புத்தாண்டில் கதை, பாடல், நாடகங்கள் ஆகியவற்றைப் புனையும் திறனை மேம்படுத்தவும் கற்றிராத இசைக் கருவிகளை வாசித்துப் பழகவும் உடற்குறையுள்ள கவிஞரும் மொழி ஆர்வலருமான டோபி லிம், 46, விரும்புகிறார்.
2025லேயே ஊழியர் திறன் அணி தேர்ச்சித் திட்டத்தின்கீழ் (WSQ) வழங்கப்படும் பாடங்கள், அவற்றுக்கு அப்பாற்பட்ட பாடங்கள் என 30 பாடங்களைப் பயின்றுள்ள அவர், தன்னை மேம்படுத்திக் கொள்வதில் பெரும் நாட்டம் கொண்டவர்.
“கலைகள், ஒருவர் பற்றி மற்றொருவர் புரிந்துகொள்வதற்கு வலுவான பாலமாகத் திகழ்கின்றன,” என்று டோபி கூறினார். உடற்குறையுள்ளோரின் வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள எழுத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தும் அவர், அண்மையில் டீன் என்பவருடன் ‘பாலங்களை அமைத்தல்’ எனும் பாடலை இணைந்து எழுதி வழங்கினார். பாடலை https://www.youtube.com/watch?v=pvEbaymF1hM https://open.spotify.com/track/7AlxHAaZfluWqcxhLXo4P0?si=d5sjnyrAQkiRx4guQpeleQ https://music.apple.com/sg/album/build-bridges-feat-eric-haley-toby-lim/1860288972?i=1860288974 ஆகிய தளங்களில் காணலாம்.
அதற்காக, ‘எஸ்ஜி இனேபல்’ பத்தாம் ஆண்டு நிறைவையொட்டி நடத்தப்பட்ட பாடல் எழுதும் போட்டியில் அவர் வெற்றியும் பெற்றார். அப்போது பிரதமர் வோங்கை நேரில் சந்தித்து உரையாடும் வாய்ப்பும் அவருக்குத் தன் இசைப்பயணத்தைத் தொடர உந்துதலளித்தது.
2000ல் தேசிய சேவைக் காலத்தில், எனிசிபிலைட்டிஸ், மெனிஞ்சைட்டிஸ் ஆகிய இரு மூளைசார்ந்த நோய்களால், நடக்கும் ஆற்றலை இழந்து சக்கர நாற்காலியைப் பயன்படுத்தத் தொடங்கினார் டோபி.
பல சவால்களுக்கு மத்தியில் 2006ல் ஆங்கிலம், வர்த்தகத்தில் ‘யுனிசிம்’ (UniSIM) பல்கலைக்கழகத்திலிருந்து இளங்கலைப் பட்டம் பெற்றார் டோபி.
ஆனால் ஆசிரியராகப் பணிபுரியக் கல்வி அமைச்சிடம் பலமுறை விண்ணப்பித்தும் அவரது குறிக்கோள் ஈடேறவில்லை.
அதனால், தொடக்கநிலை மாணவர்களுக்கு ஆங்கிலம், கணிதம், அறிவியல், சீனம் போன்ற பாடங்களைக் கற்பிக்கும் துணைப்பாட ஆசிரியராகப் பணிபுரிய விரும்பி, அதற்காகச் சமூக ஊடகங்களிலும், காப்பிக் கடைகளிலும் விளம்பரங்களை விநியோகித்தார்.
தொடர்புடைய செய்திகள்
எனினும் உடல்நலப் பிரச்சினைகளால் அவரால் தொலைவிலுள்ள வீடுகளுக்குச் சென்று கற்பிக்க முடியவில்லை. சிலரது இல்லங்களில் சாய்த்தளப்பாதையும் இல்லாததால் வீட்டிற்குள் அவரது சக்கர நாற்காலி நுழையமுடிவதில்லை. பலரும் அவரது வீட்டிற்குச் சென்று துணைப்பாடம் கற்க முன்வருவதில்லை.
துப்புரவாளராகப் பணியாற்றிவந்த அவரது தாயார் வேலையிலிருந்து அண்மையில் ஓய்வுபெற்றார். தந்தை, சகோதரர் உயிருடன் இல்லை. குடும்பமாக நடத்திவந்த கடை மூடப்பட்டது.
இந்நிலையில் நூல்கள் வாசிப்பதும் கவிதைகள் எழுதுவதும் அவருக்குத் தஞ்சம் அளித்தன.
இனி கவிதைகள் எழுதுவதுடன், பாடல்கள், புனைவுக்கதைகள், நாடகங்கள் போன்றவற்றை எழுதுவதில் நிபுணத்துவப் பயிற்சி வழங்கும் திட்டங்களில் சேர விரும்புகிறார். உடற்குறையுள்ள கலைஞர்களை ஆதரிக்கும் உபகாரச் சம்பளங்கள் அல்லது புரவலர்களைத் தேடிவருகிறார்.
தன்னுடன் படித்த ஜேஜே லின் இன்று புகழ்பெற்ற பாடகராக முன்னேறி இருப்பதைக் கண்டு, தாமும் தன் அனுபவங்களைப் பாடல்களாக வழங்கலாமெனச் சிந்தித்த டோபி, இசைக் கருவிகளை முறையாகக் கற்கவும் விரும்புகிறார். “உடற்குறையுள்ளோரை ஈடுபடுத்தும் கலைப் படைப்புகள், மக்களுக்கு அர்த்தமுள்ள கண்ணோட்டங்களை வழங்கும்,” என்றார் டோபி.
விளையாட்டுப் பொருள்களைச் சேகரிக்கும் ஆர்வமும் கொண்டுள்ள டோபி, புத்தாண்டில் பலரிடமிருந்தும் விளையாட்டுப் பொருள்களைப் பெற்று தன் சேகரிப்பை விரிவுபடுத்தவும் விரும்புகிறார்.
டோபியைப் பற்றி மேல்விவரங்களுக்கு https://tinyurl.com/TobyLimDocumentary இணையத்தளத்தை நாடலாம்.

