல் வரிகள் சொல்லிக் கொடுத்து ஒவ்வொரு நாளும் ஒரு வரியை மனப்பாடம் செய்ய ஊக்குவிக்கிறேன். வகுப்பில், எப்படிப் பாடுவது எனக் கற்பதில் அவரால் கூடுதல் கவனம் செலுத்தமுடிகிறது,” என்றார் ஆறுமுகம்.
அடிக்கடி இசை ஆசிரியர்கள் மாறிக்கொண்டே இருப்பதும் ஒரு சவால் என்றார் அவர்.
2026ல், சிறப்புத் தேவை கொண்டோருக்குத் தகுந்தாற்போல் கட்டுப்படியாகக்கூடிய கட்டணத்தில் கூடுதல் நேரம் இசை கற்க சலுகைகளையும் இசைசார்ந்த வேலைவாய்ப்புகளையும் எதிர்பார்க்கிறார் ஆறுமுகம்.
“மற்ற கலைஞர்கள்போல் இவர்களால் சுயமாக வாய்ப்புகள் தேட முடியாது. பராமரிப்பாளர்தான் தேடித் தர வேண்டும். ஆனால் வேலை, குடும்பச் சூழல் அனைத்தைம் சமாளிக்கவேண்டியுள்ளதால் பலரும் தம் முயற்சிகளைக் கைவிட்டுவிடுகிறார்கள்,” என்றார் ஆறுமுகம்.
$100 கலாசார சிறப்புத் தொகை இருந்தாலும், சிறப்புத் தேவைகள் கொண்ட கலைஞர்களின் நிகழ்ச்சிகளுக்கென மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்க முடியாது என்றும், கூட்டம் இல்லாத நிகழ்ச்சி ரத்துசெய்யப்படலாம் என்றும் கூறிய ஆறுமுகம், இக்கலைஞர்களின் வளர்ச்சிக்கென நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
பாடல்கள் எழுதவும் இசை கற்கவும் விருப்பம்
தன் எழுத்து, இசைத் திறன்கள்மூலம் வாழ்வாதாரம் தேட விரும்புகிறார் உடற்குறையுள்ள டோபி லிம், 46. பாடல்கள், புனைகதைகள், நாடகங்கள் போன்றவற்றை எழுதும் திட்டங்களில் சேர விரும்பும் திரு லிம், உடற்குறையுள்ள கலைஞர்களை ஆதரிக்கும் புரவலர்களைத் தேடிவருகிறார்.
உடற்குறை உள்ளோரின் வாழ்க்கை அனுபவங்களைப் பகிர அவர் டீன் என்பவருடன் இணைந்து எழுதிய ‘பாலங்களை அமைத்தல்’ எனும் பாடல், போட்டி ஒன்றில் வெற்றி கண்டது. பாடலை https://youtu.be/pvEbaymF1hM?si=dSUjwwa0JHbBMjIZ இணையத்தளத்தில் காணலாம்.
மூளைசார்ந்த நோய்களால் பாதிக்கப்பட்ட டோபி, 2000ல் சக்கர நாற்காலியைப் பயன்படுத்தத் தொடங்கினார்.
உடற்குறையுள்ளோருக்கு வாய்ப்பளிக்கும் இசைக்குழுக்கள்
உடற்குறை அல்லது நிதிப் பிரச்சினை கொண்ட இசைக் கலைஞர்களுக்கு 2026ல் கூடுதலான வாய்ப்புகள் தேடித் தர விரும்புகிறார் தொழில்முறைப் பாடகர் பவானி பாலச்சந்திரா, 54.
2025ல் அவர் தொடங்கிய ‘லைட்சர்குல் ஆர்கெஸ்ட்ரா’, ‘மியூசிக் மெலடி ஆர்கெஸ்ட்ரா’ ஆகிய இசைக் குழுக்கள் மூலம் அதைச் சாதிக்க விரும்புகிறார் இசைக் குடும்பத்தில் பிறந்த பவானி. அவை ஆங்கிலம், மலாய், சீன, இந்திய, மேற்கத்திய (பாப், ஜேஸ்) எனப் பல்வகையான இசையையும் படைக்கின்றன.
