எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் டான் டோக் செங் மருத்துவமனையின் துணைத் தாதியர் தொண்டூழியத் திட்டத்தில் சேர்ந்தார் 17 வயது நார்த்லைட் பள்ளி மாணவர் ஷர்மா ஷா வேல் சுபாகர்.
எதிர்காலத்தில் விளையாட்டு சிகிச்சையாளராக விரும்பும் அவர், சமூகப் பராமரிப்பில் தொழில்நுட்பக் கல்விக் கழகத் திறன் சான்றிதழ் பெற 10 வார செய்முறைப் பயிற்சியை நிறைவு செய்துள்ளார்.
“சமூகப் பராமரிப்பும் ஏறக்குறைய அப்படித்தான். ஆதரவு தேவைப்படுபவர்களுக்குக் கூடுதல் உதவிக்கரம் நீட்டுவது நிறைவு அளித்தது,” என்று பயிற்சி குறித்து அவர் தெரிவித்தார்.
தொடக்கத்தில் சவால்மிக்க நோயாளிகளைக் கையாள பயந்தாலும், சக தாதியர்களின் உதவியால் ஷர்மா தன்னம்பிக்கை பெற்றார்.
“நான் இங்கு கற்கும் பராமரிப்புத் திறன்கள் நோயாளிகளுக்கு உதவுவதற்கு மட்டுமன்று, வீட்டில் உள்ள என் அன்புக்குரியவர்களுக்கும் பயன்படுகின்றன. அதனால், இது எனக்கும் பேருதவியாக இருக்கிறது,” என்று ஷர்மா குறிப்பிட்டார்.
ஷர்மாவின் முயற்சியைக் கவனித்த மூத்த பராமரிப்பு ஆதரவு உதவியாளர் நித்தியா பாண்டியன், “கற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவரது ஆர்வம் என்னை மகிழ்வித்தது,” என்று சொன்னார்.
வாழ்நாள் கற்றலை ஊக்குவிக்கும் பயிற்சித் திட்டம்
நார்த்லைட் பள்ளி, டான் டோக் செங் மருத்துவமனை, பிராம் நிலையம் (Brahm Centre) ஆகியவை இணைந்து இத்திட்டத்தை நடத்துகின்றன.
ஷர்மா உட்பட நார்த்லைட் பள்ளி மாணவர்கள் 15 பேர் செய்முறைப் பயிற்சியை முடித்துள்ளனர்.
இத்திட்டத்தில், உணவூட்டல், அணையாடை மாற்றுதல் போன்ற அன்றாடப் பராமரிப்புப் பணிகளை மாணவர்களுக்குச் சொல்லித் தரப்படுவதுடன் பயிலரங்குகளும் இடம்பெறுகின்றன.
படிப்பை முடித்ததும் மாணவர்கள் முழுநேர ஊழியர்களாக இணையவும் வாய்ப்புள்ளது.
நார்த்லைட் பள்ளி மாணவர்கள் பற்றிய தவறான எண்ணங்களைக் களைந்து, அவர்களை வாழ்நாள் கற்றலுக்கும் வேலைவாய்ப்புக்கும் தயார்ப்படுத்துவதே திட்டத்தின் நோக்கம் என்று கூறினார் பள்ளியின் துறைத் தலைவர் பீட்டர்ஸ் டான்.

