கன்றுக் குட்டிகள், விளையாட்டு, கலை நிகழ்ச்சிகளுடன் களைகட்டியது 2026 வெஸ்ட் கோஸ்ட் பொங்கல் திருவிழா.
ஏறத்தாழ 650 குடியிருப்பாளர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சி, வெஸ்ட் கோஸ்ட் சமூக நிலையத்தில் பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெற்றது. வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் கல்வி, சமூகச் சேவைகள் ஒருங்கிணைப்புக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான டெஸ்மண்ட் லீ இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
லிட்டில் இந்தியாவின் ‘பொலி @ கிளைவ் ஸ்திரீட்டில்’ இடம்பெற்ற கால்நடைகள் காட்சியைத் தவறவிட்டோரும் அதனை ரசிக்க ஏதுவாக கால்நடைகளைக் காட்சிப்படுத்தும் அங்கங்கள் இடம்பெற்றன.
பொங்கல் செய்முறை விளக்கம், மருதாணி இடுதல், குழந்தைகளுக்கான பலூன் சிற்பங்கள், வண்ணம் தீட்டுதல், கேள்வி பதில் அங்கங்கள், விளையாட்டுகள் உள்ளிட்ட அங்கங்களும் இடம்பெற்றன.
“மக்கள் மகிழ்ச்சியில் திளைக்கும்போது எனக்கும் மகிழ்ச்சி ஏற்படுகிறது. கொவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிறகு நாங்கள் பொங்கல் நிகழ்ச்சியை நடத்தவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடைபெற்ற இந்நிகழ்ச்சி கூட்டு முயற்சியால் சாத்தியமானது,” என்றார் வெஸ்ட் கோஸ்ட் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுத் தலைவர் நசீர் கனி.
சிறப்பு விருந்தினர் தமிழில் வாழ்த்துச் சொல்லியது, பொங்கல் பானையில் பால் ஊற்றியது, கன்றுகளுக்கு வழிபாடு செய்தது போன்றவை மகிழ்ச்சியளித்ததாகவும் திரு நசீர் கனி சொன்னார்.
ஏறத்தாழ 25 முதல் 30 தொண்டூழியர்கள் வரை மூன்று வாரங்கள் பணியாற்றியதன் வெளிப்பாடே இந்நிகழ்ச்சியின் வெற்றி என்றும் அவர் பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் மனைவி, தாய், தந்தை, கைக்குழந்தையுடன் பங்கேற்றார் வெஸ்ட் கோஸ்ட் வட்டாரவாசி முகம்மது ஃபாசில், 33, “எங்கள் வீட்டில் பொங்கல் கொண்டாடும் பழக்கமில்லை. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதும், பல குடும்பங்களைச் சந்தித்ததும் நல்ல அனுபவம். ஏற்பாட்டுக்குழுவின் பெருமுயற்சிக்கு வாழ்த்துகள்,” என்றார்.
தொடர்புடைய செய்திகள்
இது ஓர் அர்த்தமுள்ள குடும்ப விழா என்றும் அவர் குறிப்பிட்டார்.
தம் மூன்று வயது மகன், ஒரு வயது மகளுடன் விழாவுக்கு வந்திருந்தார் பொறியாளர் சசிகுமார், 30. குடும்பத்துடன் நேரம் செலவிடச் சிறந்த வாய்ப்பாக இதனைக் கருதியதாகச் சொன்ன அவர், இது கம்பத்து உணர்வை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்டார்.
தம் 13 வயது மகன், ஆறு வயது மகள், இரண்டரை வயது மகன் ஆகியோருடன் நிகழ்ச்சியில் பங்கேற்றார் புகனேஸ்வரி, 37.
“என் பிள்ளைகள் பல விளையாட்டுகளில் பங்கேற்றனர். அத்துடன், பலரையும் சந்தித்துப் பேசினர். இது சமூகத்துடன் உறவாடுவதற்கான வாய்ப்பாக அமைந்தது,” என்றார் அவர்.

