சிங்கப்பூர் அடித்தளக் காற்பந்தாட்டத்திற்கு மெருகூட்ட முயற்சி

சிங்கப்பூர் அடித்தளக் காற்பந்தாட்டத்திற்கு மெருகூட்ட முயற்சி

2 mins read
c70ea143-6137-47c7-bbf0-4472fdb702cc
‘பிரிமியர் லீக்’ அமைப்பின் ‘அடுத்த தலைமுறை பயிற்றுவிப்பாளர்கள்’ பயிலரங்கின் நிறைவு நிகழ்ச்சியில் முன்னாள் இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்ட வீரர்கள் நெமன்யா விடிச்சும் ஜோ கோலும் கலந்துகொண்டனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் சுட்டெரிக்கும் வெயிலில், ஒரு சனிக்கிழமை காலைப் பொழுது இங்கிலீஷ் பிரிமியர் லீக் போட்டியின் முன்னாள் நட்சத்திரங்களுடன் காற்பந்து விளையாடுவது என்பது பலருக்கும் நிறைவேறாக் கனவாகவே இருந்திருக்கும்.

ஆனால் அக்கனவு, 40 சிறுவர்களுக்கு மே 23ஆம் தேதி ஜாலான் புசார் விளையாட்டரங்கில் நனவானது.

‘பிரிமியர் லீக்’ அமைப்பு ஏற்பாடு செய்த ‘அடுத்த தலைமுறைப் பயிற்றுவிப்பாளர்கள்’ பயிலரங்கின் நிறைவு நிகழ்ச்சியில் நடந்தேறிய சிறார் காற்பந்துப் போட்டியில் முன்னாள் மான்செஸ்டர் யுனைடெட் வீரர் நெமன்யா விடிச்சும் முன்னாள் செல்சி, வெஸ்ட் ஹேம் வீரர் ஜோ கோலும் கலந்துகொண்டு பார்வையாளர்களைப் பரவசத்தில் ஆழ்த்தினர்.

வெயிலையும் பாராமல் முகத்தில் சிரிப்புடனும் ஆட்டத்தில் துடிப்புடனும் சிறுவர்கள் நட்புமுறைப் போட்டியில் பங்கேற்றனர்.

முன்னாள் மான்செஸ்டர் யுனைடெட் வீரர் நெமன்யா விடிச் சிறுவர்களுடன் காற்பந்து விளையாடி மகிழ்ந்தார்.
முன்னாள் மான்செஸ்டர் யுனைடெட் வீரர் நெமன்யா விடிச் சிறுவர்களுடன் காற்பந்து விளையாடி மகிழ்ந்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

“உலகின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் காற்பந்து விளையாட்டு, சிறுவர்களுக்குக் கொடுக்கும் ஆனந்தத்தில் எவ்வித மாற்றமும் இல்லை. அவர்கள் அதனை ரசித்து விளையாடுகிறார்கள். அதை அவர்கள் தொடர்வது காற்பந்து விளையாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியம்,” என்று புன்முறுவலுடன் கூறினார் திரு விடிச்.

அடித்தளக் காற்பந்தாட்டப் பயிற்றுவிப்பாளர்களின் முன்னேற்றத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அடுத்த தலைமுறைப் பயிற்றுவிப்பாளர்கள்’ பயிலரங்கு இரண்டாம் முறையாகச் சிங்கப்பூரில் நடந்தேறியது.

நான்கு நாள்கள் நீடித்த பயிலரங்கில் பங்கேற்ற பயிற்றுவிப்பாளர்கள் ‘கேர் கார்னர்’ அமைப்பின் சிறுவர்களுக்குப் பயிற்சியளித்து அவர்களைப் போட்டிக்குத் தயார்செய்தனர்.

சென்ற ஆண்டு முதன்முறையாகத் தொடங்கிய அந்த முயற்சி, இவ்வாண்டும் சிங்கப்பூர்க் காற்பந்துச் சங்கத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆர்சனல், பிரைட்டன் குழுக்களைச் சேர்ந்த பயிற்றுவிப்பாளர்கள், சிங்கப்பூர் அடித்தளப் பயிற்றுவிப்பாளர்களுடன் தங்களது அனுபவத்தையும் முக்கிய நடைமுறைத் திறன்களையும் பகிர்ந்துகொண்டனர்.

அதன்வழி, அடித்தளப் பயிற்றுநர்களால் தங்கள் விளையாட்டாளர்களுக்கு மேலும் சிறப்பான பயிற்சிகளை வடிவமைக்க முடியுமென ‘பிரிமியர் லீக்’ அமைப்பு நம்புகிறது.

காற்பந்தாட்டத்தில் சிறுவர்கள் சிறந்து விளங்க வாய்ப்புகளும் நல்ல வழிகாட்டிகளும் அவசியமென நம்புகிறார் செல்சி குழுவின் முன்னாள் வீரர் ஜோ கோல்.
காற்பந்தாட்டத்தில் சிறுவர்கள் சிறந்து விளங்க வாய்ப்புகளும் நல்ல வழிகாட்டிகளும் அவசியமென நம்புகிறார் செல்சி குழுவின் முன்னாள் வீரர் ஜோ கோல். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

“எந்த ஒரு கலையிலும் சிறந்து விளங்க பயிற்சியும் தொடர்ச்சியும் முக்கியம். ஆகையால், சிறுவர்கள் அதிகம் விளையாட வாய்ப்புகளை உருவாக்குவது அவசியம். அதே வேளையில், அவர்களை வழிநடத்த தரமான பயிற்றுவிப்பாளர்களை உருவாக்குவதும் அவசியம். அதற்கு இம்முயற்சி நிச்சயம் கைகொடுக்கிறது,” என்று கூறினார் கோல்.

பயிலரங்கில் பங்கேற்ற பயிற்றுவிப்பாளர்களில் ஒருவரான ராஜகோபால் சுப்பிரமணியம், மூத்த பயிற்றுவிப்பாளர்களிடமிருந்து கற்கும் வாய்ப்புக் கிடைத்ததை எண்ணி நன்றி கூறினார்.

“நான் காற்பந்துப் பயிற்சியளிக்கத் தொடங்கி நான்கு ஆண்டுகளே ஆகின்றன. அதற்குள் எனக்கு இத்தகைய வாய்ப்புக் கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. தொடர்ந்து என் திறன்களை மேம்படுத்திக்கொள்வதுடன் சிறுவர்களுக்கும் உதவ முயல்வேன்,” என்றார் அவர்.

இனிவரும் காலங்களில் இத்தகைய பல்வேறு முயற்சிகள் சிங்கப்பூரில் தொடருமென உறுதியளித்தது ‘பிரிமியர் லீக்’ அமைப்பு.

குறிப்புச் சொற்கள்