சிவாணி சக்திவேல்
சிங்கப்பூரில் உள்ளூர் வணிகர்களுக்கு மக்கள் வழங்கும் அங்கீகாரத்தையும் ஆதரவையும் கண்டு, அத்தகைய நிலையை சென்னையிலும் ஏற்படுத்த வேண்டும் என விரும்பினார் 34 வயது தனுஷ்யா வி.எஸ்.
அடிக்கடி சிங்கப்பூருக்குப் பயணம் செய்யும் தனுஷ்யா, இங்கு நீடித்த நிலைத்தன்மையைக் கருத்தில்கொண்டு தயாரிக்கப்படும் பொருள்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதைக் கண்டார். அத்தகைய பொருள்கள் குறித்த விழிப்புணர்வை இந்தியாவிலும் ஏற்படுத்த வேண்டும் என அவருக்குத் தோன்றியது.
சிங்கப்பூர் தந்த உந்துதல்
அந்த ஆர்வத்தில் தனுஷ்யா உருவாக்கிய ‘கை மெட்ராஸ்’ (KAII Madras), வெறும் நினைவுப் பொருள்களை விற்கும் கடையாக மட்டுமன்றி, முழுவதும் பெண்களால் தொடங்கப்பட்டு, பெண்களே நிர்வகித்து, பெண் கைவினைஞர்களின் தயாரிப்புகளை மட்டும் விற்பனை செய்யும் ஒரு தனித்துவமான வணிகத் தளமாகத் திகழ்கிறது.
வெளிநாட்டுத் தயாரிப்புகளின் ஆதிக்கத்தால் உள்ளூர்க் கலைஞர்கள் தங்களின் அடையாளத்தை இழந்துவரும் சூழலில், கை மெட்ராஸ் அவர்களுக்குக் கைகொடுக்கிறது.
லண்டனில் ‘ஃபேஷன் மீடியா ஸ்டைலிங்’ துறையில் பட்டம் பெற்ற தனுஷ்யா, தமது பல்வேறு வெளியூர் பயணங்களின்போது கைவினைப் பொருள்களின் மதிப்பை ஆழமாக உணர்ந்ததாக கூறினார்.
மறுவடிவம் பெறும் பாரம்பரியம்
பல்லாண்டுகளுக்கு உழைக்கக்கூடிய, சுற்றுச்சூழலுக்கு உகந்த தமிழ்நாட்டின் பாரம்பரியக் கூடைப்பைகள் மக்களிடையே தங்களின் மதிப்பை இழந்து வருவதை அவர் கவனித்தார்.
அப்பைகளின் மூலப்பொருள்களைக் கொண்டு, நவீன பயன்பாட்டிற்கு ஏற்றவாறு ‘கிளட்ச்' (clutch), ‘பேக்பேக்’ (backpack) போன்ற பை வகைகளாக அவற்றை மறுவடிவமைத்து உலகளவில் ஏற்றுமதி செய்யத் தொடங்கினார்.
இந்த முயற்சிக்குக் கிடைத்த உலகளாவிய வரவேற்பு, உள்ளூரில் தங்களின் திறமையை வீட்டிலேயே முடக்கி வைத்திருக்கும் பல பெண்களின் கைவினைத்திறனை உலகறியச் செய்ய வேண்டும் என்ற சிந்தனையை அவருக்குள் விதைத்தது.
தொடக்கத்தில் ஆறு பெண் கைவினைக் கலைஞர்களின் தயாரிப்புகளுடன் தொடங்கப்பட்ட இந்தக் கடை, இப்போது 60க்கும் மேற்பட்ட பெண் படைப்பாளிகளின் புகலிடமாக வளர்ந்துள்ளது.
“ஒரு பொருளை உருவாக்கி முடிக்கக் குறைந்தது இரண்டு அல்லது மூன்று நாள்கள் தேவைப்படும் நிலையில், அதன் பின்னணியில் உள்ள உழைப்பிற்கும் நேர்த்தியான கலைத்திறனுக்கும் உரிய அங்கீகாரமும் நியாயமான விலையும் கிடைக்க வேண்டும் என்பதில் ‘கை மெட்ராஸ்’ உறுதியாகச் செயல்படுகிறது,” என்றார் தனுஷ்யா.
மட்பாண்டக் கலையில் புதிய பாதை
இன்றைய சூழலில் பெண் தொழில்முனைவோர் எதிர்கொள்ளும் அன்றாடச் சவால்களுக்குத் தீர்வாக ‘கை மெட்ராஸ்’ அமைவதாக ‘பாட்டரிகாரி’ (PotteryKaari) நிறுவனரான 33 வயது ரெசினா கமாலுதீன் குறிப்பிட்டார்.
பொறியியல் பட்டதாரியான இவர், அதிக ஊதியத்துடனான பெருநிறுவன வேலையிலிருந்து விலகி, மனநிறைவைத் தேடி 2022ஆம் ஆண்டு மட்பாண்டக் கலையை முழுநேரத் தொழிலாகத் தேர்ந்தெடுத்தார்.
