எல்லையற்ற அமைதிக்கான இளையரின் குரல்

எல்லையற்ற அமைதிக்கான இளையரின் குரல்

அமைதி, சமூக ஒற்றுமை குறித்து இளையர்கள் கருத்து
படம்: ஆசியான் இளையர் அமைப்பு

20 Oct 2026 - 7:29 am

2 mins read

ஆழ்ந்த கலந்துரையாடல் அமைதிக்கு அடித்தளம் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் ஆசியான் வட்டார நாடுகளைச் சேர்ந்த இளையர்கள் ஒன்றுகூடிப் பன்னாட்டு விவகாரங்களை ஆய்ந்தனர்.

சிங்கப்பூர் ‘ரோசஸ் ஆஃப் பீஸ்’ அமைப்பு, ஆசியான் இளையர் அமைப்பின் சிங்கப்பூர் கிளையுடன் இணைந்து நடத்திய ‘பீஸ் பியாண்ட் பார்டர்ஸ்’ கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பல பின்னணிகளைக் கொண்ட இளையர்கள் கலந்துகொண்டனர். அன்றாட வாழ்வில் அமைதி, சமூக ஒற்றுமை, கல்வி உள்ளிட்ட தலைப்புகள் நிகழ்ச்சியில் அங்கம் வகித்தன.

ஏறத்தாழ 40 பேர் பங்கேற்ற இந்நிகழ்ச்சி, கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்றது. நிகழ்ச்சியில் இளையர்கள் தங்களது அனுபவக் கதைகளை ஒருவரோடு ஒருவர் பகிர்ந்தனர். துணிவுடன் பேசுவது மட்டுமன்றி, பிறர் சொல்வதைச் செவிசாய்க்கவும் பழக்கப்படாத பண்பாடுகளைச் சேர்ந்தவர்களைப் புரிந்துகொள்ளவும் இந்நிகழ்ச்சி வாய்ப்பு நல்கியது.

இளையர் தங்களுக்குள் இருக்கும் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளவும் ஒருவரையொருவர் புரிந்துகொள்ளவும் இந்த நிகழ்ச்சி தளம் ஏற்படுத்தித் தந்ததாக பங்கேற்றவர்கள் கூறினர்.

சமூகப் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள எல்லைகளைத் தாண்டிச் செயல்பட வேண்டும் என்ற எண்ணங்களை இளையர்கள் பகிர்ந்தனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இளையர்கள் தங்களின் எண்ணங்களையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டனர். அகதிகளோடு பேசும் அரிய வாய்ப்பை இந்நிகழ்ச்சி வழியாகப் பெற்றதை எண்ணி மகிழ்வதாக சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகத்தின் இரண்டாமாண்டு கணக்கியல் மாணவர் துரை மாணிக்கம் நிஷாந்த், 21, கூறினார்.

“அகதிகள், பல பின்னணி கொண்ட மனிதர்களின் கடினமான சூழ்நிலைகளை நாம் நேரடியாகச் சந்திக்காமல் இருக்கலாம். ஆனால், அவர்களோடு பேசுவதன் மூலம் அவர்களை நாம் நன்றாகப் புரிந்துகொள்ள முடியும்,” என்று அவர் கூறினார்.

இந்தக் கருத்தை ஆதரித்த சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் இறுதியாண்டு மாணவர் கிஷன் தேவராஜ், 26, மற்றவர்களின் எண்ணங்களையும் அனுபவங்களையும் பரந்த மனப்பான்மையோடு கேட்டுத் தெரிந்துகொள்ளும்போது உறவாடுவது எளிதாவதாகக் கூறினார்.

ஒரே சமூகத்தில் வாழ்பவர்களிடையே கூட வேறுபட்ட அனுபவங்கள் இருக்கலாம் என்று கூறிய அவர், அந்த வேறுபாடுகளைப் புரிந்துகொண்டு மாற்றங்களை ஏற்படுத்த இளையர்கள் அனைவரும் ஒன்றுசேர வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

“நாங்கள் எப்போதும் படிப்பு, தேர்வு என்று பரபரப்பாகவே இருக்கிறோம். நம்மைச் சுற்றியிருக்கும் சமூகப் பிரச்சினைகளைப் பற்றி யோசிக்க நேரம் கிடைப்பதில்லை,” என்று தொழில்நுட்பத் துறை ஊழியர் கீர்த்தனா கிஷ்யனி, 24, கூறினார்.

மற்ற நாடுகளைச் சேர்ந்த இளையர்களின் அனுபவங்களைக் கேட்கும்போது, நாம் தனியாக இல்லை என்பதும் யாரையும் ஒதுக்கி வைக்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதும் புரிகிறது என்று ஆசியான் இளையர் அமைப்பின் கூட்டாண்மை அதிகாரி நாதிரா ஃபடீன் சபீல், 23, தெரிவித்தார்.

“நமது சொந்த வட்டத்திற்குள்ளேயே இருந்துவிடாமல், மற்ற மனிதர்களின் பிரச்சினைகளைக் கேட்டுத் தெரிந்துகொள்ளும் குணம் வேண்டும் என்பதை அறிந்தேன். அன்றாடப் பேச்சுகளில் காட்டும் அன்பும் புரிதலும்தான் அமைதிக்கு வழிவகுக்கும்,” என்று நாதிரா கூறினார்.

குறிப்புச் சொற்கள்