மனிதவள அமைச்சின் புதிய வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதியில் நோன்பு துறப்பு

மனிதவள அமைச்சின் புதிய வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதியில் நோன்பு துறப்பு

3 mins read
f3cdfb3b-8beb-4fe9-b994-44b3e680676f
ஊழியர்களுக்கு நோன்புக் கஞ்சி பரிமாறும் கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் மனிதவளத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ். அஸ்யாகிரின் பள்ளிவாசல் நிர்வாகக் குழுவின் துணைத் தலைவர் அஸ்மான் காசிம் உடன் உள்ளார். - படம்: மனிதவள அமைச்சு

மனிதவள அமைச்சு கடந்த ஜனவரியில் பூன் லேயில் புதிதாகத் திறந்துவைத்த வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8) ஏறத்தாழ 300 ஊழியர்களுடன் நோன்பு துறப்பு சிறப்பாக நடந்தேறியது.

துக்காங் இன்னொவேஷன் லேனில் உள்ள ‘நெஸ்ட் துக்காங்’ விடுதியில் கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் மனிதவளத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் ஊழியர்களுக்கு நோன்புக் கஞ்சி வழங்கி, அவர்களுடன் சேர்ந்து நோன்பு துறப்பில் கலந்துகொண்டார். 

ஊழியர்களுடன் நோன்பு துறக்கும் திரு தினேஷ் வாசு தாஸ்.
ஊழியர்களுடன் நோன்பு துறக்கும் திரு தினேஷ் வாசு தாஸ். - படம்: மனிதவள அமைச்சு

அருகில் உள்ள அஸ்யாகிரின் பள்ளிவாசலின் சமயத் தலைவர்களையும் முக்கியப் பங்குதாரர்களையும் ஒன்றிணைப்பதன்மூலம், சமூக ஒற்றுமையை வளர்ப்பதையும் வெளிநாட்டு ஊழியர்களின் நலனை ஆதரிப்பதையும் இந்த நிகழ்வு இலக்காகக் கொண்டிருந்தது.

தங்குவிடுதியில் வசிக்கும் ஊழியர்களுக்கும் முஸ்லிம் தலைவர்களுக்கும் இடையேயான உறவுப் பாலமாகவும் இந்நிகழ்ச்சி விளங்கியது.

நோன்பு துறப்பை ஒருங்கிணைப்பதில் மற்ற சமயங்களைச் சேர்ந்த விடுதிவாசிகள் முக்கியப் பங்காற்றினர்.

நோன்பு துறப்புக்குப் பிறகு தொழுகையில் ஈடுபடும் ஊழியர்கள்.
நோன்பு துறப்புக்குப் பிறகு தொழுகையில் ஈடுபடும் ஊழியர்கள். - படம்: மனிதவள அமைச்சு

விடுதிவாசிகளுக்கும் நிர்வாகத்துக்கும் இடையே வலுவான தொடர்பையும் சமூக ஒற்றுமையையும் ஏற்படுத்தும் தலைமைத்துவத் திட்டமான ‘கேர்புரோ’ (carebro) 2025 டிசம்பரில் தொடங்கப்பட்டது. 

இத்திட்டத்தின்மூலம், விடுதியில் தலைமைப் பொறுப்பு வகிக்கும் ஊழியர்கள், தங்களின் சக நண்பர்களுக்கு ஆதரவளிப்பதோடு, அவர்களின் குறைநிறைகளை நிர்வாகத்திடம் கொண்டு சேர்த்து அவற்றுக்குத் தீர்வுகாண உதவுகின்றனர்.

இத்திட்டம், விடுதிவாசிகள் அனைவருக்கும் மதிக்கப்படும், பாதுகாப்பான வாழ்க்கைச் சூழலை ஏற்படுத்தி வருகிறது.

முஸ்லிம் ஊழியர்களுடன் சேர்ந்து நோன்பு துறக்கும் மற்ற சமய ஊழியர்கள்.
முஸ்லிம் ஊழியர்களுடன் சேர்ந்து நோன்பு துறக்கும் மற்ற சமய ஊழியர்கள். - படம்: மனிதவள அமைச்சு

‘கேர்புரோ’ திட்டம் மூலம் தகவல் பரிமாற்றம், சக ஊழியர்களுக்கான ஆதரவு, ஒருவரை ஒருவர் கவனித்துக்கொள்ளும் சமூக உணர்வு ஆகியவை மேம்படுகின்றன.

