வேலையிடத்தில் இதய நலம்; விழிப்புணர்வூட்ட நிதித்திரட்டு

வேலையிடத்தில் இதய நலம்; விழிப்புணர்வூட்ட நிதித்திரட்டு

2 mins read
80a3bdb2-77af-4fc3-a540-af59b5ac199b
சிங்கப்பூர் இதய அறநிறு வனம் வியாழக்கிழமை (ஜூலை 9) செந்தோசா கோல்ஃப் கிளப்பில் ‘அ தவுசண்ட் ஃபார் குட்’ - படம்: சாவ்பாவ்

சிங்கப்பூரின் பணியிடங்களில் இதய ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வையும், திடீர் மாரடைப்பு போன்ற அவசர நிலைமைகளைக் கையாளும் திறனையும் மேம்படுத்தும் நோக்கில்,  சிங்கப்பூர் இதய அறநிறு வனம் ‘அ தவுசண்ட் ஃபார் குட்’ (A Thousand for Good - ATFG என்ற அறப்பணித் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. 

செந்தோசா கோல்ஃப் கிளப்பில் வியாழக்கிழமை ( ஜூலை 9 ) நடைபெற்ற 24வது சிங்கப்பூர் இதய அறநிறுவனத்தின் கோல்ஃப் போட்டியின் போது இந்தத் தொடக்க விழா நடைபெற்றது.

‘அ தவுசண்ட் ஃபார் குட்’ திட்டத்தில் பங்கேற்கும் நிறுவனங்கள் ஆண்டுக்கு குறைந்தபட்சம் S$1,000 நன்கொடை வழங்க வேண்டும். இதற்கு ஈடாக, இதய அவசரநிலைகளைக் கையாள்வதற்கான உயிர் காக்கும் திறன்களில் ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்க இத்திட்டம் இலக்கு உறுதி செய்துள்ளது. 

அடுத்த ஐந்து ஆண்டுகளில் குறைந்தது 1,000 நிறுவனங்களைச் சேர்ந்தோர்  இத்திட்டத்தில் பங்கேற்கச் செய்ய வேண்டும் என்பதே சிங்கப்பூர் இதய அறநிறுவனம், தன் இலக்காகக் கொண்டிருப்பதாகக் கூறுகிறது.

நாடாளுமன்ற நாயகர் சியா கியன் பெங்  நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

‘அ தவுசண்ட் ஃபார் குட்’  திட்டத்தின் மூலம் திரட்டப்படும் நிதி, சிங்கப்பூர் இதய அறநிறுவனத்தின் சமூக விழிப்புணர்வு முயற்சிகள் மற்றும் தற்போது அதற்கென செயல்பட்டு வரும் மூன்று இதய ஆரோக்கிய மையங்களின் செயல்பாடுகள் உள்ளிட்ட திட்டங்களுக்கு ஒதுக்கப்படும்.

2027ஆம் ஆண்டின் இறுதிக்குள் திறக்கத் திட்டமிடப்பட்டுள்ள, பிடோக்கில் அமையவுள்ள நான்காவது இதய ஆரோக்கிய மையத்தின் கட்டுமானப் பணிகளுக்கும் இந்நிதி ஆதரவளிக்கும். இந்த மையங்கள் இதய நோயாளிகளுக்கு மானியத்துடனான சமூகம் சார்ந்த இதய மறுவாழ்வுத் திட்டங்களை வழங்குகின்றன.

சிங்கப்பூர் இதய அறநிறுவனத்தின்  புள்ளிவிவரங்களின்படி, சிங்கப்பூரில் மருத்துவமனைக்கு வெளியே மாரடைப்பு ஏற்பட்ட சம்பவங்கள் 2021ல் 3,637லிருந்து, 2022ல் 4,058ஆக அதிகரித்துள்ளன. 

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

2022ஆம் ஆண்டு தரவுகளின்படி, இந்தச் சம்பவங்களில் 80 விழுக்காடு வீடுகளிலும், 12 விழுக்காட்டுக்கும் அதிகமானவை பொது இடங்களிலும் நிகழ்ந்துள்ளன.

இந்தத் திட்டத்தின் முன்னோடிக் கட்டத்தில் பங்கேற்கும் நிறுவனங்களில் நெஸ்லே சிங்கப்பூர், சார்லஸ் அண்ட் கீத் குரூப் ஃபவுண்டேஷன் மற்றும் ‘ஏஎக்ஸ்எஸ் பிரைவேட் லிமிடெட்’ (AXS Pte Ltd) ஆகியவை அடங்கும். 

சிங்கப்பூர் இதய அறநிறுவனத்தின்  இதய ஆரோக்கிய மையத்தின் முன்னாள் நோயாளியான திரு மைக்கல் எவிங் போன்ற தனிநபர்களும் இதில் பங்கேற்றனர்.

குடியிருப்பாளர்கள் மற்றும் வாடகைதாரர்களுக்கு உயிர் காக்கும் திறன் பயிற்சியை வழங்க, ‘கம்போங் கொலாப்’ (Kampong Kolab) என்ற தமது வணிக இடத்தைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

1970ல் நிறுவப்பட்ட சிங்கப்பூர் இதய அறநிறு வனம், இதய நோய் மற்றும் பக்கவாதம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் ஒரு சமூக சேவை அமைப்பாகும். இந்த அமைப்பின் செயல்பாடுகள் நோய்த் தடுப்பு, நோயாளிகளின் மறுவாழ்வு மற்றும் உயிர்ப்பிப்பு (resuscitation) பயிற்சி ஆகியவற்றை மையமாகக் கொண்டுள்ளன, மேலும் இது இதய நோயாளிகளுக்கு நிதி உதவியும் வழங்குகிறது.

குறிப்புச் சொற்கள்
வேலையிடம்நிதிஇதயம்விழிப்புணர்வு