உலகக் கிண்ணக் காற்பந்துத் திருவிழா தொடங்கிவிட்டதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
இவ்வாண்டு கனடா, மெக்சிகோ அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகள் இணைந்து உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளை நடத்துகின்றன. மேலும், இந்த முறை அணிகளின் எண்ணிக்கை 48ஆக உயர்த்தப்பட்டுள்ளதால் போட்டிகள் இன்னும் விறுவிறுப்பாக அமையவுள்ளன.
ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகள் நடைபெறும். ரசிகர்களுக்கான உலகக் கிண்ணத் தொடரின் 104 ஆட்டங்களையும் சிங்கப்பூரில் பல்வேறு இடங்களில் காண இலவச நேரடி ஒளிபரப்புகளும் சிறப்புப் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சாங்கி விமான நிலையம்
சாங்கி விமான நிலைய மூன்றாம் முனையத்தின் பொதுப் பகுதியில் உள்ள ‘ST3PS’ தளத்தில் ஜூன் 12 முதல் ஜூலை 20 வரை உலகக் கிண்ணப் போட்டிகள் இலவசமாகத் திரையிடப்படும். அத்துடன், முனையம் 1 முதல் 4 வரை உள்ள இடைவழிப் பயண ஓய்வுத்தளங்களிலும் (டிரான்சிட் லவுஞ்) போட்டிகளைக் கண்டு ரசிக்கலாம்.
சாஃப்ரா
சிங்கப்பூரில் உள்ள 7 சாஃப்ரா மன்றங்கள் பிரம்மாண்ட எல்இடி திரைகளில் உயர்தர ஒலியமைப்புடன் போட்டிகள் ஒளிபரப்பப்படவுள்ளன. அங்குச் செல்லும் ரசிகர்கள் விளையாட்டுப் போட்டிகளிலும் அதிர்ஷ்டக் குலுக்கிலும் பங்கேற்று பரிசுகளையும் தட்டிச் செல்லலாம்.
சமூக மன்றங்கள்
உள்ளூர் ரசிகர்களுக்காக 50க்கும் மேற்பட்ட சமூக மன்றங்கள், 5 ஆக்டிவ்எஸ்ஜி விளையாட்டு மன்றங்கள், தி காலாங் ஆகிய இடங்களில் போட்டிகள் திரையிடப்படும். ஜூன் 12 அதிகாலை 3 மணிக்கு நடக்கும் மெக்சிகோ - தென்னாப்பிரிக்கா இடையிலான தொடக்க ஆட்டத்தை மக்கள் கழகம் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. இறுதி நான்கு போட்டிகள் ‘காலாங் வேவ் மாலில்’ திரையிடப்படும்.
லாவ் பா சாட்
காற்பந்து போட்டிகளைச் சுவையான உணவுடன் ரசிக்க விரும்பும் ரசிகர்கள் ‘லாவ் பா சாட்’டிற்குச் (Lau Pa Sat) சென்று பார்க்கலாம். அங்குள்ள இரண்டு மாபெரும் எல்இடி திரைகளில் போட்டிகள் நாள்தோறும் ஒளிபரப்பப்படும்.மேலும், ‘ஒன் ராஃபிள்ஸ் கீ’ கார்டன் பிளாசாவிலும் அரையிறுதி, இறுதிப் போட்டிகள் திரையிடப்படும்.
மெக்டோனல்ட்ஸ் மெரைன் கோவ்
மெக்டோனல்ட்ஸ் சிறப்பு நிகழ்ச்சி ஜூலை 20 அதிகாலை 2 மணி முதல் 6 மணிவரை நடைபெறும். ஜூன் 30 அன்று மெக்டோனல்ட்ஸ் செயலியில் முன்பதிவு செய்யும் ரசிகர்களுக்கு இறுதிப் போட்டியின்போது இலவச உணவு வழங்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
வீட்டில் அமர்ந்து காற்பந்து பார்க்க விரும்பும் ரசிகர்களுக்காக மீடியாகார்ப் நிறுவனம் மொத்தம் 28 முக்கியப் போட்டிகளை ஒளிவழி 5, மீவாட்ச் வழியாக இலவசமாக நேரடி ஒளிபரப்புகிறது. ஒவ்வொரு பிரிவிலிருந்தும் இரு போட்டிகள், இரு அரையிறுதிப் போட்டிகள், மூன்றாம் இடத்திற்கான போட்டி, இறுதிப் போட்டி ஆகியவை இலவசமாக ஒளிபரப்பப்படும்.