வெளிநாட்டு ஊழியர்களின் நலனை ஆதரிக்கும் நோன்பு துறப்பு நிகழ்ச்சி

பங்ளாதேஷ் ஊழியரான திரு ஜஹாங்கிர் ஆலம் முகமது, 45, சிங்கப்பூரில் 26 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.

‘நெஸ்ட் துக்காங்’ விடுதியில் நோன்பு திறப்பு நிகழ்வுகளை ஒருங்கிணைப்பதில் அவர் முக்கியப் பங்கு வகித்து வருகிறார். 

“ஜனவரியில் இந்த விடுதியில் தங்க வந்தபோது எனக்கு யாரையும் தெரியாது. பின்னர் விடுதி நிர்வாகம் என்னைத் தொடர்புகொண்டது. 

“அதன் பிறகு நாங்கள் ஒருவரையொருவர் தெரிந்துகொண்டோம். இப்போது விடுதியில் உள்ள அனைவரையும் ஒரு குடும்பம்போல உணர்கிறேன்,” என்றார் அவர்.

பங்ளாதேஷைச் சேர்ந்த 32 வயது அல் அமீன், 2025 டிசம்பரில் ‘நெஸ்ட் துக்காங்’ விடுதியில் வசிக்கத் தொடங்கிய முதல் சில ஊழியர்களில் ஒருவராவார். 

திரு தினேஷ் வாசு தாஸ், திரு அஸ்மான் காசிம் (வலக்கோடி) இருவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் விடுதிவாசி அல் அமீன்.
திரு தினேஷ் வாசு தாஸ், திரு அஸ்மான் காசிம் (வலக்கோடி) இருவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் விடுதிவாசி அல் அமீன். - படம்: மனிதவள அமைச்சு

‘கேர்புரோ’ திட்டத்தில் தவறாமல் பங்கேற்கும் இவர், புதிய முயற்சிகளை மேற்கொள்ள கருத்து கூறுவதோடு, நோன்பு துறப்பு பற்றிய தகவல்களை மற்ற விடுதிவாசிகளுக்கு எடுத்துரைக்கிறார். 

“இத்திட்டத்தின் ஒவ்வொரு தன்னார்வலரும் அவரவர் பொறுப்பில் தலைவராவார். எனவே, இதன்மூலம் விடுதி சம்பந்தப்பட்ட பல விவகாரங்களை நிர்வாகத்திடம் கொண்டுசேர்த்து, அவற்றுக்குத் தீர்வுகாண முனையலாம்,” என்று திரு அமீன் கூறினார்.

சிங்கப்பூரில் ஒன்பது ஆண்டுகளாகப் பணிபுரிந்து வரும் இந்திய ஊழியர் ஆத்மநாதன் கார்த்திகேயன், 34, விடுதியில் சேர்ந்த முதல் நாளிலிருந்தே சமூக நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டி வருகிறார்.

தங்குவிடுதியில் அண்மையில் பொங்கல் கொண்டாட்டங்களுக்குப் பங்காற்றிய இவர், ரமலான் மாத ஏற்பாடுகளிலும் மும்முரமாக ஈடுபடுகிறார்.

“எனது பங்ளாதேஷ் சகோதரர்களுக்கு ஆதரவளிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். கடந்த முறை, பொங்கல் கொண்டாட்டத்தின்போது என் சகோதரர்களும் எனக்குப் பெரிதும் ஆதரவாக இருந்தனர்,” என்று நெகிழ்ச்சியுடன் கார்த்திகேயன் கூறினார் 

அஸ்யாகிரின் பள்ளிவாசல் நிர்வாகக் குழுத் துணைத் தலைவராக உள்ள திரு அஸ்மான் காசிம், சமூகங்களுக்கும் சமயங்களுக்கும் இடையிலான நல்லிணக்கப் பணிகளில் 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர்.

நெஸ்ட் துக்காங் விடுதியுடனான பங்காளித்துவம் ஒன்றின்வழி, வெளிநாட்டைச் சேர்ந்த முஸ்லிம் ஊழியர்களுக்குத் தொழுகை வசதி, தொழுகையை வழிநடத்தும் இமாம்களின் தெரிவு போன்ற அம்சங்களில் கிவர் முக்கிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார்.

வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூரைத் தங்களது மற்றோர் இல்லமாகக் கருத, இத்திட்டம்வழி பங்காற்றும் நல்வாய்ப்பைப் பள்ளிவாசல் பெற்றுள்ளதாக திரு அஸ்மான் குறிப்பிட்டார்.

“சிங்கப்பூரைத் தங்கள் வீடாகக் கருதினால், அவர்களால் இங்கு மேலும் சிறப்பாகப் பணியாற்ற முடியும்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்