செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்துவரும் உலகிற்கு ஈடுகொடுத்து, மாணவர்களால் புத்தாக்கத் தீர்வுகளை உருவாக்கமுடியுமா?
முடியும் என்று நிரூபித்துள்ளது சிங்கப்பூர்த் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகம் (எஸ்யுடிடி) ஆண்டுதோறும் நடத்திவரும் ‘இன்ஸ்பயர்கோன்’ கண்காட்சி.
சென்ற மாதம் (ஏப்ரல்) 17ஆம் தேதி, அந்தப் பல்கலைக்கழகத்தில் கண்காட்சி நடைபெற்றது. அதில் ‘எஸ்யுடிடி’ இந்நாள், முன்னாள் மாணவர்களின் தொழில்முனைப்புத் திறனை ஊக்குவிக்கும் புதிய ‘டைவ்’ திட்டம் அறிவிக்கப்பட்டது. அதற்கென ‘எஸ்யுடிடி’, $35 மில்லியன் வெள்ளி நிதியை முதலீடு செய்துள்ளது.
கண்காட்சியில் சிறப்பாகச் செய்த மாணவ அணிகளுக்குக் கலாசார, சமூக, இளையர்துறைத் தற்காலிக அமைச்சரும் கல்விக்கான மூத்த துணையமைச்சருமான திரு டேவிட் நியோ பரிசுகளை வழங்கினார்.
நீடித்த நிலைத்தன்மைப் பிரிவில் முதல் பரிசை வென்றது ‘ஏஆர்டிஇ’ எனப்படும் தானியக்க இயந்திரமனிதக் கருவி. அந்த இயந்திரமனிதக் கருவி, பணிக்காலத்தின் நிறைவை நாடியபோது அதை மாற்றி அதற்குப் புத்துயிர் அளித்தனர் அணியின் மாணவர்கள். “விமானம் நிறுத்தப்படும் இடத்தில், பொறியாளர்கள் ஏதேனும் கருவிகளை மறந்து வைத்துவிட்டு வந்தால் அவற்றை இந்த இயந்திரமனிதக் கருவி எடுத்துவரும்,” என்றார் மிதுன்பாலாஜி மகேஸ்வரி கணேஷ்குமார்.
‘டிசைன்-ஏஐ’ எனும் வடிவமைப்பு-செயற்கை நுண்ணறிவுப் பிரிவில், மாலுமி ஒருவர், ஏணியைப் பயன்படுத்திப் படகிலிருந்து கப்பலில் ஏறும்போது பாதுகாப்பை அதிகரிப்பதற்கான தீர்வு, வெற்றிகண்டது.
‘எஸ்யுடிடி’ உருவாக்கியுள்ள இயந்திரமனிதக் கருவிகளான ‘டிரேகன்ஃப்ளை’, ‘ஓஸ்பிரே’ ஆகிய இரண்டும், உண்மையான உலகுடன் ஒன்றிணையும் ‘ஏஐ’ தீர்வுகளைக் காட்சிப்படுத்தின.
புற ஊதா ஒளியாலும் ரசாயனத்தாலும் கொசுக்களை ஈர்த்துப் பிடிக்கும் ‘டிரேகன்ஃப்ளை’ கருவிகள், தற்போது ‘கிம் யூ இன்டகிரேடட்’ நிறுவனத்தின் துணையுடன் கட்டுமானத் தளங்களில் பயன்படுத்தப்படுகின்றன. ‘ஓஸ்பிரே’, நகர்ப்புறத்தில் சோதிக்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
“எவ்வாறு ஓர் இயந்திரமனிதக் கருவியால் ஏஐ மூலம் சுற்றுச்சூழலிலுள்ள ஆபத்துகளைக் கண்டறிய முடிகிறது என்பதை இக்கண்காட்சியில் காட்டுகிறோம்,” என்றார் ஆய்வாளர் அபுரூப்.
உதாரணத்துக்கு, ஒரு ‘டிரேகன்ஃப்ளை’ சிக்கலில் இருக்கக்கூடும் எனத் தரவுகள் காட்டும்போது, அங்கு மற்றொரு ‘டிரேகன்ஃப்ளை’ தானாகச் சென்று, ‘ஏஐ’ உதவியுடன் அதை உறுதிப்படுத்தி, எத்தகைய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும்.
‘ஓஸ்பிரே’ என்பது ரசாயனக் கசிவுகளை அகற்றக்கூடிய இயந்திரமனிதக் கருவி.
“தற்போது, பொறியாளர்கள் நேரடியாகச் செயல்படுவதால் ரசாயனத்தை எதிர்கொள்ள வேண்டிய ஆபத்து உள்ளது. நீரைத் தெளித்தல், தேய்த்தல், அதிக வேகத்துடன் கழுவுதல், உறிஞ்சுதல் ஆகிய நான்கு செயல்களையும் ஒரே இயந்திரமனிதக் கருவியால் பாதுகாப்பாகச் செய்யமுடியும்,” என்றார் மூத்த ஆய்வாளர் மு.ஷமீர் அகமது.
எஸ்யுடிடி இறுதியாண்டு மாணவர்களின் திட்டங்களும் காட்சிப்படுத்தப்பட்டன. குறிப்பிட்ட வேலையைத் துல்லியமாகச் செய்ய இயந்திரக் கைக்கு இறுதியாண்டு மாணவர்கள் முத்து ராமசாமியும் கார்த்தியும் பயிற்சியளித்தனர்.
“நாங்கள் இதன்மூலம் திரட்டும் தரவுகளைக் கொண்டு, ‘ஏஐ’ மாதிரியை உருவாக்கினோம்; இனி வரப்போகும் மற்ற இயந்திரக் கைகளுக்குப் பயிற்சியளிக்கத் திட்டமிட்டுள்ளோம்,” என்றார் கார்த்தி.
“நிபுணர்களை நேரடியாகச் சந்தித்துக் கலந்துரையாடி இத்தகைய தீர்வுகளை முன்மொழிந்தது நல்ல அனுபவமாக இருந்தது,” என்றார் ‘எஸ்யுடிடி’ இறுதியாண்டு மாணவி திருநாவுக்கரசு ஹர்ஷினி.

