பேச்சு தாமதத்தால் ஐந்து வயதுக்குப் பின்னரே பேசினாலும், விரைவாகவே பாடக் கற்றுக்கொண்டு மேடைகளில் மின்னி வருகிறார் மக்கன்சியா கேப்ரியெல்லா, 11.
பார்வைக் குறைபாடு, வலதுபக்க செவித்திறன் குறைபாடு, வளர்ச்சித் தாமதம் எனத் தனக்கிருக்கும் எல்லா உடல்நலப் பிரச்சினைகளையும் புறந்தள்ளி, பாடுவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார் மக்கன்சியா.
“ஐந்து வயதில் பேசத் தொடங்கியவுடன் குழந்தைகளுக்கான பாடல்கள்மீது ஆர்வம் ஏற்பட்டு பாடத் தொடங்கினாள். அதனைக் கண்டு, முறையாக இசைப் பயிற்சியளிக்கத் தொடங்கினோம். விரைவாகக் கற்று, மேடையேறுவாள் என எதிர்பார்க்கவில்லை. மிக்க மகிழ்ச்சி,” என்றார் மக்கன்சியாவின் தாயார் ஹெல்கா பல்லாரினா, 45.
“பிறர் தம்மைப் பாராட்டும்போதும் மேடையில் பாடியபின் கிடைக்கும் கைத்தட்டல், ஆர்ப்பரிப்பைக் கேட்கும்போதும் கிடைக்கும் உற்சாகத்துக்கு அளவில்லை,” என்ற மக்கன்சியா, அதுவே தடைகளைத் தாண்டி பயிற்சி மேற்கொள்ள தம்மை ஊக்குவிப்பதாகச் சொன்னார்.
இவ்வாண்டு அறியப்படாத நாயகர்கள் விருதுகளில் ‘மனிதநேய நெஞ்சம்’ விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட இவர், தமது இசை நிகழ்ச்சிகள்மூலம் சமூகப் பணிகளுக்கு நிதி திரட்டுவதுடன் தம்மைப் போன்றோருக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டும் எனவும் விரும்புகிறார்.
ஐந்து வயதில் தனியாக மேடைக் கச்சேரி நடத்திய இவர், ‘பர்ப்பிள் பரேட்’, ‘சிங் ஃபார் ஹோப்’, தேசிய தினம் எனப் பல மேடைகளில் பாடியுள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் ஏறத்தாழ 10 விருதுகளை வென்றுள்ள இவர், குறைபாடுகளைச் சுற்றியுள்ள கண்ணோட்டங்களை மாற்றவும் விரும்புகிறார்.
பார்வைக் குறைபாடு இருந்தாலும், ‘பிரைல்’ முறை, உணர்தல் மூலம் பாடல் வரிகளைக் கற்கும் இவர், ஒரு பாடலைச் சரியாகப் பாடவேண்டும் என்பதற்காகத் தமது செவித்திறன் குறைபாட்டையும் தாண்டி மீண்டும் மீண்டும் பாடல்களைக் கேட்டுப் பயிற்சி செய்வதாகச் சொன்னார். அன்றாடம் ஒரு மணி நேரமாவது பாடுவதை இவர் வழக்கமாகக் கொண்டுள்ளார்.
“ஆங்கிலத்தில் பாடினாலும், தமிழில் பாடுவது மனத்துக்கு நெருக்கமானது,” என்று சொன்ன மக்கன்சியா, ‘ஆட்டோகிராஃப்’ திரைப்படத்தில் வரும் ‘ஒவ்வொரு பூக்களுமே’ தமக்குப் பிடித்த பாடல் என்றார்.
தொடர்புடைய செய்திகள்
வளர்ந்து ஒரு பாடகராக வேண்டும் என்பதையும் தனி இசைக்குழுவை நிறுவ வேண்டும் என்பதையும் இலக்காகக் கொண்டுள்ளார் மக்கன்சியா.