தொடக்கத்தில் வார இறுதி நாள்களிலும், பின்னர் கொவிட்-19 தொற்றுநோய்க் காலத்தின்போதும் மட்பாண்டக் கலையைக் கற்றுக்கொண்ட அவர், தமது வீட்டின் மொட்டை மாடியிலேயே ஒரு சிறிய ஸ்டுடியோவை அமைத்தார்.
தொடக்கக் காலத்தில், பல விற்பனைக் கண்காட்சிகளில் பெருந்தொகையைச் செலுத்திப் பங்கேற்றும், ஒரு பொருள்கூட விற்பனையாகாமல் மிகுந்த நிதி இழப்பையும் மன உளைச்சலையும் சந்தித்ததை அவர் நினைவுகூர்ந்தார்.
ஆடைகளுக்கும் உணவுப் பொருள்களுக்கும் மட்டுமே கண்காட்சிகளில் வரவேற்பு இருந்த நிலையில், அவரைப் போன்ற பெண் கலைஞர்களுக்குத் தங்களின் கைவினைப்பொருள்களைச் சந்தைப்படுத்துவது பெருஞ்சவாலாகவே இருந்தது.
இவ்வாறான நெருக்கடியான சூழலில்தான் ‘கை மெட்ராஸ்’ தமக்கு ஒரு நிரந்தரமான, பாதுகாப்பான சந்தை வாய்ப்பை உருவாக்கியது என்று ரெசினா குறிப்பிட்டார்.
“தரமான படைப்புகளை மட்டுமே மையப்படுத்தும் இத்தளத்தின்மூலம் இன்று ‘பாட்டரிகாரி’ வணிகச் சின்னம் நிலையான விற்பனையையும் வாடிக்கையாளர்களின் நேரடி ஆதரவையும் பெற்றுத் தனித்து நிற்கிறது,” என்று கை மெட்ராசுக்கு அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
மரபு காக்கும் ‘வைபவம்’
இதேபோன்று, நவீன வீடுகளில் தென்னிந்திய, தமிழ் மரபு சார்ந்த மரச்சாமான்களை அறிமுகப்படுத்தும் நோக்கில், 40 வயது அனு பாலாஜியும் 32 வயது ராஜஸ்ரீ அசோக்கும் ‘வைபவம்’ (Vaibhavam) என்ற பெயரில் தங்கள் வணிகத்தை தொடங்கினர்.
சந்தையில் பெரும்பாலும் வடஇந்திய அல்லது மேற்கத்திய மரச்சாமான்கள் ஆதிக்கம் செலுத்தும் நிலையில், தமிழக அடையாளத்தை வெளிக்காட்டும் தமிழ் பாரம்பரியம் சார்ந்த பிரத்தியேக அலங்காரப் பொருள்களை அவர்கள் வடிவமைக்கின்றனர்.
ஆடைத்துறையில் எந்தப் பின்னணியும் இன்றி, ஓராண்டுகாலத் தீவிர ஆராய்ச்சிக்குப் பிறகு சிறிய அளவிலான உற்பத்தியாளர்களைக் கண்டறிந்து இருவரும் இணைந்து இத்தொழிலைத் தொடங்கினர்.
சிறு குழந்தைகளின் தாய்மார்களான இவர்கள், குடும்பப் பொறுப்புகளுக்கு இடையே இணையம் வழியாக மட்டுமே தங்கள் விற்பனையை மேற்கொண்டு வந்தனர்.
காலப்போக்கில், வாடிக்கையாளர்கள் நேரில் வந்து பொருள்களைப் பார்வையிட்டு, தொட்டுப் பார்த்து வாங்குவதற்கான வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்று விரும்பினர். அந்த வாய்ப்பை வழங்கும் நம்பகமான தளமாக ‘கை மெட்ராஸ்’ அமைந்தது.
“இந்தியாவைத் தாண்டி, இன்று சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலிருந்து வரும் வாடிக்கையாளர்கள், தங்களின் தமிழ் வேர்களை நினைவூட்டும் இந்தப் பொருள்களை மிகுந்த ஆர்வத்துடன் தேடி வந்து வாங்கிச் செல்கின்றனர்,” என்று அனு கூறினார்.
பெண் ஆற்றலின் அடையாளம்
நினைவுப்பரிசுக் கடை என்பதைத் தாண்டி, பெண் கைவினைஞர்களின் உழைப்புக்குரிய அங்கீகாரத்தையும் பொருளியல் சுதந்திரத்தையும் உறுதிசெய்யும் ஒரு சமூக இயக்கமாக ‘கை மெட்ராஸ்’ செயல்பட்டு வருகிறது.
மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக நிதி திரட்டும் வணிகங்கள் முதல் அன்றாடக் குடும்பப் பொறுப்புகளுக்கு இடையே சிறுதொழில்களை நடத்திவரும் தாய்மார்களின் முயற்சிகள்வரை பல்வேறு செயல்பாடுகளுக்கு இந்தத் தளம் இடமளிக்கிறது. இதன்மூலம் உள்ளூர்க் கைவினைப் பொருள்களையும் பெண்கள் முன்னெடுக்கும் சிறுதொழில்களையும் பரந்த வாடிக்கையாளர் வட்டத்திடம் ‘கை மெட்ராஸ்’ கொண்டுசேர்க்கிறது.


