சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் 129வது கதைக்களம் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 2) மாலை 4 மணிக்கு சிங்கப்பூர்த் தேசிய நூலகத்தின் ஐந்தாவது தளத்தில் அமைந்துள்ள ‘இமேஜினேஷன்’ அறையில் நடைபெறவிருக்கிறது.
இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய மூன்று நாட்டு மக்களின் சமூக வாழ்க்கையை எதிரொலிப்பதோடு மட்டுமல்லாமல் எழுத்தாளரின் வாழ்க்கை அனுபவத்தையும் அவர் சந்தித்த சவால்களையும் எடுத்தியம்பும் வகையில் சொல்லப்பட்ட எழுத்தாளர் ஆதவன் சரவணபவனின் ‘குல்லமடை’ சிறுகதைத் தொகுப்பு பற்றிய கலந்துரையாடல் அங்கம் இடம்பெற இருக்கிறது.
பேச்சாளர் உமா சங்கர் நாராயணன் சிறுகதைத் தொகுப்பின் சிறப்புகளைக் கதைக்கள வாசகர்களோடு பகிர்ந்துகொள்ள இருக்கிறார். அதனைத் தொடர்ந்து நூலாசிரியருடன் இடம்பெறும் கலந்துரையாடல் அங்கத்தில் திரு தியாகராஜன் நடராஜன் பங்கேற்று கலந்துரையாடுகிறார்.
கதைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட போட்டிப் படைப்புகளைப் பற்றிய கலந்துரையாடலும் வெற்றியாளர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்படவிருக்கின்றன. எழுத்தாளர் கழகத்தின் இளையர் பிரிவு உறுப்பினர் செல்வி தன்மதி பன்னீர்செல்வம் இந்நிகழ்ச்சியை நெறிப்படுத்துகிறார்.
மார்ச் மாத நூல் அறிமுகப் போட்டிக்கு, சிங்கப்பூர் தேசிய நூலகத்திலுள்ள சிறுகதை, குறுநாவல் அல்லது நாவல் ஒன்றுக்கு 140 சொற்களுக்குள் நயம்பட நூலறிமுகத்தை எழுதி அனுப்ப வேண்டும். சிறந்த 4 நூலறிமுகங்களுக்கு ரொக்கப் பரிசுகள் காத்திருக்கின்றன.
மூன்று பிரிவுகளாக நடைபெறும் மார்ச் மாதச் சிறுகதைப் போட்டிக்கு எழுதுவதற்கான தொடக்க வரிகள்:
உயர்நிலைப் பள்ளி மாணவர் பிரிவு: 200 முதல் 300 சொற்களுக்குள் எழுத வேண்டும்.
‘விடாமல் மழை கொட்டிய அன்றுதான் நான் மறக்க முடியாத அந்தச் சம்பவம் நடந்தது’.
இளையர் பிரிவு: 300 முதல் 400 சொற்களுக்குள் எழுத வேண்டும்.
‘திறந்திருந்த கதவுகள் ஒவ்வொன்றும் நான் நெருங்கும்போது மூடிக்கொண்டன’.
பொதுப்பிரிவு: 400 முதல் 500 சொற்களுக்குள் எழுத வேண்டும்.
‘மௌனம் என்ற ஆயுதத்தை ஏந்தி இருப்பவரை எப்படிச் சமாதானப்படுத்துவது எனப் புரியவில்லை’.
படைப்புகளைக் கணினியில் அச்சிட்டு https://forms.gle/VdpmyEfdVas5wtMLA என்ற மின்னியல் படிவத்தின் வழியாக பிப்ரவரி 21க்குள் அனுப்பி வைக்கவும்.
மேல்விவரங்களுக்கு: https://www.singaporetamilwriters.com/16, பிரதீபா வீரபாண்டியன் - 81420220 / பிரேமா மகாலிங்கம் - 91696996

