குழந்தைகளை மகிழ்வித்த ஆண்டிறுதிக் கேளிக்கைச் சந்தை

2 mins read
6009b461-2cfa-4062-960c-ea6332f26097
கேன்பரா அடித்தள அமைப்புகளின் ஆலோசகரான டாக்டர் லிம் வீ கியாக்கும் (நடுவில்) ‘ஹோப் இனிஷியேட்டிவ் அலையன்ஸ்’ அமைப்பின் தலைவர் ரெவ் எசெக்கியேல் டானும் (இடது) கொம்லிங்க் பிளஸ் திட்டத்தின்கீழ் ஆதரவு பெற்றுவரும் குழந்தைகளுடன் நிகழ்ச்சியில் கலந்துரையாடினர். - படம்: சாவ்பாவ்
multi-img1 of 2

கேன்பரா, செம்பவாங் பகுதிகளில் வசிக்கும் குறைந்த வருமானமுள்ள குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளை மகிழ்விக்கும் நோக்குடன், ‘ஹோப் இனிஷியேட்டிவ் அலையன்ஸ்’ அமைப்பின் ஒரு பகுதியான ‘தி ஆல்ஃபபெட் புரொஜெக்ட்’ (டாப்) ஞாயிற்றுக்கிழமையன்று (டிசம்பர் 29) ஆண்டிறுதிச் சமூகக் கேளிக்கைச் சந்தை ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது.

கொம்லிங்க் பிளஸ் திட்டத்தின்கீழ் ஆதரவு பெற்றுவரும் குழந்தைகள், அவர்களது குடும்பத்தினர் உட்பட 500க்கும் மேற்பட்ட சமூக உறுப்பினர்கள் கேன்பரா சமூக மன்றத்தில் பிற்பகல் 3 மணி முதல் 6 மணி வரை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

கேன்பரா அடித்தள அமைப்புகளின் ஆலோசகரான டாக்டர் லிம் வீ கியாக் கேளிக்கைச் சந்தையின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

கொம்லிங்க் பிளஸ் திட்டத்தின் நிகழ்ச்சிகளில் தங்களின் பங்கேற்பு, கல்வி மேம்பாடு ஆகியவற்றின் அடிப்படையில், 300க்கும் மேற்பட்ட குழந்தைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த 30 மாணவர்களுக்குப் பரிசுப் பைகளையும் உதவித்தொகை விருதுகளையும் அவர் வழங்கினார்.

கேளிக்கைச் சந்தையில் இயந்திரவியல் போட்டி, குடும்ப விளையாட்டுகள், வெவ்வேறு மேடை நிகழ்ச்சிகள் முதலியவற்றுடன் சமூகப் பங்காளிகளின் நடவடிக்கைச் சாவடிகளும் இடம்பெற்றன.

மேலும், குறைந்த வருமானமுள்ள குடும்பங்களைச் சேர்ந்த 5 முதல் 12 வயதுவரை உள்ள குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு ஆதரவாக, டாப்கிட்ஸ் திட்டம் (Project TAPKids) என்ற புதிய முயற்சியும் நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வுக்குக்‌ குழந்தைகளைத் தயார்ப்படுத்துதல், அவர்களின் முயற்சிகளுக்கு வெகுமதி அளித்தல், குழந்தைகளின் கல்வியில் குடும்ப ஆதரவை ஊக்குவித்தல் ஆகியவற்றை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

“சமூக இயக்கத்தை ஊக்குவிக்க, குழந்தைகள் கல்வியில், குறிப்பாக தொடக்கப் பள்ளி இறுதித் தேர்வில் சிறப்பாகச் செயல்பட வேண்டும். டாப் திட்டத்தைச் சேர்ந்த பல குடும்பங்கள் இதையே மிகப் பெரிய சவாலாக கருதுகின்றன,” என்று ‘ஹோப் இனிஷியேட்டிவ் அலையன்ஸ்’ அமைப்பின் தலைவர் ரெவ் எசெக்கியேல் டான் கூறினார்.

“காற்பந்து விளையாட்டு அல்லது விலங்கியல் தோட்டத்திற்குச் சுற்றுலா செல்வது போன்ற வேடிக்கையான நடவடிக்கைகள் நிறைய குடும்பங்களைக்‌ கவர்ந்தாலும் பெற்றோருக்குரிய திட்டங்களும் சுகாதார முன்முயற்சிகளும் தேவைப்படுகின்றன. குறைந்த வருமானமுள்ள குடும்பங்களின் வாழ்க்கைக்கான அனைத்து அம்சங்களுக்கும் ஆதரவளிப்பதன்மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த விரும்புகிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

இந்தக் கேளிக்கைச் சந்தையில், ‘அலையன்ஸ் ஆஃப் டொமெஸ்டிக் எம்ப்ளாயீஸ் அவுட்ரீச்’ (ADEO) அமைப்பைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பணிப்பெண்களும், ‘சிட்டிலைஃப் சில்வர்’ குழுவைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட முதியவர்களும், மற்ற சமூகப் பங்காளிகளுடன் ‌தொண்டூழியர்களாகக் கலந்துகொண்டனர்.

“பயனாளிகள் ஏன் தொண்டூழியர்களாக மாறக்கூடாது என்று நாங்கள் நினைத்தோம். கொவிட்-19 தொற்றுப் பரவலின்போது, ​​எங்கள் அமைப்பு வெளிநாட்டுப் பணிப்பெண்களுக்குத் தேவையான ஆதரவை வழங்கியது. இப்போது அவர்கள் மற்றவர்களுக்குத் தங்களால் முடிந்ததைத் திருப்பிக் கொடுத்து உதவும் நிலையில் இருக்கிறார்கள். தாங்கள் வேலை செய்யும் இடங்களைத் தாண்டி சமூகத்திற்குப் பங்களிப்பதன்மூலம் சிங்கப்பூர் நம் நாடு என்ற உணர்வை அடைவர் என்று நம்புகிறோம்,” என்றார் ரெவ் எசேக்கியேல்.

குறிப்புச் சொற்கள்