மார்பகப் புற்றுநோய்க்கு எதிரான 49 வயது பரமேஸ்வரி வீரசிங்கத்தின் போராட்டம் அவரது இறுதி ‘கீமோதெரபி’ சிகிச்சையுடன் நிறைவுபெறவில்லை.
சிகிச்சைக்குப் பிறகு, பேசிக்கொண்டிருக்கும்போதே சொற்களை மறந்துவிடுவது, முக்கியச் சந்திப்புகளை நினைவில்கொள்ள முடியாதிருப்பது, திடீர் மனச்சோர்வு போன்ற சிந்தனைச் செயல்பாட்டுக் குறைபாடுகளை இவர் எதிர்கொள்ளத் தொடங்கினார்.
‘கீமோ மூளை’ (Chemo Brain) என்று அழைக்கப்படும் ஒருவகையான நினைவாற்றல் குறைபாட்டால் திருமதி பரமேஸ்வரி பாதிக்கப்பட்டிருந்தார்.
“சொற்கள் நினைவுக்கு வராததால் என் வாக்கியங்களைப் பாதியிலேயே பலமுறை நிறுத்தியிருக்கிறேன்,” என்று கல்வியமைச்சில் நீண்ட காலமாக ஆசிரியராக பணியாற்றியுள்ள திருமதி பரமேஸ்வரி கூறினார்.
இதைச் சமாளிக்க, அவர் தமது அன்றாடச் செயல்களைத் திட்டமிட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கினார். நோட்ஸ் செயலிகள், நாட்காட்டி நினைவூட்டல்கள் போன்றவற்றின் உதவியால் தமது கற்பித்தலுக்கான முன்னேற்பாடுகளை மேற்கொண்டார்.
“எட்டு ஆண்டுகள் கடந்தும் நான் இன்றுவரை இந்த நினைவாற்றல் குறைபாட்டினால் அவ்வப்போது பாதிக்கப்பட்டுள்ளேன். குறிப்பாக, பள்ளி விடுமுறையின்போது, எனது மூளை அதிகம் செயல்படாத நேரங்களில், இந்த நிலைமை ஏற்படும்.
“இருப்பினும், தற்பேணுகை, நினைவாற்றல் பயிற்சிகள், குடும்பத்தினர், நண்பர்களின் ஆதரவு முதலியவற்றின் உதவியுடன் அதன் விளைவுகளைக் கட்டுப்படுத்த கற்றுக்கொண்டேன்,” என்று அவர் கூறினார்.
கடந்த 2016ல் வழக்கமான மருத்துவப் பரிசோதனையின்போது, திருமதி பரமேஸ்வரிக்கு இரண்டாம் நிலை மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
குடும்ப வரலாற்றில் இதுபோன்ற நோய்களால் இதுவரை எவரும் பாதிக்கப்படாத நிலையில், இந்தத் தகவல் முற்றிலும் எதிர்பாராத ஒன்றாக இருந்தது என்றார் அவர்.
அப்போது அவருடைய இரண்டு மகள்களுக்கு முறையே ஆறு, பத்து வயதானது. அப்போதுதான் தன் தோழியின் தாயை மார்பகப் புற்றுநோய்க்கு இழந்திருந்த தம் மூத்த மகள் இந்தச் செய்தியினால் மிகுந்த மனவருத்தம் அடைந்ததாக திருமதி பரமேஸ்வரி நினைவுகூர்ந்தார்.
அவர், எந்தத் தருணத்திலும் தம் மகள்களை ஒதுக்கிவிடாமல் புற்றுநோய்ப் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களை ஈடுபடுத்தினார்.
இந்த இக்கட்டான காலக்கட்டத்தில், திருமதி பரமேஸ்வரியின் கணவர் திரு ரஜித் அவருக்கு உறுதுணையாக இருந்தார்.
“என் நோய்க்குச் சிறந்த தீர்வு என்ன, சிறந்த மருத்துவர்கள் யார் என்று அறிய, இரவெல்லாம் இணையத்தில் தேடிக்கொண்டிருப்பார்,” என்று திருமதி பரமேஸ்வரி கூறினார்.
புற்றுநோய் பற்றிய செய்தியைத் தெரிந்துகொண்ட சிறிது காலத்திலேயே அவருடைய கணவரின் தாயார் உடல் நலக்குறைவால் காலமானார்.
