உழைப்பின் சிறப்பை எடுத்துரைக்கும் வளமான பாடல் வரிகளைப் புனைந்த ‘மக்கள் கவிஞர்’ பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை நினைவுகூரும் வகையில், அவர் பெயரிலான கலை இலக்கிய விழா நடந்தேறியது.
மக்கள் கவிஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் உழைப்பாளர் தினத்தன்று (மே 1) நடைபெற்ற விழாவில், சமூகச் சேவையாளர் தமிழரசி முத்துக்கு உழைப்பாளர் விருது வழங்கப்பட்டது.
திருவாட்டி தமிழரசி முத்து தமது பதினோராவது வயதில் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்திலிருந்து சமூகச் சேவைப் பயணத்தைத் தொடங்கினார்.
‘லிட்டில் சிஸ்டர்ஸ் ஆஃப் த புவர்’ (Little Sisters of the Poor) முதியோர் இல்லத்திலும் சிங்கப்பூர் ஸ்பாஸ்டிக் குழந்தைகள் சங்கத்திலும் பணியாற்றிய திருவாட்டி தமிழரசி, மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கும் உடல் குறைபாடு உள்ளோருக்கும் உறுதுணையாக இருந்தார்.
அத்துடன், ‘ஊனமுற்றோர் நலச் சங்கத்தில்’ (Handicaps Welfare Association) நான்கு ஆண்டுகள் தன்னார்வலராகச் சேவையாற்றித் தமது கடமையைச் செவ்வனே நிறைவேற்றினார்.
2000ல், சமூக, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் (MSF) ‘கல்வி அறக்கட்டளை நிதியம்’ தன்னார்வலர் திட்டத்தில் இணைந்து, பல்வேறு குழுக்களின் ஆதரவுடன் வசதிகுறைந்த குடும்பங்களுக்குப் பல உதவிகளைச் செய்து அவர்களது வாழ்வில் ஒளியேற்றினார்.
2005 முதல் 2011 வரை ‘குழந்தைகள் புற்றுநோய் அறக்கட்டளையில்’ (Children’s Cancer Foundation) பணியாற்றிய அவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் குடும்பத்தினருக்கும் ஆதரவு வழங்கினார்.
கோ.சா.நற்பணி மன்றம் உள்ளிட்ட சமூக, கலாசாரக் குழுக்களுடன் இணைந்து அவர் தொடர்ந்து சமூகப் பணிகளை முன்னெடுத்து வருகிறார். நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரும் மக்கள் கவிஞர் மன்றத்தின் துணைச் செயலாளருமான ஏ. ஆர். விவேக்கின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.
தொடர்புடைய செய்திகள்
நிகழ்ச்சியில் சிங்கப்பூர்த் தமிழாசிரியர்கள் சங்கத் தலைவர் தனபால் குமார் இந்நிகழ்ச்சியின் சிறப்புப் பேச்சாளராகக் கலந்துகொண்டார். மக்கள் கவிஞர் மன்றத்தின் தலைவர் புவனேஸ்வரி அரங்க ராமசாமி, செயலாளர் வி. ராஜாராம் ஆகியோரின் உரைகளும் இடம்பெற்றன.
நாடாளுமன்ற முன்னாள் நியமன உறுப்பினர் இரா. தினகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார். பட்டுக்கோட்டையார் குறித்துத் தாம் கற்றறிந்த அரிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டதுடன், மன்றத்தின் சமூகப் பணிகளையும் அவர் பாராட்டிப் பேசினார்.
அதனைத் தொடர்ந்து, பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும், நடுவர்களுக்கும், மன்றத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் ஆதரவாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

