நெடுங்காலமாகத் தொடரும் தங்களது திருமண உறவில் நிம்மதி காண்கின்றனர் மருத்துவத்துறைப் பேராசிரியர் கோபாலகிருஷ்ணகோன் - பிரேமளா இணையர்.
ஒருவரையொருவர் ஆதரித்து, பிள்ளைகளை வளர்த்து, சமூகத்திற்கும் சேவையாற்றிவரும் இந்த இலட்சிய இணையரின் வாழ்க்கை, இல்லற அன்புக்குப் பாடமாகத் திகழ்கிறது.
பிரிட்டன் பல்கலைக்கழகம் ஒன்றில் புள்ளியியல், கணினி அறிவியல் பயின்ற திருவாட்டி பிரேமளா, 18 வயதில் தம் வருங்காலக் கணவரைச் சந்தித்ததாகக் கூறினார்.
“அவர் அப்போது இளம் விரிவுரையாளராக இருந்தார். விவாதப் போட்டி ஒன்றில் நான் பங்கேற்றிருந்தபோது, அவர் அதற்கு நடுவராக வந்திருந்தார்,” என்று அவர் நினைவுகூர்ந்தார்.
தமது 23ஆம் வயதில் திருவாட்டி பிரேமளா, பேராசிரியர் கோபாலைத் திருமணம் செய்துகொண்டார். இருவருமே ‘கிங்ஸ்’ கல்லூரியில் (King’s College) முதுநிலைப் பட்டக்கல்வி பயின்றனர்.
தம் கணவர் பணியில் சிறப்பதற்காகத் திருவாட்டி பிரேமளா, தாம் படித்த துறையிலிருந்து சற்று விலகி தங்களது இரு பிள்ளைகளை வளர்ப்பதில் கவனம் செலுத்தினார்.
தம் மனைவியின் தியாகத்தால் மூன்று முனைவர் பட்டங்களைப் பெற்ற பேராசிரியர் கோபாலகிருஷ்ணகோன், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற கெளரவப் பேராசிரியராகவும் உயர்ந்தார். ‘நேச்சர்’ போன்ற மதிப்புமிக்கக் கலைக்களஞ்சியங்களிலும் அவர் கட்டுரைகள் எழுதியுள்ளார்.
இந்த வெற்றிக்குத் தேவைப்பட்ட கவனம், நேரம், மன நிம்மதி ஆகியவற்றைத் தந்தது தம் மனைவியே எனப் பேராசிரியர் கோபால் பெருமிதத்துடன் கூறினார். குடும்பத்திற்காக உழைத்த தம் மனைவியின் வளர்ச்சியை மனமார விரும்பினார் இந்த அன்புக் கணவர்.
தொடர்புடைய செய்திகள்
சமூகப் பணியில் சிறந்து விளங்கிய திருவாட்டி பிரேமளா, ‘அவ்வா’ (AWWA) அமைப்பின் தலைவராகத் திகழ்ந்ததுடன், ‘சிங்கப்பூர் சொரோப்டிமிஸ்ட் அனைத்துலக’ (Soroptimist International of Singapore) அமைப்பிலும் செயல்பட்டார். சிங்கப்பூர்ப் பெண்கள் அமைப்புகளுக்கான மன்றத்தின் (SCWO) நிர்வாகக் குழுவிலும் அவர் இடம்பெற்றிருந்தார்.
இந்தியர் நற்பணிச் செயற்குழுக்களில் இணைந்து தொண்டூழியத்திலும் இந்த இணையர் ஈடுபட்டு வருகின்றனர்.