“அவரது இறுதிச்சடங்கு நாளில்கூட, என் கணவர் காலையில் என்னை ‘கீமோதெரபி’ சிகிச்சைக்கு அழைத்துச் சென்றார். அதன்பிறகு இரவில் தம் தாயின் இறுதிச்சடங்குக்காக விமானம் மூலம் வெளியூர் சென்றார்,” என்று திருமதி பரமேஸ்வரி கண்ணீர் மல்க நினைவுகூர்ந்தார்.
முழுநேரக் கல்வியாளராகக் பணிபுரிந்துகொண்டிருந்த திருமதி பரமேஸ்வரி, தம்முடைய நோயுற்ற தாயாரையும் இளவயது மகள்களையும் கவனிக்க அந்தப் பணியை 2014ல் இடைநிறுத்தம் செய்ய முடிவுசெய்திருந்தார்.
அதைத் தொடர்ந்து வீட்டில் துணைப்பாட வகுப்புகள் எடுத்துக்கொண்டிருந்த அவர், 2016ல் புற்றுநோய் கண்டறியப்பட்டவுடன், அதையும் நிறுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
ஒன்பது மாத காலம் அறுவை சிகிச்சை, எட்டு ‘கீமோதெரபி’ அமர்வுகள் எனக் கடினமான சிகிச்சைப் பயணத்தை எதிர்கொண்ட திருமதி பரமேஸ்வரி, அதே நேரத்தில் நோயால் படுக்கையாக இருந்த தம் தாயாரையும் கவனித்துக்கொண்டார்.
“வாழ்க்கையில் கடினமான சவால்களை எதிர்கொள்ளும்போது அவற்றை மனவலிமையுடனும் கருணையுடனும் எதிர்கொள்ள என் தாயார் எனக்கு கற்றுக்கொடுத்தார்,” என்றார் திருமதி பரமேஸ்வரி.
தாயார் காலமானபோது, அவர் தமக்குக் கற்றுக்கொடுத்ததை நினைவில் நிறுத்தி, தமது வாழ்க்கையைத் துணிவுடனும் மேலும் அர்த்தமுள்ளதாகவும் வாழ வேண்டும் எனத் திருமதி பரமேஸ்வரி உறுதிபூண்டார்.
திருமதி பரமேஸ்வரி, புற்றுநோய் பாதிப்பிலிருந்து 2017ஆம் ஆண்டில் முழுமையாக மீண்டு வந்தார்.
அதன்பின் கல்வியமைச்சில் மீண்டும் பணியில் சேர்ந்த அவர், குடும்பத்திற்கும் உடல்நலத்திற்கும் முன்னுரிமை கொடுத்து, பணிநேரத்தைக் குறைத்துகொண்டு ஒப்பந்த துணை ஆசிரியராகப் (contract-adjunct teacher) பணிபுரிந்து வருகிறார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு, 2019ஆம் ஆண்டு ஓம்கார் கலை அமைப்பில் மீண்டும் பரதநாட்டிய பயிற்சியை மேற்கொள்ளவும் தொடங்கினார்.
அண்மையில், மார்ச் 7ஆம் தேதி நடைபெற்ற ‘கரேஜ் கேட்வாக்’ ஆடை அலங்கார நடை நிகழ்ச்சியில், மார்பகப் புற்றுநோயை எதிர்கொண்ட 20 வீராங்கனைகளில் ஒருவராகக் கலந்துகொண்டு, புற்றுநோய் அறக்கட்டளைக்கு $35,000 நன்கொடை திரட்டவும் அவர் உதவினார்.
“ஒவ்வொரு நாளும் நல்ல உடல்நலத்துடன் இருப்பதை நான் ஒரு சிறிய, விலைமதிப்பற்ற வெற்றியாகக் கருதுகிறேன்,” என்கிறார் திருமதி பரமேஸ்வரி.
மார்பகப் புற்றுநோயுடனான அவரது போராட்டம் மனத்திலும் உடலிலும் வடுக்களை விட்டுச்சென்றிருந்தாலும், வாழ்க்கையில் எதையும் சமாளிக்கும் மனவலிமையை அது தமக்குள் விதைத்திருப்பதாக அவர் கூறினார்.