இவ்விரு இசைக்குழுக்களுக்கும் கூடுதல் உறுப்பினர்களைச் சேர்க்கவும் அவர் விரும்புகிறார்.
“குறிப்பாக, கிலேரினட், டிரம்பட், வியோலா, செல்லோ போன்ற இசை வாத்தியங்கள் வாசிப்பவர்களைத் தேடுகிறேன். அவர்கள் உடற்குறையுள்ளோராகவும் இருக்கலாம். உடற்குறை அல்லாதவரையும் வரவேற்கிறேன்; ஏனெனில் அவர்களுடன் இணைந்து வாசிக்கும்போது ‘நாம் வேறுபட்டவர்கள் அல்ல’ என்பதை உணர்ந்து உடற்குறையுள்ள கலைஞர்கள் உந்துதலுடன் வாசிப்பார்கள்,” என்றார் பவானி.
கலைஞர்களுக்குப் பணம் ஈட்டும் வாய்ப்புகளை உருவாக்க அவர் பல்வேறு அமைப்புகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். எஸ்பிளனேட், மக்கள் கழகம், விக்டோரியா இசைநிகழ்ச்சி மண்டபம் போன்றவற்றுடன் அவர் இணைந்து நிகழ்ச்சிகள் வழங்க விரும்புகிறார்.
இதுவரை, மரபுடைமைசார்ந்த அழகுராணிப் போட்டி ஒன்றிலும், ‘AWARE’ நிகழ்ச்சி ஒன்றிலும் ‘லைட்சர்குல் ஆர்கெஸ்ட்ரா’ இசை படைத்துள்ளது.
‘மியூசிக் மெலடி ஆர்கெஸ்ட்ரா’ மூலம், உடற்குறையுள்ளோருக்கு அவர் இசையை இணையவழி இலவசமாகக் கற்பிக்கிறார். அவர்களில் திறன்மிக்கவர்களை அடையாளங்கண்டு, ‘லைட்சர்குல் ஆர்கெஸ்ட்ரா’வில் இணைக்கிறார். giving.sg மூலம் தொண்டூழியர்களைத் தேடுகிறார்.
பவானி சிறுவயதிலிருந்து பல்வேறு இசைநிகழ்ச்சிகள் படைத்துள்ளார். அவரது தாயார் நன்கு பாடுவார்.
எனினும், வயதாக ஆக, மேடை நிகழ்ச்சி வாய்ப்புகள் அரிதாகிவருவதை உணர்ந்தார் பவானி. அதனால் தன் இசைக்குழுக்களில் வயது குறித்து பாரபட்சம் பாராமல் அனைவரையும் அவர் உள்ளடக்க விரும்புகிறார். இந்திய இசைக் கலைஞர்களுக்குத் தளம் வழங்க ‘சிங்கப்பூர் இந்தியன் ஆர்டிஸ்ட் கலெக்டிவ்’ எனும் டெலிகிராம் குழுவையும் (https://t.me/+S4E4uyzulKE0ZTY1) அவர் தொடங்கியுள்ளார்.
“என் சொந்த இசைப் பயணத்தில் நான் பல அமைப்புகளுடன் இணைந்து பலவற்றையும் சாதித்துள்ளேன். நான் தொடர்ந்து நிகழ்ச்சிகளில் பாடுகிறேன். இப்போது பிறருக்கு நான் உதவ விரும்புகிறேன். அதனால்தான் இந்த இசைக் குழுக்களைத் தொடங்கியுள்ளேன்,” என்றார் பவானி.
இணைமுயற்சிகள் மேற்கொள்ள விரும்புவோர் workstarb@outlook.com என்ற மின்னஞ்சல் முகவரியில் பவானியைத் தொடர்புகொள்ளலாம்.

