தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தன்னம்பிக்கை பாதையில் ஒரு பயணம்

3 mins read
b0494ea9-a580-42a1-82be-e4fddc3b4af4
தன்னம்பிக்கை எனும் பாதையில் ஓடும் ரயன். - படம்: கசான்ட்ரா மேரி விக்டர்

அமைதியான ஆளுமை, உள்முக சிந்தனைக் கொண்டவர் என்று முதல் முறையாக 17 வயது ரயன் சிங்கைப் பார்க்கும்போது ஒருவருக்குத் தோன்றும்.

ஆனால், அந்த இளையருக்குள் ஒளிந்திருக்கும் திறமை நம்மில் பலரை வியக்க வைக்கும்.

ரயனுக்கு இரண்டு வயதில் மதியிறுக்கம் கண்டறியப்பட்டது.

அவரைப் போல மதியிறுக்கம் உள்ளோர் பலர் செய்யத் துணியாத செயலை இந்த இளம் வயதில் ரயன் செய்ய இருக்கிறார்.

இவ்வாண்டு டிசம்பர் மாதத்தில் தமது முதல் நெடுந்தொலைவு ஓட்டத்தில் கலந்துகொள்ள துடிப்புடன் காத்துக்கொண்டிருக்கிறார் அவர்.

மதியிறுக்கம் இருப்பதால் குழந்தைப் பருவத்திலிருந்தே பல சவால்களைச் சந்தித்து, அவற்றை எதிர்த்துப் போராடிய அவர், ஓட்டத்தில் தமது ஆர்வத்தை வளர்த்துக்கொண்டார்.

அவரின் கதை ஒருவரின் அமைதியான வலிமையைப் பிரதிபலிக்கிறது.

10 கிலோமீட்டர் மெதுவோட்டம் ஓடுவது, உடற்பயிற்சி செய்து உடலை நெடுந்தொலைவு ஓட்டத்துக்குத் தயார் படுத்திக்கொள்வது என ரயனின் தினசரி வாழ்க்கை செல்கிறது.

இதற்கெல்லாம் முதுகெலும்பாக இருப்பவர் ரயனின் தாயார் கசான்ட்ரா மேரி விக்டர், 54.

“ரயனுக்கு மதியிறுக்கம் உள்ளது என்று தெரிந்தபோது என் உலகம் உடைந்தது. இப்போது நான் உயிரோடு இருப்பதற்கான காரணமே என் மகன் தான்,” என்று உணர்ச்சிபொங்க சொன்னார் கசான்ட்ரா.

கசான்ட்ரா ஒற்றைப் பெற்றோர். ரயன் மூன்றரை வயதில் இருந்தபோது கசான்ட்ராவின் இல்லற வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

ரயன், கசான்ட்ராவின் இளைய மகன். ரயனுக்கு மூத்த சகோதரர் ஒருவர் இருக்கிறார்.

ஓவியம் வரைவது, சதுரங்கம் விளையாடுவது ஆகியவற்றிலும் ரயன் திறமைசாலி.

இளம் வயதில் அவர் உடற்பருமனாக இருந்தார். மகனின் உடல் எடையை கண்டு ஐந்து வயதிலேயே ரயனை மெதுவோட்ட பயிற்சிக்கு அழைத்துச் சென்றார் கசான்ட்ரா.

“தொடக்கத்தில் ரயன் ஓடுவதில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. நான் அவனை வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்ல வேண்டிருந்தது,” என்றார் கசான்ட்ரா.

ரயனுக்கு இளம் வயதிலிருந்து தற்போது வரை ஊக்கம் தருவது அவரது தாயார் தான்.

“வாழ்க்கை எவ்வளவு பரபரப்பாக இருந்தாலும் ரயனுடன் நான் தவறாமல் மெதுவோட்டப் பயிற்சிக்குச் சென்றுவிடுவேன்,” என்று புன்முறுவலுடன் கூறினார் அவர்.

வாழ்க்கை எவ்வளவு பரபரப்பாக இருந்தாலும் ரயனுடன் தவறாமல் பயிற்சிக்குச் சென்றுவிடும் கசான்ட்ரா.
வாழ்க்கை எவ்வளவு பரபரப்பாக இருந்தாலும் ரயனுடன் தவறாமல் பயிற்சிக்குச் சென்றுவிடும் கசான்ட்ரா. - படம்: கசான்ட்ரா மேரி விக்டர்

54 வயதிலும் மிடுக்கான தோற்றம் கொண்டுள்ள கசான்ட்ரா, அனைத்துலகப் பள்ளியில் பணிபுரிகிறார்.

ஸ்டாண்டர்ட் சார்ட்டர் நெடுந்தொலைவு ஓட்டத்தில் ரயன் தனியாக கலந்துகொள்கிறார்.

“ரயன் ஓட்டத்தில் கலந்துகொள்வதாக என்னிடம் சொன்னபோது எனக்கு பயமாக இருந்தது. என்னால் கலந்துகொள்ள முடியாமல் போனாலும் அவன் தனியாக பங்குகொள்ளத் தயாராக இருந்தான். நான் திகைத்துப் போனேன்,” என்றார் அவர்.

ஏழு வயது வரை பேசுவதற்குச் சிரமப்பட்ட ரயன் அதன் பிறகு சரளமாகப் பேசினார்.

மகனைச் சிறப்புத் தேவையுடையவர்களுக்கான பள்ளியில் சேர்க்காத கசான்ட்ரா, பள்ளி பருவத்தில் ரயனை மாணவர்கள் பலர் கேலி செய்ததாகச் சொன்னார்.

“ரயன் ஒவ்வொரு முறையும் கேலி செய்யப்பட்டு வீட்டுக்கு வரும்போது என் மனம் குமுறும். இன்று அவன் பல இளையர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறான்,” என்று பெருமிதத்துடன் சொன்னார் கசான்ட்ரா.

“என் தம்பியை நினைத்தால் பெருமையாக உள்ளது. இருவரும் உடற்பயிற்சி செய்யும்போது போட்டிபோட்டு கொள்வோம். ஆனால், மெதுவோட்டத்தில் என்னால் தம்பியை வெல்ல முடியாது,” என்று ரயனின் அண்ணன் ஷேன் சிங், 18, கூறினார்.

குறிப்புச் சொற்கள்